வெள்ளை சலவை கல்லினால் ஆன வெங்கடாஜலபதி ஆலயமே பிர்லா மந்திர் என்று அழைக்கப்படுகிறது. திருப்பதியில் உள்ளது போலவே 42 அடி உயர வெங்கடேச பெருமாளை தரிசிக்கலாம். இங்கு ஆண்டாள், பத்மாவதி தாயார் சிவன் பிள்ளையார் சரஸ்வதி ஆஞ்சநேயர் பிரம்மா லக்ஷ்மி மற்றும் சாய்பாபா போன்ற கடவுள்களுக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன. முழுக் கோவிலும் நுட்பமான கலைநயமிக்க சிற்பங்களால் நிறைந்து காணப்படுகிறது. இச்சிற்பங்கள் இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாச நிகழ்வுகளை நினைவூட்டுவதாக அமைந்துள்ளன.
நகரின் மையப்பகுதியில் இருந்து 2 கி மீ தொலைவில் அமைந்துள்ள ஹுசைன் சாகர் ஹைதராபாத்தில் உள்ள மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். இந்த ஏரி செகந்திராபாத் மற்றும் ஹைதராபாத் போன்ற இரண்டு நகரங்களை இணைக்கிறது. இது ஆசியாவிலேயே மிகப்பெரிய செயற்கை ஏரியாகும்.
ஏரியின் நடுவில் அமைந்துள்ள புத்தர் சிலை மிகவும் அழகானது. 17.5 மீட்டர் உயரமும் 350 டண் நிறையும் கொண்ட ஒரே கல்லில் வடிக்கப்பட்ட சிலையாகும். ஏரியின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள லும்பினி பூங்காவிலிருந்து படகில் சென்று வரலாம். இதனுடன், ஏரியைச் சுற்றிலும் பல்வேறு பிரபலங்களின் கிட்டத்தட்ட 30 சிலைகள் உள்ளன.
மாலை நேரத்தில் இந்த ஏரியில் படகு சவாரி செய்வது மிகவும் இனிய அனுபவமாகும். பல்வேறு படகுகள் இங்கே உள்ளன. இசைப்படகில் அதிரும் இசைக்கேற்ப நடனம் ஆடிக்கொண்டே செல்லலாம். அதிவிரைவு ஸ்பீடு போட்டுகளும் உள்ளன. இதில் இரண்டு பேர் மட்டுமே செல்ல முடியும். மோட்டார் படகில் பயணம் செய்தது ஒரு சுவாரசியமான அனுபவமாக எங்களுக்கு இருந்தது. நில ஒளியில் செயற்கை விளக்கு வெளிச்சத்தில் தெலுங்கானா மாநில தலைமைச் செயலகம் மின்னியது காண்பதற்கு அழகாக இருந்தது.
55 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள என் டி ஆர் கார்டன் ஆந்திர பிரதேச மறைந்த முன்னாள் முதல்வர் என்டி ராமராவ் அவர்களின் நினைவிடம் ஆகும். குழந்தை களுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் மனம் கவரும் வண்ணம் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்து இருக்கின்றன. இங்கு (Haunted house) பேய்கள் குடியிருக்கும் வீட்டுக்குள் நானும் என் கணவரும் போய் வந்தது மறக்க முடியாத ஒரு அனுபவம் ஆகும். ஒரு பெரிய மரத்தை குடைந்து அதற்குள்ளே சென்று வருவது போன்ற பாதை அமைக்கப் பட்டிருந்தது. இருவர் மட்டுமே உள்ளே செல்ல முடியும். எல்லா விளக்குகளும் அமைக்கப்பட்டு உள்ளே நுழைந்த சில வினாடிகளில் ஆ என்ற ஒரு பெண்ணின் அலறல் கேட்க அங்கே தலைவிரி கோலமாக வெள்ளை உடை அணிந்து ஒரு பெண் நின்றதை பார்த்து நான் அலறி விட்டேன். அடுத்து பிணவறையில் தலை இல்லாத முண்டம் எழுந்து அமர்ந்து வீல் என்று கத்தியது. பேய்களுக்கு நடுவே சென்று வந்த அந்த மறக்க முடியாதது.
ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட ஸ்ரீ ராமானுஜரின் சிலை 216 அடி உயரமும் 1500 டன் எடையும் கொண்டது. தங்கம் வெள்ளி செம்பு வெண்கலம் துத்தநாகம் ஆகிய பஞ்சலோகங்களால் செய்யப்பட்டது. இதில் 120 கிலோ தங்கம் சேர்க்கப்பட்டுள்ளது. இது உலகின் இரண்டாவது மிகப்பெரிய ஐம்பொன் சிலையாகும். ராமானுஜரின் திருமேனியை சுற்றி 108 திவ்ய தேச பெருமாள் கோயில்கள் அமைந்துள்ளது மிகவும் அற்புதமான காட்சியாகும் கோயிலுக்குள் 200 கிலோ எடையில் தங்கச் சிலை ஒன்றும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
108 படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு, நடுவே யானைகள் தாங்கி நிற்கும் வகையில் 54 இதழ்களுடன் 27 அடி உயரத்தில் பத்மபீடம் 2 அடுக்குகளாக அமைக்கப் பட்டுள்ளது. இந்த 2 அடுக்குகளிலும் 18 சங்குகள் மற்றும் 18 சக்கரங்கள் இடம் பெற்றுள்ள ராமானுஜரின் சிலை சிலையை காண கண் கோடி வேண்டும்.