“பிரமிப்பூட்டும் கன்ஹேரி குகைகள்” எங்கே இருக்குத் தெரியுமா?

கன்ஹேரிக் குகைகள்
கன்ஹேரிக் குகைகள்

ன்ஹேரி குகை வளாகமானது (Kanheri Caves) மேற்கு இந்தியாவின் மிக முக்கியமான வரலாற்று நினைவுச் சின்னங்களில் ஒன்றாகும். மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பையிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள போரிவாலி (Borivali) என்ற பகுதியில் அமைந்துள்ள சஞ்சய்காந்தி தேசியப் பூங்காவினுள் அதன் நுழைவாயிலில் இருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிருஷ்ணகிரி மலைத் தொடரில் வரிசையாக அமைந்துள்ளன. கிருஷ்ணகிரி என்றால் கருப்புமலை என்று அர்த்தமாகும். இக்குகைகள் பௌத்தர்களின் 109 குடைவரைத் தொகுப்பாகும். இங்குள்ள குடைவரைக் குகைகள் கி.மு. முதல் நூற்றாண்டு முதலா கி.பி.பத்தாம் நூற்றாண்டு வரை பல்வேறு காலகட்டங்களில் உருவாக்கப்பட்டவை. இக்குகைகளுக்குள் ஓவியங்களும், புடைப்புச் சிற்பங்களும் ஏராளமாக காணப்படுகின்றன.

கன்ஹேரி குகைகள் புத்த மடாலயங்களாகவும், புத்த பிக்குகள் படிப்பதற்காகவும், தியானம் செய்வதற்காகவும் உருவாக்கப்பட்டவையாகும். மௌரியப் பேரரசர்கள் (Maruyan Empires) மற்றும் குஷானப் பேரரசரர்களின் (Kushan Empires) காலத்தில் இப்பகுதியில் பௌத்த சமயப் பல்கலைக்கழகம் ஒன்றும் செயல்பட்டுள்ளது.

கன்ஹேரி குகைகளில் பிராமி மற்றும் தேவநாகரி கல்வெட்டுக்கள் அதிக அளவில் காணப்படுப்படுகின்றன. இந்த குகைகளில் மூன்றாம் எண் குகை மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ‘சைத்தியகிரஹ’ என்ற பெயருடைய குகை எண் மூன்றில் இருபுறத்திலும் புத்த பெருமான் பிரம்மாண்டமாகக் காட்சி தருகிறார். இந்த குகைக்குள் நுழைந்தால் பிரம்மாண்டமான ஒரு மண்டபத்தினைக் காணலாம். இந்த குகைக்குள் இருபதுக்கும் மேற்பட்ட தூண்களைக் கொண்ட நீளமான மண்டபம் அமைந்துள்ளது. இக்குகையானது ஆறாம் நூற்றாண்டில் குடையப்பட்டதாகக் கருதப்படுகிறது. மேலும் பதினொன்றாம் குகையானது தர்பார் மண்டபமாக செயல்பட்டுள்ளது. குகை எண் 34 ன் கூரையில் புத்தரின் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இதன் கூரையில் முற்று பெறாத புத்தரின் ஓவியங்களும் காணப்படுகின்றன.

கன்ஹேரிக் குகைகள்
கன்ஹேரிக் குகைகள்

கன்ஹேரிக் குகைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள நீர் மேலாண்மை அமைப்பு மிகவும் ஆச்சரியமானது. மலையில் சமதளமான இடங்களில் பாறைகளை குடைந்து தொட்டிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் மழைக்காலங்களில் நீரை சேகரித்து வைக்கப்பட்டு மலையில் உள்ள மொத்த பௌத்த வளாகத்திற்கும் நீர் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

இதையும் படியுங்கள்:
எவராலும் அபகரிக்க முடியாத ஒரே சொத்து இதுதான்..!
கன்ஹேரிக் குகைகள்

ஆங்காங்கே சமதளப் பாறைகளில் வெட்டப்பட்ட நீர்த்தொட்டிகள் மற்றும் மழைக்காலங்களில் மழை நீரினை இத்தொட்டி களுக்குள் சேமிக்க கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தகைய முறையான அமைப்பானது மழைநீரை சேகரிக்கவும் அவற்றை வீணாக்காமல் தொட்டிகளில் சேமிக்கவும் பயன்பட்டுள்ளன.

சஞ்சய்காந்தி தேசியப் பூங்கா ஆசியாவிலேயே அதிகம் பேர்களால் பார்வையிடப்படும் ஒரு பூங்காவாகும். இப்பூங்காவிற்கு ஆண்டுதோறும் சுமார் இரண்டு மில்லியன் பார்வையாளர்கள் வந்து செல்லுகின்றனர். இப்பூங்காவினுள் லயன் சஃபாரி மற்றும் டைகர் சஃபாரி அமைந்துள்ளது. சஞ்சய்காந்தி தேசியப் பூங்காவினுள் வனவிலங்குகளையும் பறவைகளையும் கண்டு மகிழலாம்.

கன்ஹேரிக் குகைகள்
கன்ஹேரிக் குகைகள்

பிரமிப்பூட்டும் இக்குகைகளை காலை ஆறு மணி முதல் மாலை ஆறு மணி வரை பார்வையிடலாம். பூங்காவிற்குள் நுழைய நுழைவுக் கட்டணம் உண்டு. சஞ்சய்காந்தி தேசிய பூங்காவின் நுழைவு வாயிலில் இருந்து கன்ஹேரி குகைகளை அடைய வாகன வசதி உள்ளது. குறிப்பிட்ட ஒரு தொகையினை செலுத்தி அதில் பயணித்து குகைப் பகுதியை அடையலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com