மனிதர்களில் வெவ்வேறு குணங்களை உடையவர்களை இருவேறு துருவம் என்று கூறுவார்கள். இப்படி இருப்பவர்களை ஒன்று சேர்க்க முடியாது என்று சொல்வது உண்டு. இது மனிதர்களுக்கு மட்டுமில்லை ஆறு, கடல் போன்றவற்றிற்கும் பொருந்தும். அட்லான்டிக் பெருங்கடலும், பசிபிக் பெருங்கடலும் ஒன்றோடு ஒன்று சேராது தெரியுமா? இரண்டு கடல்களுக்கும் இருக்கும் வெவ்வேறு நீரின் அடர்த்தி, வெப்பம், உப்புத்தன்மையே இதற்கு காரணமாகும்.
இதுபோன்று இந்தியாவிலும் ஒரு அதிசயம் நிகழ்கிறது. இங்கே உள்ள இரண்டு ஆறுகள் கலந்தாலும் ஒன்று சேருவதில்லை. இந்தியாவில் உத்திரகாண்ட் மாநிலத்தில் தேரி கார்வால் மாவட்டத்தில் தேவ்பிரயாக் என்னும் இடத்திலே இந்த இரண்டு நதிகளின் சங்கமம் நிகழ்கிறது. இங்கு தான் அலக்நந்தா ஆறும், பாகிரதி ஆறும் சந்தித்து பின்பு கங்கை ஆற்றில் சென்று கலக்கின்றது.
உத்திரகாண்டிற்கு பயணம் செய்யும் போது நிச்சயமாக ‘பிரயாக்’ என்ற வார்த்தையை கேள்விப்பட்டிருப்பீர்கள். இங்கே ஐந்து பிரயாக் உள்ளது. தேவப்பிரயாக், விஷ்ணுபிரயாக், நந்தபிரயாக், கர்ணபிரயாக், ருத்ரபிரயாக் ஆகியவை பஞ்சபிரயாக் என்று அழைக்கப்படுகிறது.
இங்கே தான் முனிவர் தேவ சர்மா தனது துறவறத்தை தொடர்ந்தார். அதனாலே இந்த இடத்திற்கு தேவ்பிரயாக் என்று பெயர் வந்தது. தேவ்பிரயாக் என்பதற்கான பொருள் கடவுளின் சங்கமம் என்பதாகும். இங்கே இரண்டு புனிதமான ஆறுகளான அலக்நந்தா மற்றும் பாகிரதி கலந்து புனித நதியான கங்கையை உருவாக்குவதால் இவ்வாறு பெயர் பெற்றது.
இங்குள்ள கிராமத்தில் 1000 வருட பழமையான ரகுநாத் கோவில் அமைந்துள்ளது. இது பெரிய கற்களால் ஆன பிரம்மிட் போன்று தோற்றம் கொண்டிருக்கிறது. இன்னும் இங்குள்ள நான்கு கோவில்கள் மேலும் இவ்விடத்தை முக்கியத்துவம் மிகுந்ததாக மாற்றுகிறது.
அலக்நந்தா ஆறு சதோபாந்த் அடிவாரத்தில் பத்திரிநாத்திலிருந்து உருவாகி வருகிறது. பாகிரதி கௌமுக் அடிவாரத்தில் கங்கோத்ரியிலிருந்து உருவாகி வருகிறது. இந்த இரண்டு ஆறுகளும் சேர்ந்து தான் கங்கையை உருவாக்குகிறது. அலக்நந்தா ஆறு சற்று மண் கலந்த நிறமாக இருக்கும். இதுவே பாக்கிரதியோ பச்சைபசேலென்று அழகாக இருக்கும். இந்த இரண்டு நதிகளுமே ஒன்றோடு ஒன்று ஒட்டால் இருப்பது பார்ப்பதற்கு அழகாக இருக்கும். தேவபிரயாக் ரிஷிகேஷில் இருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 2723 அடி உயரத்தில் உள்ளது.
இந்த இடம் திரைப்படங்கள் எடுப்பதற்கும் சிறந்த தளமாக உள்ளது. போங்கா பண்டிட், கிஸ்னா வாரியர் போயட் (The Kisna: Warrior Poet.) ஆகிய படங்கள் இங்கே எடுக்கப் பட்டுள்ளன.
இங்கிருக்கும் புனிதமான நீரூற்றான பைத்தல்ஷிலா (Baitalshila) மருத்துவ குணங்களை கொண்டது என்று கூறுகிறார்கள். அதனால் பக்தர்கள் இவ்விடத்திற்கு வந்து இந்த நீரூற்றில் குளித்துவிட்டு செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேவ்பிரயாக் என்பது ஆன்மீகத்தளம் என்பதையும் தாண்டி இங்கே ஏராளமான இயற்கையழகு கொட்டிக்கிடக்கிறது. இவ்விடத்தை சுற்றிப்பார்க்க வருவதற்கு மழைக்காலங்களை தவிர்த்து விடுவது நல்லதாகும்.
இங்கு சுற்றிப்பார்க்கவும், புகைப்படம் எடுக்கவும் எண்ணற்ற அழகான இடங்கள் உள்ளதால் கண்டிப்பாக ஒருமுறையாவது இங்கே வந்து இயற்கையாகவே நிகழும் இந்த அதிசயத்தை ரசித்துவிட்டு செல்லுங்கள்.