கலைகளின் கருவூலம் எலிஃபெண்டா குகைகள். வாங்க சுற்றிப் பார்ப்போம்!

எலிஃபெண்டா குகைகள்...
எலிஃபெண்டா குகைகள்...

மும்பையில் கேட்வே ஆஃப் இந்தியாவிலிருந்து சுமார் பதினோரு கிலோமீட்டர் தொலைவில் கடலுக்குள் அமைந்துள்ள ஒரு தீவு கராபுரி (Gharapuri). கராபுரி என்றால் குகைகளின் நகரம் என்று பொருள். இத்தீவு சுமார் 25 கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. இத்தீவில் பல குடைவரை குகைகள் அமைந்துள்ளன. இத்தீவில் கி.பி.2 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.13 ஆம் நூற்றாண்டு வரை பல்வேறு காலகட்டங்களில் உருவாக்கப்பட்ட ஏழு குகைகள் அமைந்துள்ளன. இவற்றிற்கு “எலிஃபெண்டா குகைகள்” என்று பெயர். இவை ஒரு அற்புதமான கலைப்பொக்கிஷங்கள் என்றால் அது மிகையல்ல. இக்குகைகளில் பிரமிக்க வைக்கும் ஏராளமான சிற்பங்களும் அமைந்துள்ளன.

கடல் மட்டத்திலிருந்து 173 மீட்டர் உயரத்தில் ஸ்தூபி மலை மற்றும் கேனான் மலை என இரண்டு மலைகளுடன் இத்தீவு அமைந்துள்ளது. இத்தீவின் ஒரு பகுதியில் மராட்டியப் பேரரசால் இரண்டு பீரங்கிகள் வைக்கப்பட்டன. கேனான் மலைப் பகுதியில் பிரதான குகைகள் அமைந்துள்ளன.

கி.பி.2 ஆம் நூற்றாண்டில் ஹினயானம் அமைப்பைச் சேர்ந்த பௌத்தர்கள் ஆள் நடமாட்டம் இல்லாத இந்த காரபுரித் தீவில் குடியேறினர். இதன் பின்னர் கி.பி.4 ஆம் நூற்றாண்டில் சத்ரபதிகளின் ஆட்சி ஏற்பட்டதும் இப்பகுதி அவர்களின் வசமானது. பின்னர் குஜராத் சுல்தான்கள் வசம் சென்ற இத்தீவினை கி.பி.1534 ல் போர்ச்சுக்கீசியர் களுக்கு பரிசாகத் தந்தார்கள்.

இதையும் படியுங்கள்:
பொடுகுத் தொல்லையா? இதோ உங்களுக்காக பயனுள்ள எளிய குறிப்புகள்!
எலிஃபெண்டா குகைகள்...

இத்தீவிற்கு வருகை தந்த போர்ச்சுக்கீசியர்கள் இங்கிருந்த ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட யானைச் சிற்பத்தைக் கண்டு பிரமித்து இப்பகுதிக்கு எலிஃபான்டே என்று பெயரிட்டனர். நாளடைவில் இது மருவி எலிஃபெண்டா என்ற பெயர் நிலைத்துவிட்டது. போர்ச்சுக்கீசியர்களிடமிருந்து வேறு சில மன்னர்களிடம் சென்று ஒரு கட்டத்தில் ஆங்கிலேயர்கள் வசமானது. போர்ச்சுக்கீசியர்கள் காலத்தில் கலைச்சிற்பங்கள் மற்றும் குகைகள் சேதப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கலைச்சிற்பங்கள்...
கலைச்சிற்பங்கள்...

முதலில் காணப்படும் குகையானது கி.பி.5 முதல் கி.பி.7 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் சாளுக்கியர்களால் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மற்ற குகைகள் அனைத்தும் கி.பி.9 முதல் 13 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் சில்காரா மன்னர்களின் காலத்தைச் சேர்ந்தவையாக கூறப்படுகிறது. ஒரு குகை முழுவதும் சிவபெருமான், பார்வதிதேவி, அர்த்தநாரீஸ்வரர், கங்கை, யமுனை, சரஸ்வதி என பல்வேறு தெய்வ வடிவங்களுடன் காட்சி தருகின்றன.

குகைச் சுவர்களில் 16 அடி உயரத்தில் சிவனின் வடிவம் மற்றும் 17.9 அடி உயரத்தில் மூன்று தலைகளுடன் சிவனின் திரிமூர்த்தி சிற்பம் காட்சி தருகிறது. மூன்றாவது குகையானது ஆறு தூண்களுடன் கூடிய மண்டபமாக ஒரு சன்னிதியுடன் அமைந்துள்ளது. சன்னிதிக்குள் தெய்வ உருவம் ஏதுமில்லை. இவ்வாறாக இத்தீவு முழுவதும் கலை நயமிக்க சிற்பத்தொகுதிகளுடன் காட்சி தருகிறது.

கலைக் கருவூலமான எலிஃபெண்டா குகைகளை 1987 ஆம் ஆண்டில் நடைபெற்ற யுனெஸ்கோ மாநாட்டில் உலக பாரம்பரிய இடமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தற்போது எலிஃபெண்டா தீவானது இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

எலிஃபெண்டா குகைகள்...
எலிஃபெண்டா குகைகள்...

மும்பையில் லோனாவாலா பகுதியிலும் ஏராளமான குகைகள் அமைந்துள்ளன. இதுமட்டுமின்றி மும்பை போரிவாலி பகுதியில் அமைந்துள்ள சஞ்சய் காந்தி தேசிய பூங்காவிற்குள்ளும் கன்ஹேரி குகைத் தொகுதிகள் அமைந்துள்ளன.

மும்பையின் கேட்வே ஆஃப் இந்தியா பகுதியிலிருந்து காலை ஒன்பது மணி முதல் மதியம் இரண்டு மணி வரை எலிஃபெண்டா தீவிற்குச் செல்ல படகுகள் இயக்கப் படுகின்றன. சுமார் ஒரு மணிநேர கடல் பயணம். தீவிலிருந்து மும்பைக்குத் திரும்ப கடைசி படகு மாலை 05.30 மணிக்கு இயக்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com