
தெற்கு வியட்நாமில் சைகான் என்றழைக்கப்படும் இன்றைய ஹோசிமின் நகரமானது, மிக நவீனமாக, வானுயர்ந்த கட்டடங்களுடன், சைகான் நதியை அணைத்தாற்போல் அமைந்திருக்கும், 93 லட்சம் மக்கள் வசிக்கும் வணிக நகரமாகும்.
டான்சன் நாட் சர்வதேச விமான நிலையத்திலிருந்து (Tn Sn Nhat International Airport) எங்கள் ஹோட்டல் செல்லும் வழியில், சுறுசுறுப்பான மக்களையும், குறிப்பாக அதிக இளம் தலைமுறையினரையும், விலை உயர்ந்த வாகனங் களையும், அவற்றின் நடுவே ரிக் ஷாக்களையும் பார்க்கிறோம்.
ஃப்ரான்ஸ் நாட்டின் கீழ் இருந்ததால் பல கட்டடங்களில் ஃப்ரென்ச் கட்டடக் கலையின் தாக்கம் தெரிந்தது.
சுரங்க பதுங்கு குழிகளான சுசி டனல்ஸ், போர் மியூசியம் இவற்றைப் பார்வையிட்டபின்மனசு கொஞ்சம் கனத்துப்போயிருந்தது.
“லன்ச்சுக்கு நமஸ்தே என்ற இண்டியன் ரெஸ்டாரண்ட் போகிறோம்” அறிவிப்பு வந்தது.
கொஞ்சம் கனமான ரோட்டி, தால், வெஜிடபிள் சப்ஜி, முக்கால் வெந்த உதிர் சாதம், புளிக்காத யோகர்ட், என்று வரிசை கட்டின. டெசர்ட்டாக குலோப்ஜாமூன் வேறு.
உண்ட மயக்கம் தீரும் முன்பே, நோத்ர்டோம் கதீட்ரல், ஹோசிமின் ஹால் இவற்றைப் பார்த்த பின்னர்,மாலை ஒரு காஃபி ஷாப்பில் புகழ் பெற்ற வியட்நாம் கபூச்சினோ காஃபி, தேங்காய்ப் பால் காஃபி, ஹேசல்னட் காஃபி என்று விதம் விதமாகத் தருவதை சுவைத்தோம். உலகின் காஃபி ஏற்றுமதியில், பிரேசிலுக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் இருக்கும்
நாடு ஆயிற்றே வியட்நாம்!
அடுத்த நாள், மீகாங் நதியில் ஒரு க்ரூயிஸ் பயணம்.
நதிக்கு நடுவே இருக்கும் குட்டித்தீவுகளைப் பார்க்கவும் அங்கிருக்கும் உள்ளூர் வாசிகளை சந்திக்கவும் திட்டமிடப்பட்டது.பெரிய படகில் சென்று ஒரு தீவில் முதலில் இறங்கினோம். மழை பெய்ததால் சறுக்கும் மண் பாதையில் சற்று நடந்து, மூங்கில் கம்புகளால் கூரை வேய்ந்த ஒரு விசாலமான இடத்தை அடைந்தோம். நிறைய வட்ட மேஜைகள் போட்டு நாற்காலிகளும் இருக்க, வியட்நாமியப் பெண்கள் சுற்றுலாப் பயணிகளை வரவேற்று, தேன் கலந்த டீ கொடுத்தார்கள்.