குற்றாலம் போகணுமா? முதல்ல இத படிங்க...

குற்றாலம் போகணுமா? முதல்ல இத படிங்க...

யாகரா செல்லும் போதெல்லாம் குற்றாலம் நினைவிற்கு வரும். 160 அடி உயரத்திலிருந்து நயாகரா அருவி கொட்டுகிறது. ஆனால், அதற்கு மூன்று மடங்கிற்கு மேல் 520 அடி உயரத்திலிருந்து விழுகிறது குற்றாலம். மூலிகைச் செடிகள் நிறைந்த மலையிலிருந்து விழுவதால் குற்றாலத்தில் குளிப்பது நல்லது என்று கூறுவர். நயாகரா நீர்வீழ்ச்சியின் அருகில் படகில் போகலாம். இயற்கையை ரசிக்கலாம். ஆனால், குற்றால அருவியில் ஆனந்தமாகக் குளிக்கலாம். மேற்கு தொடர்ச்சி மலையழகை ரசிக்கலாம்.

குற்றாலம் என்றால் என் நினைவிற்கு வருவது திரிகூடராசப்பக் கவிராயரின் “குற்றாலக் குறவஞ்சி”.

“வானரங்கள் கனி கொடுத்து மந்தியொடு கொஞ்சும்

மந்திசிந்தும் கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்”

பாடல் “குற்றால மலையெங்கள் மலையே” என்று முடியும். இதைப் போன்ற கவிநயம் மிக்க பாடல்கள் நயாகரா அருவி மீது உண்டா என்று தெரியவில்லை.

மொத்தம் ஒன்பது அருவிகள் குற்றாலத்தில். அதில் மிகவும் முக்கியமானவை பேரருவி, ஐந்தருவி, மற்றும் சிற்றருவி.

குற்றாலம், தென்காசி இரயில் நிலையத்திலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. தென்காசியிலிருந்து குற்றாலம் செல்வதற்கு பேருந்துகள், ஆட்டோ, டாக்ஸி வசதிகள் உள்ளன.

இருபது வருடங்களுக்குப் பிறகு குற்றாலம் சென்றதில், வியக்கத்தக்க மாற்றங்கள். காண முடிந்தது. முன்பு குறைந்த அளவே விடுதிகள் இருந்தன.. இப்போது ஐந்தருவிக்குப் போகும் பாதையில், “வைஃபை” மற்றும் குளிர் சாதன வசதியோடு நிறைய புதிய வீடுகளும் விடுதிகளும் இருக்கின்றன. அறையிலிருந்தபடியே மேற்கு தொடர்ச்சி மலை அழகை ரசிக்கலாம். விடுதிகளுக்கு முன்பதிவு செய்து கொண்டு போவது நல்லது.

பேரருவியில் குளிப்பதற்கு, ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனி இடம் இருக்கிறது. பெண்கள் உடை மாற்றிக் கொள்வதற்கு வசதியாக மறைவிடம் இருக்கிறது. ஆண்களுக்கு அந்த வசதியில்லை. அருவியில் ஓரிடத்தில் தண்ணீர் மிக வேகமாகக் கொட்டுகிறது. அதுவரை அருவியில் நனைந்த படியே தடுப்பு கம்பியை பிடித்து நடந்து வரலாம். அருவியிலிருந்து நீர் மிகுந்த வேகத்துடனும், அழுத்தத்துடனும் வருவதால், மூச்சுத் திணறல் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். காவலர்கள் இருவர் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு இருக்கிறார்கள். ஆனால், அருவியில் குளிக்க வருபவர்களை வரிசையில் அனுப்பி, கட்டுப்படுத்தினால் நன்றாக இருக்கும். குரங்குகள் அதிகம் என்றாலும், அவற்றால் தொந்தரவு இல்லை.

ஐந்தருவியில், இரண்டு அருவிகள் ஆண்களுக்கு என்றும், மூன்று அருவிகள் பெண்களுக்கு என்றும் ஒதுக்கி இருக்கிறார்கள். இங்கு காவலர் கட்டுப்பாடு நிறையவே தேவைப்படுகிறது. சிலர் மற்றவர்களுக்கு இடம் கொடாமல், அருவியின் கீழே உட்கார்ந்து கொண்டு விடுகிறார்கள். இந்த இடத்திற்கு வரிசையில் அருவிக்குச் செல்லும்படியும், குறிப்பிட்ட நேரத்தில் வெளியே வந்து விட வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகளும் அவசியம்.

சிற்றருவியில் குளிப்பதற்கு நுழைவு கட்டணம் உண்டு. அருவியில் குளிக்க சற்று தூரம் நடந்து செல்ல வேண்டும்.

பேரருவியின் அருகில் குற்றாலநாதர் கோவில் இருக்கிறது. அருவியில் குளித்து, புத்துணர்வோடு  ஆண்டவனை தரிசிக்கலாம். இந்த வசதி நயாகராவில் இல்லையே!

முப்பது நபர்கள் அமர்ந்து சாப்பிடும் வண்ணம் சிறிய சிற்றுண்டி விடுதிகள். இட்லி, தோசை, ஊத்தப்பம், பூரி என்று ஒரு சில சிற்றுண்டி மட்டுமே தயார் செய்கிறார்கள். காப்பி, டீ கிடையாது. அதை தயாரித்து கொடுக்கும் நேரத்தில் நிறைய தோசை, இட்லி செய்வது வியாபாரத்திற்கு நல்லது என்கிறார் ஓட்டல் நடத்துபவர். பணத்தை வாங்கி மீதம் கொடுப்பதற்கு நேரமில்லாமல், “ஜீபே” கொடுக்கச் சொல்கிறார்கள். மதியம் சாப்பாடு வேண்டும் என்றால், சைவப் பிரியர்களுக்கு ஒரே ஒரு ஓட்டல்தான் உள்ளது. கூட்டம் அதிகம் வருவதால், ஓட்டல் வாசலில் காத்திருக்க வேண்டும். தென்காசி போகும் வழியில் ஒரு பெரிய ஓட்டல் உள்ளது. தரமான உணவு, நிறைய வகைகள்.  

குற்றாலம், தென்காசி ஆகியவற்றைச் சுற்றி சாம்பவர் வடகரை, சுந்தர பாண்டிபுரம் (ரோஜா புகழ்), ஆயக்குடி என்று நிறைய கிராமங்கள் உள்ளன. இயற்கையை ரசித்துக் கொண்டு கிராமங்கள் வழியே பயணம் செய்வது நல்ல அனுபவம். தேசிய நெடுஞ்சாலைகள், மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் எல்லாம்  நேர்த்தியாக உள்ளன.

காற்றாலைகள் இங்கு அதிகமாக பொருத்தப்பட்டுள்ள காரணத்தால் காற்று மின்சக்தி அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால், மின்தடை ஏற்படுவதே இல்லை என்று கூறுகிறார்கள் இங்கு வசிப்பவர்கள்.

குற்றாலத்தின் அழகை மிக அருமையாக வர்ணித்துள்ளார் கவிஞர் மருதகாசி.

“ஆயிரம் கண் போதாதோ வண்ணக்கிளியே, குற்றால அழகை நாம் காண்பதற்கு வண்ணக்கிளியே” என்ற திரைப் பாடலில்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com