
நாம் சுற்றுலா செல்லும் போது அல்லது பணி நிமித்தமாக வெளியூர்களுக்குச் செல்லும்போது தங்கிக் கொள்ள ஹோட்டல்களில் (Lodges) அறையை வாடகைக்கு எடுக்கிறோம். இதில் பல முக்கியமான விஷயங்கள் உள்ளன. முக்கியமான ஐந்து விஷயங்களைப் இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளுவோம்.
1. செக் இன் டைம் செக் அவுட் டைம்: தங்கும் விடுதிகளில் இரண்டு விதமான செக் இன் டைம், செக் அவுட் டைம் முறை பின்பற்றப்படுகிறது. முதலாவதாக இருபத்தி நான்கு மணி நேர முறை பல ஹோட்டல்களில் பின்பற்றப்படுகிறது. உதாரணமாக காலை ஒன்பது மணிக்கு அறையை எடுக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுவோம். மறுநாள் காலை ஒன்பது மணி வரை ஒரு நாளுக்குண்டான வாடகை கணக்கிடப்படும். இது இருபத்தி நான்கு மணி நேர முறை எனப்படுகிறது. பல பெரிய தங்கும் விடுதிகளில் பகல் பனிரெண்டு மணி என்பது செக் இன் டைமாக பின்பற்றப்படுகிறது. இம்முறையில் ஒருநாள் பகல் பனிரெண்டு மணி முதல் மறுநாள் பனிரெண்டு மணி வரை ஒருநாள் வாடகை கணக்கிடப்படும்.
உதாரணமாக காலை ஒன்பது மணிக்கு அறையை எடுக்கிறீர்கள் என்றால் அன்றைய தினம் ஒன்பது மணி முதல் அன்றைய தினம் பகல் பனிரெண்டு மணி வரை ஒருநாள் வாடகை கணக்கிடப்படும். அன்றைய தினம் பனிரெண்டு மணி முதல் மறுநாள் பனிரெண்டு மணி வரை இரண்டாவது நாள் வாடகை கணக்கிடப்படும். பொதுவாக இருபத்தி நான்கு மணி நேர முறையே சிறப்பானதாக கருதப்படுகிறது. இதைப் பற்றி அறையை பதிவு செய்யும் முன்னால் விசாரித்துத் தெரிந்து கொண்டு பின்னர் அறையை பதிவு செய்யுங்கள்.
2. காம்ப்ளிமெண்டரி பிரேக் பாஸ்ட்: பல தங்கும் விடுதிகளில் தற்போது காலை காம்ப்ளிமெண்டரி பிரேக் பாஸ்ட் தரப்படுகிறது. குடும்பத்தோடு தங்கும்போது இத்தகைய வசதி இருந்தால் உங்களுக்கு நல்லதுதான். இதைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்.
3. அறையைப் பார்த்த பின்னர் பதிவு செய்யுங்கள்: பொதுவாக நீங்கள் ஹோட்டல்களுக்குச் சென்று அறையை பதிவு செய்யும் முன்னர் அந்த அறையைப் பார்த்துவிட்டு பதிவு செய்வது நல்லது. சில ஹோட்டல்கள் வெளியில் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். ஆனால் அறைகள் அவ்வளவு வசதியாக இருக்காது. பெட்ஷீட், தலையணை உறைகள் சுத்தமாக இல்லாமல் இருக்கலாம். டாய்லெட் அசுத்தமாக இருக்கலாம். காற்றோட்டம் இல்லாமல் இருக்கலாம். குளிக்க சுடுதண்ணீர் வசதி இல்லாமல் இருக்கலாம். எனவே அறையைப் பார்த்து அது உங்களுக்குப் பிடித்திருந்தால் பதிவு செய்து தங்கலாம்.
4. தரகர்களை தவிர்த்து விடுங்கள்: பெரிய நகரங்கள் மற்றும் சுற்றுலா நகரங்களுக்குச் சென்றால் நீங்கள் வெளியூரிலிருந்து வருகிறீர்கள் என்பதைத் தெரிந்து கொண்டு அங்கிருக்கும் சில தரகர்கள் உங்களை அணுகி நல்ல தங்கும் விடுதிகள் உள்ளன. நான் அழைத்துச் செல்கிறேன் என்று உங்களை தொந்தரவு செய்வார்கள். கூடுமானவரை அவர்களை தவிர்த்து விடுங்கள். இதுபோன்ற நகரங்களுக்குச் செல்லும்போது அருகில் உள்ள ஏதேனும் ஒரு ஓட்டலுக்குச் சென்று காபி அல்லது சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு அவர்களிடம் விசாரித்தால் அவர்கள் அந்த ஊரில் உள்ள சிறந்த தங்கும் விடுதியைப் பற்றிச் சொல்லுவார்கள். அத்தகைய விடுதிகளுக்குச் சென்று அறையை பதிவு செய்து கொள்ளலாம்.
5. பாதுகாப்பு: குடும்பத்தோடு சென்று தங்க நேரும் போது தங்கும் விடுதிகளில் அறையை பதிவு செய்யும் முன்னர் அந்த விடுதியின் பாதுகாப்பைப் பற்றி அறிந்து கொள்ளுவது மிகவும் அவசியம். இணையத்தளத்திற்குச் சென்று ஏற்கெனவே தங்கியவர்கள் தங்கும்விடுதியின் தரம், பணியாளர்கள் நடந்து கொள்ளும் விதம், பாதுகாப்பு அம்சங்கள் முதலான விஷயங்கள் பற்றி தெரிவித்துள்ள கருத்துக்களைப் (Reviews) பார்வையிடுங்கள். நிறைய வாடிக்கையார்கள் சிறந்த தங்கும் விடுதி, தாராளமாகத் தங்கலாம் என்று சான்றளித்திருந்தால் அந்த விடுதியில் நீங்கள் தங்கலாம்.
மேற்காணும் விஷயங்களை மனதில் கொண்டு ஹோட்டலில் அறையை பதிவு செய்து தங்குங்கள். மகிழ்ச்சியாக வீடு திரும்புங்கள்.