முழு துபாயின் அழகைப் பார்ப்பதற்கான ஒரே இடம் துபாய் ஃப்ரேம்தான். ஒரு போட்டோ ஃப்ரேம் வடிவில் கட்டப்பட்டுள்ள இந்த வித்தியாசமான கட்டடம் ஒரு அதிசயமான கட்டடமும் கூட. 150 மீட்டர் உயரமும் 95 மீட்டர் அகலமும் கொண்ட இந்த ஃப்ரேம் 2018ம் ஆண்டு கட்டப்பட்டது. உலகிலேயே மிகவும் உயரமான ஃப்ரேம் வடிவக் கட்டடம் என்றால் அது துபாய் ஃப்ரேம்தான். இந்த ஃப்ரேமின் ஒரு பக்கத்திலிருந்து எமிரேட்ஸ் டவர் மற்றும் புர்ஜ் கலிஃபா போன்ற இடங்கள் இருக்கும் அழகைப் பார்க்கலாம். இன்னொரு பக்கமிருந்து துபாயின் பழமையான நகரத்தைப் பார்க்கலாம்.
கின்னஸ் சாதனைப் படைத்த இந்த ஃப்ரேம் கட்டடத்திற்கு செல்ல, ஆடை விதிமுறைகள் போன்ற பல விதிமுறைகள் உள்ளன. இந்த இடத்தின் உள்ளே செல்வதற்கான நுழைவுக்கட்டணம் ரூ 1,532 ஆகும். பார்வை நேரம் 1 முதல் 2 மணி நேரம்தான். நீண்ட சதுர வடிவில் இருக்கும் இந்த துபாய் ஃப்ரேமே துபாயின் வளர்ச்சிக்கு ஒரு உதாரணமாக உள்ளது.
இந்த துபாய் ஃப்ரேமிற்கு சென்றால் கட்டாயம் நீங்கள் அங்குள்ள அருங்காட்சியகத்திற்கு செல்ல வேண்டும். இந்த அருங்காட்சியகத்தில் நீங்கள் துபாயின் வரலாற்று சின்னங்கள், கலாச்சார சின்னங்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் ஆகியவற்றைப் பார்க்கலாம். மேலும் இந்த துபாய் ஃப்ரேம் அருங்காட்சியகத்திற்கு `எதிர்காலத்தின் அருங்காட்சியகம்` என்ற பெயரும் உள்ளது. ஏனெனில் 50 வருடங்கள் கழித்து துபாய் எப்படி இருக்கும் என்பதை கூறும் விதத்தில் அருங்காட்சியகம் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
இந்த அருங்காட்சியகத்தில் மொத்தம் 7 தளங்கள் உள்ளன. அதில் மொத்தம் 6 தளங்களே மக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டிருக்கின்றன. அந்த ஆறு தளங்களில் இருக்கும் பொருள்கள் அனைத்தும் மனிதநேயம், ஆரோக்கியம், தெய்வீகம், சுற்றுசூழல், காலநிலை, வரலாற்றில் மக்கள் எப்படி வாழ்ந்தார்கள், எப்படி விண்வெளிக்கு பயணம் செய்தார்கள் போன்றவற்றின் அடையாளமாக இருக்கின்றன. அதேபோல் திரையரங்கம், நாடக மேடை என அனைத்தும் அங்கு உள்ளன.
இந்த ஃப்ரேம் அருங்காட்சியகத்திற்கு செல்ல வேண்டுமென்றால் முன்பதிவு செய்துக்கொள்ள வேண்டும். 16 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு கட்டாயம் டிக்கெட் எடுக்க வேண்டும். சிறுவர்களுக்கு இலவச அனுமதி உண்டு. அங்கு சுற்றிப்பார்க்க இரண்டு மணி நேரம்தான் அனுமதி. பதிவு செய்த நேரத்திற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே செல்ல வேண்டும். நேரத்திற்கு செல்ல முடியவில்லை என்றால் தகவல் தெரிவித்துவிடுவது நல்லது.
துபாய் ஃப்ரேம் ஒரு அற்புதம் என்றால் துபாய் ஃப்ரேமின் அருங்காட்சியகமும் அதே அளவு அற்புதம் நிறைந்ததுதான். ஆகையால் துபாய் சென்றால் துபாயின் மொத்த அழகையும் பார்க்க துபாய் ஃப்ரேமிற்கு செல்லாமல் மட்டும் திரும்பிவிடாதீர்கள்.