கனடா நாட்டில் ஹாலோவீன்

பயணக் கட்டுரை
கனடா நாட்டில் ஹாலோவீன்

ஹாலோவீன் உலகெங்கும், இந்தியா உள்பட, அக்டோபர் மாதம் 31ஆம் தேதி இரவு கேளிக்கைகள், களியாட்டங்கள் நிறைந்த விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

இதனுடைய ஆரம்பம் சற்றேறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஸ்காட்லாந்து, வேல்ஸ், அயர்லாந்து இடங்களில் வசித்த செல்டிக்ஸ் இனத்தவர் கொண்டாடிய ‘சம்ஹைன்’ என்ற திருவிழா என்று கூறுவர்.

செல்டிக்ஸ் இனத்தவரின் புது வருடம் நவம்பர் ஒன்றாம் தேதி. கோடைக் காலம் முடிந்து குளிர் காலம் ஆரம்பிக்கும் தருணம். புது வருடத்தின் முதல் நாள் இரவில் முன்னோர்கள் மற்றும் இறந்த உறவினர்களின் ஆவி பூவுலகத்துக்கு வருகிறார்கள் என்பது அவர்கள் நம்பிக்கை. ஆனால், வருகின்ற நல்ல ஆவிகளுடன், தீய ஆவிகளும் உலகுக்கு வரும் என்பதால், அந்த தீய ஆவிகளை ஏமாற்றுவதற்காக முகமூடி அணிந்து வெளியே செல்வர். முகமூடியணிந்து செல்பவரை இவரும் நம்மைப் போன்ற ஆவிதான் என்று எண்ணி, தீய ஆவிகள் விட்டுச் சென்றுவிடும் என்பது அவர்கள் நம்பிக்கை.

இந்த நாளில் பொது இடங்களில் பெரிய அளவில் நெருப்பு மூட்டுதல், புனிதர்கள், தேவதைகள், பிசாசுகள் வேடமிட்டு அணிவகுப்பு நடத்துதல் ஆகியவை முக்கிய அம்சங்கள். மேலும் ஆவிகள் வீட்டினுள் நுழையாமல் இருக்க வீட்டுக்கு வெளியே ஆவிகளுக்காக உணவை வைத்திருப்பர். இது ஆவிகளுக்குத் திருப்தியளிக்கும் என்பது நம்பிக்கை.

உலகில் பல நாடுகளிலும், சமயங்களிலும் நம்மைப் பிரிந்து சென்ற முன்னோர்கள் வருடத்துக்கு ஒருமுறை நம்மைப் பார்க்க வருகிறார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

இந்துக்களைப் பொருத்த வரை புரட்டாசி மாதப் பௌர்ணமிக்கு அடுத்த நாள் முதல் அமாவாசை வரை உள்ள பதினைந்து நாட்களை மாளய பட்சம் என்று கூறுகிறோம். அந்தக் கால கட்டத்தில் முன்னோர்கள் மற்றும் பிரிந்த உறவினர் பூவுலகம் வருவதாகக் கூறுவர். அந்தப் பித்ருக்களை மகிழ்விக்க தர்ப்பணம், புனித நீர் நிலைகளில் குளிப்பது, உணவுப் படையல் செய்வது வழக்கம். 

கிறித்துவர்கள் அனைத்து ஆன்மாக்களின் நாள் என்று கொண்டாடுகிறார்கள்.

இத்தாலியில் இந்த நாளை ‘ஒக்னிசான்டி’ என்கின்றனர். இந்த நாளில் மறைந்த உறவினர்களின் கல்லறையை அழகுபடுத்தி, அந்தக் கல்லறையில் ஆவிகளுக்கு உணவை வைக்கின்றனர்.

மெக்சிகோ நாட்டில் இறந்தவர்களை நினைவு கூறும் இந்த நாளை ‘இறந்த நாள்’ என்று பெயரிட்டு கொண்டாடு கின்றனர். வேடமணிந்த அலங்கார அணிவகுப்பு நடைபெறும். குடும்பத்துடன் உறவினர் கல்லறைக்குச் சுற்றுலா செல்வர்.

குவாத்தமாலாவில் கல்லறையில் பெரிய அளவில் வண்ணக் காத்தாடிகள் பறக்கவிட்டு இந்த நாளைக் கொண்டாடுவர்.

தற்போது ஹாலோவீன் ஒரு சமயத்தையோ, நாட்டையோ சார்ந்ததாக இல்லாமல் எல்லோருக்கும் பொதுவான ஒரு நாளாக உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. முக்கியமாக குழந்தைகள் தங்களுக்குப் பிடித்த சூப்பர் ஹீரோ உடையணிந்து மற்றவர்களின் வீட்டுக்குச் சென்று “தந்திரமா? விருந்தா?” என்று கேட்டு அவர்கள் அளிக்கும் சாக்லெட், மிட்டாய், உணவுப் பொருட்களை வாங்கி வருவர். குழந்தைகளுடன், பெரியவர்களும் மாறுவேடம் அணிந்து செல்வது உண்டு.

கனடாவில் இரண்டு மாதங்களுக்கு முன்பே ஹாலோவீனுக்குத் தேவையான பொருட்களின் விற்பனை தொடங்கிவிடும். முக்கியமாக சிறுவர்களுக்கென்று மாறுவேட உடைகள். அதிகமாக ஸ்பைடர் மேன், சூப்பர் மேன், காவல் அதிகாரி, தீயணைப்பு அதிகாரி, மந்திரவாதி என்று விதவிதமான வகைகள். பழங்கள், காய்கறிகள் போன்ற உடைகளும் உண்டு. ஹாலோவீனுக்காக வீட்டை அலங்காரம் செய்வதற்கு ஒளிரும் விளக்குகள், சிமிட்டும் விளக்குகள், காற்றடித்து பெரிதுபடுத்தும் தன்மை கொண்ட உருவங்கள், பறக்கும் வாகனம், பூனை, நாய், பாம்பு, டிராகன் உருவங்கள் என்று பல வகையானவை கொட்டிக்கிடக்கும்.

ஹாலோவீன் அன்று பள்ளிகளில் மாணவர்கள் அணிவகுப்பு நடைபெறும். அதனால் மாணவர்களை அவர்களுக்குப் பிடித்த மாறுவேட உடையணிந்து வரச் சொல்கிறார்கள். ஆனால், கட்டாயப் படுத்துவதில்லை. அணிவகுப்பு முடிந்து குழந்தைகளுக்கு உணவு வகைகள், சாக்லெட், ஜூஸ் கொடுப்பது உண்டு.

கடந்த ஹாலோவீன் தினத்தன்று நாங்கள் இருந்தது ஒன்டாரியோ மாகாணத்தில் மிசிசாகா என்ற நகரத்தில். இங்கு சில தெருக்களில் அநேக வீடுகளில் கண்ணைக் கவரும் அதே சமயம் பயமுறுத்தும் விதமாக அலங்காரங்கள் செய்து வைத்திருந்தார்கள். பேய், பிசாசு, எலும்புக் கூடு, மந்திரவாதி, பயமுறுத்தும் பூனை, டிராகன், பறக்கும் வண்டிகள் என்று வித விதமான பிரமிப்பூட்டும் உருவங்கள் இருந்தன. பல இடங்களிலிருந்தும் மக்கள் இந்த அலங்காரங்களைக் காண வந்த வண்ணமிருந்தனர்.

இந்த நகரில் இரண்டு இடங்களில் ஹாலோவீன் ஒளிக்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் இருபது இலட்சத்துக்கும் அதிகமான ஒளிக்கற்றைகள் கொண்டு விதவிதமான ஹாலோவீன் உருவங்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன. இவற்றை மோட்டார் வாகனத்தில் அமர்ந்தபடியே பார்த்துச் செல்ல வேண்டும். முழுவதும் பார்த்து வெளியேறுவதற்கு நாற்பது நிமிடங்கள் பிடித்தது.

ஹாலோவீன் சமயத்தில் மாறுவேட ஆடைகள், சாக்லெட், மிட்டாய் போன்ற தின்பண்டங்கள், வீடுகளை அலங்கரிக்கும் வண்ண விளக்குகள், காற்றடைத்து பெரியதாக உருவாக்கப்படும் உருவங்கள், வாழ்த்து அட்டைகள் ஆகியவற்றின் விற்பனை மட்டும் சுமாராக பதினோரு பில்லியன் கனடா டாலர்கள் என்று கூறுகிறார்கள். இது இந்திய நாணய மதிப்பில் அறுபத்தி ஐந்தாயிரம் கோடி ரூபாய்கள்.

கொசுறு: ஹாலோவீன் விழாவுக்கு வேடமிட்டு வருகின்ற குழந்தைகளுக்கு இந்திய வம்சா வழி மக்கள் இரண்டு அல்லது மூன்று சாக்லெட் கொடுத்தால் அதிகம். ‘ஆற்றில் போட்டாலும் அளந்து போடு’ என்பதை அவர்கள் மறக்கவில்லை. ஆனால், இந்நாட்டவரோ வஞ்சனையில்லாமல் சாக்லெட் அள்ளிக் கொடுக்கின்றனர். இந்த முறை நாடு திரும்பும்போது, நட்பு மற்றும் உறவினர்களுக்குக் கொடுக்க நான் சாக்லெட் வாங்க வேண்டிய அவசியமிருக்காது!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com