இந்தியாவில் பல நம்ப முடியாத அதிசயங்களும், ஆச்சரியமான இடங்களும் உள்ளன. அப்படிப்பட்ட இடங்களில் ஒன்றுதான் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நானேகாட்டில் இருக்கும் தலைகீழ் அருவி. பூனாவில் உள்ள ஜூனார் என்ற இடத்தில்தான் இந்த அருவி அமைந்திருக்கிறது. இது மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ளது. இந்த இடத்தை மும்பையில் இருந்து மூன்று மணி நேர பயணத்தில் அடையலாம்.
இந்த அருவி தலைகீழாக விழுவதற்கான காரணம், இந்த இடத்திலிருக்கும் காற்றின் வேகம் மிக அதிகமாக இருப்பதால், அது கீழே விழும் அருவியின் நீரை மேல் நோக்கி தள்ளுகிறது. இது புவியீர்ப்பு சக்தியை மீறிய ஒரு அதிசய நிகழ்வாகும்.
இந்த அருவியை அடைய நடந்து செல்லும் பாதையானது பல நூற்றாண்டுகளுக்கு முன்பு சத்ரபதி சிவாஜி காலத்தில் வணிகம் செய்வதற்காக பயன்படுத்தப்பட்டதாகும். இன்னமும் அந்த வழியில் மிகப்பழைமையான குகைகளும், கல்வெட்டுக்களும் காணப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அருவியை பார்த்துவிட்டு வந்த அனைவருமே ஒருமித்த குரலில் கூறுவது என்னவென்றால், இந்த இடம் பூமியிலே காணப்படும் சொர்க்கம் என்பதேயாகும். அவ்வளவு அழகை தன்னுள் புதைத்து வைத்துள்ளது என்றே கூறலாம்.
நானேகாட் கடுமையான மலையேற்றம் செய்பவர்களுக்கான இடம். இருப்பினும் நீங்கள் முதல் முறையாக இந்த இடத்திற்கு செல்ல விரும்பினால், மழைக்காலத்தில் செல்வதே நல்லதாகும். ஏனெனில், அருவியில் அதிகமாக தண்ணீர் பெருக்கு இருக்கும் சமயத்தில்தான் காற்றின் வேகத்திற்கு ஈடுக்கொடுக்க முடியாமல் தண்ணீர் மேல் நோக்கி செல்லும் அதிசய நிகழ்வை கண்கூடாகக் காண முடியும்.
இந்த இடத்தை அடைவதற்கான மலையேற்றம் 4 முதல் 5 கிலோ மீட்டர்களாகும். இதற்காக எடுத்துக்கொள்ளப்படும் நேரம் 5 மணி நேரம். கண்டிப்பாக நல்ல காலணிகளை அணிந்து செல்வது அவசியமாகும். முக்கியமாக மழைக்காலத்தில் கூடுதல் கவனம் தேவை. மலைக்கு மேலே சிறிய தாபாக்கள் உள்ளதால், சுற்றுலா பயணிகள் அங்கே சுடச்சுட தேநீர் அருந்திகொண்டே இயற்கை அழகை ரசிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
கண்டிப்பாக எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்கள், நல்ல மழைக்காலத்திற்கு ஏற்றது போல ஜாக்கெட், குடை, சன் கிளால், மருந்துகள், பணம், பவர் பேங்க், சாப்பிடுவதற்கு உணவு, கதகதப்பான ஆடைகள்.
இப்படிப்பட்ட அதிசய நிகழ்வை காண மலையேற்றம் செய்பவர்கள் மட்டுமல்லாது, இந்தியா முழுவதிலுமிருந்து சுற்றுலா பயணிகளின் கூட்டம் இந்த இடத்தில் அலை மோதுகிறது.