
கர்நாடக மாநிலத்தில் மைசூருவைச் சூழ்ந்து அமைந்துள்ள பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் ஐந்து நாட்கள் 1300 கிலோமீட்டர் பயணம் மேற்கொண்டேன். கர்நாடக மாநிலத்தின் ஒரு சிறப்பு என்னவென்றால் அது சிறிய பகுதியாக இருந்தாலும் அதை ஒரு சுற்றுலாத்தலமாக மாற்றி அமைத்து சிறப்பாக நிர்வகித்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறார்கள்.
கர்நாடகா மாநிலத்தில் ஏராளமாக கோயில்களும் நீர்வீழ்ச்சிகளும் இயற்கைவாச ஸ்தலங்களும், புராதான கலைச்சின்னங்களும் அமைந்துள்ளன. அனைத்து பகுதிகளிலும் நீர்நிலைகள் நிரம்பிக் காட்சியளிக்கின்றன. விவசாயம் அதிக அளவில் செழிப்பாக நடைபெறுகிறது. கர்நாடகத்தின் முக்கிய பயிர் கேழ்வரகு. இங்கே அனைவரும் கீரை, மொச்சை போன்ற உணவுகளை விரும்பிச் சாப்பிடுகிறார்கள்.
மைசூரு நகரத்திலிருந்து சுமார் 120 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கூர்க்! இது ஒரு மலைவாசஸ்தலம். இங்கு பயிரிடப்படும் காபி உலகப்புகழ் பெற்றுத் திகழ்கிறது. இங்கு காபி முதன்மைப் பயிராகும். இதைத்தவிர மிளகு, ஏலக்காய், ஆரஞ்சு போன்றவை அதிக அளவில் விளைவிக்கப்படுகின்றன.
உண்மையில், கூர்க் என்பது கர்நாடக மாநிலத்தில் அமைந்த ஒரு மாவட்டத்தின் பெயர். அங்குள்ள மலைவாசஸ்தலத்தின் பெயர் மடிக்கேரி. முற்காலத்தில் இந்த பகுதி மெர்காரா என்று அழைக்கப்பட்டது. மைசூரில் இருந்து மடிக்கேரிக்கு நிறைய பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால் காரில் பயணிப்பது இனிமையான அனுபவமாக இருக்கும்.
மடிக்கேரி காட்டுப் பகுதியில் காட்டெருமை, யானைகள், சிறுத்தைகள் போன்றவை வாழ்ந்து கொண்டிருக்கின்றன. நமக்கு அதிர்ஷ்டமிருந்தால் இவற்றை நாம் காணலாம்.
ராஜா சீட்
மடிக்கேரியில் முக்கியமான வியூ பாயிண்ட் ராஜா சீட். முற்காலத்தில் அந்த பகுதியை ஆட்சி செய்த இராஜா, தன் ராணியுடன் ஒரு இடத்தில் அமர்ந்து இயற்கையை இரசிப்பாராம். மாலை வேளைகளில் சூரிய அஸ்தமனத்தையும் கண்டு மகிழ்வாராம். இதனால் அந்த இடத்திற்கு ராஜா சீட் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இராஜா சீட் பகுதியில் சுற்றுலா பயணிகள் நின்று கொண்டு இயற்கை அழகை இரசிக்க ஒரு பெரிய வியூ பாயிண்ட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் நின்று கொண்டு மடிக்கேரியின் அற்புதமான இயற்கை வளத்தை முழுமையாகக் கண்டு ரசிக்கலாம்.
மடிக்கேரிக் கோட்டை
மடிக்கேரிக் கோட்டை பதினேழாம் நூற்றாண்டில் மன்னர் முத்துராஜாவால் கட்டப்பட்டது. இந்த கோட்டைக்குள் ஒரு அரண்மனையையும் இவர் அமைத்தார். இந்த அரண்மனை பின்னர் நவீனமாக்கப்பட்டது. கி.பி.1812 ஆம் ஆண்டு வாக்கில் இரண்டாவது லிங்கராஜேந்திர உடையாரால் சீரமைக்கப்பட்டது. கி.பி.1834 ல் இந்த கோட்டை பிரிட்டிஷார் வசமானது. இந்த கோட்டைக்குள் அமைந்துள்ள கோட்டை கணபதி ஆலயம் மிகவும் சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மடிக்கேரி மக்கள் இந்த கோயிலுக்கு வழிபட வருகிறார்கள். கோட்டைக்கு அருகில் ஒரு சிறிய அருங்காட்சியகமும் அமைந்துள்ளது.
அபி நீர்வீழ்ச்சி
மடிக்கேரியிலிருந்து சுமார் ஒன்பது கிலோமீட்டர் தொலைவில் இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. அடர்த்தியான காபி மற்றும் ஏலக்காய் தோட்டங்களுக்கு மத்தியில் இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. பார்ப்பதற்கு குற்றாலம் நீர்வீழ்ச்சியைப் போல காட்சியளிக்கிறது. ஆனால் இந்த நீர்வீழ்ச்சியில் நாம் குளிக்க அனுமதி இல்லை. நமது வாகனம் நிறுத்தப்பட்ட இடத்திலிருந்து சுமார் பத்து நிமிடங்கள் காபி தோட்டத்தைக் கடந்து சென்றால் ஹோவென இரைச்சலுடன் இந்த நீர்வீழ்ச்சி ஒரு சிறிய மலைப்பகுதியில் கொட்டிக் கொண்டிருப்பதை நாம் ரசிக்க முடிகிறது. இங்கு ஒரு தொங்கும் பாலத்தையும் அமைத்துள்ளார்கள். இதில் நின்று கொண்டு நேருக்கு நேராக நாம் நீர்வீழ்ச்சியின் அழகைக் கண்டு ரசிக்கலாம். நீர்வீழ்ச்சியிலிருந்து சிதறும் நீர்த்திவலைகள் நம் மீதுபட்டு மகிழ்ச்சியைத் தோற்றுவிக்கிறது. ஜீலை முதல் அக்டோபர் வரை இந்த நீர்வீழ்ச்சியில் நீர் கொட்டிக் கொண்டிருக்கும்.
ஓம் காரேஸ்வரா ஆலயம்
மடிக்கேரியின் மையப்பகுதியில் ஓம்காரேஸ்வரா ஆலயம் அமைந்துள்ளது. இந்த சிவபெருமானின் ஆலயம் கி.பி.1820 ல் இந்த பகுதியை ஆண்ட இரண்டாவது லிங்க இராஜேந்திராவால் கட்டப்பட்டது. முகலாயர் கால கட்டக்கலை அமைப்பை இந்த கோயிலில் காணமுடிகிறது. இந்த கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள லிங்கம் காசியில் இருந்து கொண்டு வரப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்த கோயிலின் முன்னால் ஒரு பெரிய குளமும் காணப்படுகிறது.
இம்மலைவாசஸ்தலத்தின் மற்றொரு சிறப்பு அங்கு தயாரிக்கப்படும் சாக்லெட் ஹோம்மேட் சாக்லெட்டுகள் இங்கே ஏராளமாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. அற்புதமான சுவையில் கிடைக்கின்றன. தவற விடாதீர்கள். மேலும் இங்கு கிடைக்கும் சோன்பப்டி மற்றொரு சிறப்பான தின்பண்டமாகும். இங்கு நமது தமிழ்நாட்டு சைவ சாப்பாடு கிடைக்கிறது. மதிய உணவை முடித்துக் கொண்டு நாம் தலைக்காவேரிக்குப் பயணிக்கலாம்.