
குற்றால சீசன் ஆரம்பித்துவிட்டது. தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சியில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது குற்றால அருவிகள்.
இது தென்னகத்தின் 'மருந்து நீரூற்று' ஆரோக்கிய நீரூற்று என்றும் அழைக்கப்படுகிறது. அரிய மூலிகைகளின் வழியாக தவழ்ந்து வரும் அருவிகளில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ தமிழகம் மட்டும் இன்றி வெளிநாடுகள் வெளி மாநிலங்களிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
பேரருவி (மெயின் அருவி)
இது பொதுவாக குற்றால அருவி எனவும், பேரருவி, மெயின் அருவி எனவும் அழைக்கப்படுகிறது. இது 288 அடி உயரத்தில் இருந்து பொங்குமாங்கடல் என்ற ஆழமான ஒரு துறையில் விழுந்து பொங்கி பரந்து கீழே விழுகிறது. ஆஹா குளிக்க குளிக்க பேரானந்தமே திடீரென அருவியில் வெள்ளப் பெருக்கும் ஏற்படும். அப்போது குளிக்க தடை செய்துவிடுவார்கள். இங்கு குற்றாலநாதரை தரிசிக்கலாம்.
ஐந்தருவி
குற்றாலத்தில் இருந்து சுமார் 5 கி.மீ தூரத்தில் உள்ளது. திரிகூட மலையின் உச்சியில் இருந்து 40 அடி உயரத்திலிருந்து உருவாகி ஓடி வந்து ஐந்து கிளைகளாக பிரிந்து விழுகிறது. இதில் பெண்கள் குளிக்க இரு அருவிகளும், ஆண்கள் குழந்தைகளுக்கு மூன்று அருவி கிளைகள் உள்ளன. இதில் குளிக்கும்போது ஒரு உற்சாக ஊற்று ஏற்படும். இங்கு உள்ள கோயிலில் தரிசனம் பெறலாம்.
பழத்தோட்ட அருவி
இது ஐந்தருவியிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு முக்கிய பிரமுகர்களுக்கு மட்டும்தான் குளிக்க அனுமதி உண்டு. இந்த அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தோட்டக்கலை துறையினரால் இங்கு சிறுவர் பூங்கா உருவாக்கப்பட்டு பூஞ்செடிகளும், மரக்கன்றுகளும் விற்கப்படுகின்றன.
புலியருவி
குற்றாலத்தில் இருந்து சும்மா ரெண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு 10 அடி உயரத்தில் தண்ணீர் விழுவதால் சிறுவர்கள் குளிக்க புலி அருவி மிகவும் பாதுகாப்பானது.
பழைய குற்றால அருவி
குற்றாலத்தில் இருந்து கிழக்கு பகுதியில் சுமார் 16 கி.மீ தொலைவில் அழகனாற்று நதியில் அமைந்துள்ளது.
பாலருவி
இது தேனருவி அருகே அமைந்துள்ளது. இது ஆற்றின் தொடக்கமே ஆனாலும் மக்களால் அருவி என்றே அழைக்கப்படுகிறது.
தேனருவி
செண்பகாதேவி அருவிக்கும் மேலே தேனருவி உள்ளது. ராட்சத தேன் கூடுகள் சூழ்ந்த மலையிலிருந்து தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால் தேனருவி என்று அழைக்கப்படுகிறது. மிகவும் ஆபத்தான அருவியாக கருதப்படும் இங்கு, செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சிற்றருவி
மெயின் அருவிக்கு மேலே நடந்து செல்லும் தூரத்தில் சிற்றருவி உள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த அருவியில் குளிக்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
குற்றாலம் செங்கோட்டையில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும் தென்காசியில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவிலும், மதுரையில் இருந்து 160 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. தென்காசி, செங்கோட்டை ஆகியவை அருகில் உள்ள ரயில் நிலையங்கள்.
ஜூன், ஜீலை, ஆகஸ்ட்டில் சீசன் களைகட்டும். அப்போது குற்றாலம் சென்று அருவியில் குளித்து தென்றல் காற்றின் ஜிலு ஜிலுப்பை அனுபவிக்கலாம்.