
பிரம்பனன் (Prambanan temple) கோவில் என்பது 240 கோவில்களைக் கொண்ட ஒரு வளாகமாகும். இது இந்தோனேசியாவின் மிகப்பெரிய இந்து கோவில் தளமாகும். காண்டி பிரம்பனன் இந்தோனேசியாவின் தெற்கு ஜாவாவில் உள்ள யோககர்த்தா (Yogyakarta) வின் சிறப்பு பகுதியில் உள்ள கோவில் வளாகமாகும். இது பிரம்மா, விஷ்ணு, சிவன் என மும்மூர்த்திகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட கோவிலாகும். இக்கோவில் வளாகம் யோககர்த்தா நகரத்திலிருந்து சுமார் 17 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
இந்தோனேசியாவின் மிகப்பெரிய இந்து கோவிலாகவும், அங்கோர் வாட் - க்கு பிறகு ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய கோவிலாகவும் உள்ளது. இங்கு 240 கோயில்கள் அமைந்துள்ளன. இது உலகம் முழுவதிலும் இருந்து நிறைய சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கிறது. முதல் கட்டிடம் 9ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ரக்காய் பிகாடனால்(Rakai Pikatan) தொடங்கப்பட்டு அவருடைய வாரிசான மன்னர் லோக பாலரால் (Loga palar)கட்டி முடிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பிரம்மாண்டமான இந்து கோவிலின் கட்டுமானம் அனைவரையும் வியக்க வைக்கிறது.
மும்மூர்த்திகளுக்கான கோவில்:
உலக பாரம்பரிய தளங்களில் ஒன்றான இது யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டது. இக்கோவிலின் மைய விமானம் 47 மீட்டர் அதாவது 154 அடி உயரத்தில் உள்ளது. முதலில் சிவனுக்காக கட்டப்பட்ட இந்த 'சிவகிரகம்' என அழைக்கப்படும் இக்கோவில் பின்பு அதன் இருபுறமும் திருமால், பிரம்மன் போன்றோருக்கும் ஆலயம் எழுப்பப்பட்டு மும்மூர்த்திகளின் கோவிலாக காணப்படுகிறது. பௌத்த வம்சமான சைலேந்திர வம்சத்துக்கு போட்டியாக இந்து வம்சமான சஞ்சய வம்சத்தால் அமைக்கப்பட்டது தான் இந்த பிரம்மாண்டமான கோவில்.
கிபி 850 இல் ஆரம்பமான இதன் கட்டுமானம் மன்னன் லோக பாலா, பாலிதுங், மகாசம்பு மன்னர்களால் கட்டி முடிக்கப்பட்டது. அதன் பின்பு தட்சன், துலோதுங் போன்ற பிற்கால மன்னர்களால் விரிவாக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. 240 கோவில்கள் காணப்பட்டாலும் அவற்றில் பல சிதைந்துபோய் அஸ்திவாரம் மட்டுமே காணப்படுகிறது.
பிற கோவில்கள்:
திரிமூர்த்திகள் கோவில்கள், நந்தி தேவர், கருடன் மற்றும் அன்னம் ஆகிய வாகனங்களுக்காக அமைக்கப்பட்ட மூன்று வாகன கோவில்களும், 2 அபித் கோவில்களும், நான்கு வாயில்களுக்கு அருகில் அமைந்துள்ள நான்கு சிறிய ஆலயங்களும், உள் வீதியில் நான்கு மூலைகளிலும் அமைந்துள்ள நான்கு சன்னதிகள் மற்றும் பெரிய கோவிலை சுற்றி நான்கு வரிசைகளில் அமைந்துள்ள பரிவார கோவில்கள் என இங்கு முக்கியமான ஆலயங்கள் பல உள்ளன.
மிக உயரமான சிவன் கோவில்:
மும்மூர்த்தி கோவில்களில் மிகவும் பழமையானதும், உயரமானதுமான சிவன் கோவிலின் சுற்றுப் பிரகாரத்தில் ராமாயண காட்சிகள் மிக அழகாக செதுக்கப்பட்டுள்ளன. கோவிலின் மத்தியில் 'மகாதேவர்' எனப்படும் சிவபெருமான் மூன்று மீட்டர் உயரத்தில் மிக கம்பீரமாக காட்சித் தருகிறார். அதைச் சுற்றியுள்ள கோட்டங்களில் கணேசன், துர்க்கை, அகஸ்தியர் ஆகியோரும் உள்ளனர். சிவன் கோயிலுக்கு முன்னுள்ள நந்தி கோவிலில் சூரியன், சந்திரனுக்கும் அழகான சிற்பங்கள் உள்ளன. இங்கு இந்த சிவபெருமானுக்கு பூஜைகள் தவறாமல் நடைபெறுவதாக கூறுகிறார்கள். பிரம்பனன் கோவில் என்பது 240 கோவில்களை கொண்ட வளாகமாக இருந்தாலும் பூகம்பங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகள் போன்ற இயற்கை அச்சுறுத்தல்களுக்கு ஆளானதால் சில பல கோவில்கள் பலத்த சேதமடைந்து அஸ்திவாரம் மட்டுமே காணப்படுகிறது.
இந்தோனேசியாவின் முக்கியமான சுற்றுலா தளமான இங்கு ஜாவா மற்றும் பாலி மக்கள் தங்களுடைய சமய சடங்குகளை இங்கு செய்வதற்கு அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. இங்குள்ள திறந்த வெளி அரங்கில் பாரம்பரிய ராமாயண நடனம் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்கிறது. 2006 யோக்யகர்த்தாவில்(Yogyakarta) ஏற்பட்ட பூகம்பத்தால் இங்குள்ள ஆலயங்கள் பல சேதம் அடைந்துள்ளதால் ஆலயத்தின் சில பகுதிகளுக்குச் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. 2014 இல் எரிமலை குமுறியதால் சில நாட்கள் இக்கோவில் வளாகம் மூடப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
16 ஆம் நூற்றாண்டில் இடம்பெற்ற நிலநடுக்கம் ஒன்றினால் பெருத்த சேதம் அடைந்தது. சிதைந்த பிரம்மாண்டமான கோவில் இடிபாடுகள் உள்ளூர்வாசிகளை அச்சுறுத்தினாலும் அதன் வரலாற்று முக்கியத்தை பற்றி அவர்கள் அதிகம் அறிந்திருக்கவில்லை. இப்பகுதியில் கிடைத்த சிற்பங்களையும், கற்களையும் எடுத்துச்சென்று அலங்கார பொருட்களாகவும், கட்டுமானங்கள் அமைக்கவும் பயன்படுத்துவது மட்டும் தொடர்ந்தது. 1918 ஆம் ஆண்டு எஞ்சிய சிதைவுகளை பாதுகாத்து சீரமைக்கும் பணியை அப்போது ஆட்சி செய்த கிழக்கிந்திய டச்சு(Dutch) அரசு ஆரம்பித்தது. 1953ல் பிரதான ஆலயமான சிவன் கோவில் முழுவதுமாக மீள் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.