செர்ரி மலருக்கு கொண்டாட்டம்...

பயண அனுபவம்
செர்ரி  மலருக்கு கொண்டாட்டம்...

மீபத்தில் ஜப்பானின் புகழ் பெற்ற செர்ரி ப்ளாசம் திருவிழாவைக் காண ஒரு குழுவுடன் இணைந்து ஜப்பான் சென்றிருந்தேன். ஆஹா!  என்ன ஒரு அற்புதமான அனுபவம்!

ஜப்பான் முழுவதும் வசந்த காலத்தில் அழகாக பூத்துக் குலுங்கும் செர்ரி மலர்கள் நம்மை மயக்கி சொர்க்கத்திற்கே அழைத்துச் செல்வது பிரமிப்பாக இருக்கிறது.! அழகான ஜப்பானியக் குழந்தைகள் மகிழ்வுடன் கைகளை ஆட்டி  வரவேற்பது போல் உணர்ந்தேன். உலகின் பல பகுதிகளிலிருந்தும் செர்ரி மலர் திருவிழாவைக் காண வந்த சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதுகிறது. செர்ரி மலர்கள் வருடத்தில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மட்டுமே பூக்கின்றன. பிறகு உடனே பூக்கள் உதிர்ந்து இலைகள் வந்து விடுகின்றன. “எதுவும் எப்போதும் நிலைக்காது” இது ஜப்பானியர்களின் நம்பிக்கை. பூத்திருக்கும் செர்ரி மலர் மரங்களின் கீழ் அமர்ந்து உணவு, பானங்கள் மற்றும் இசையுடன் செர்ரி மலர் திருவிழாவைக் கொண்டாடு கினறனர். நாங்களும் அதை அனுபவித்தோம்.

உதய சூரியனின் நாடு என அழைக்கப்படும் ஜப்பான் பாரம்பரியக் கலைகள் மற்றும் பழமையான நாகரிகத்தைக் கடைபிடித்தாலும் உலகின் வேறெங்கும் இல்லாத தொழில் நுட்பங்கள் கொண்ட நாடு.  தாம் செய்யும் பணிகளில் ஒழுக்கம், நேரம் தவறாமை, நேர்மை, சுறுசுறுப்பு இவை நம்மை வியக்க வைக்கிறது, வயதானவர்களுக்குக் கொடுக்கும் மரியாதை, பணிவு,  செய்யும் உதவி , எங்கும் சுத்தம் எதிலும் சுத்தம் என அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள நிறைய இருக்கின்றன.  

கோவில்கள், வழிபாடு, சிவப்பு நிற டோரி, திருவிழாக்கள் அனைத்துமே நம் நாட்டு முறையில் இருப்பது போல எனக்குத் தோன்றியது. கோவில் முகப்பின் வாயிலில் நம் கோவில்களில் உள்ள துவாரபாலகர்கள்  போல் உருவங்கள் இருபுறமும் இருக்கின்றன. நாம் அன்னபூரணியை வழிபடுவது போல இங்கும் அரிசி தேவதையை வணங்கி நன்றி செலுத்துகிறார்கள். மீனவர்களின் கடவுளுக்கென கோவில் உள்ளது.

ஜப்பானிய பாரம்பரிய உடையான “கிமோனோ” உடையை நாங்களும் அணிந்து மகிழ்ந்தோம். அவர்களின் பாரம்பரிய தேநீர் மற்றும் அரிசி உணவான சுஷியை சுவைத்தோம். ஆனால் அதன் சுவை எனக்குப் பிடிக்கவில்லை. இங்குள்ள வெந்நீர் நீரூற்றுகளில் வேக வைத்த முட்டைகள் கறுப்பு நிறமாக மாறி விடுமாம். அந்த ஒரு முட்டையை சாப்பிட்டால்  வாழ்நாளின் ஏழு வருடங்கள் கூடும் என்பது ஜப்பானியர்களின் நம்பிக்கை என்று எங்கள் கைடு பிரதீப் கூறினார்

புல்லெட் ரயிலில் ஹிரோஷிமா சென்றது மறக்க முடியாத அனுபவம். காற்றில் பறப்பது போல் உணர்ந்தேன். ஹிரோஷிமாவின் அமைதி பூங்காவைப் பார்வையிட்ட போது ஆகஸ்ட் 6, 1945ல் வீசப்பட்ட அணு ஆயுதத்தால் தாக்கப்பட்டு இறந்த பல்லாயிரக்கணக்கான உயிர்களை நினைத்து மனம் கலங்கியது.

ஜப்பானின் உயரமான ஃபூஜி எரிமலையின் நான்காவது லெவல் வரை நாங்கள் செல்ல முடிந்தது. அந்த இடத்திலேயே தாங்க முடியாத குளிர் நடுக்கியது. பிறகு இன்னும் சில முக்கிய இடங்களான உயரமான TOKYO SKY TREE, புத்தர் கோவில் என சென்றுவிட்டு புறப்படும் முன் “சயோனாரா” என்று எங்கள் ஜப்பானிய கைடு குமியிடம் சொல்லி விடை பெற்றோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com