யூரோப் சுற்றுலா (1) - காபரேயும் கண்டு களி!

புதுப்புது மனிதர்களுடன் புதுப்புது நாடுகளில் சுமார் இருபது நாட்கள் சுற்றி வரப்போகிறோம் என்ற நினைப்பே இனித்தது.
Europe Tour - London
Europe Tour - London
Updated on

த்திய அரசு அலுவலகம் ஒன்றில் பணி புரிந்துகொண்டிருந்த நான், ஓய்வுபெறும் வயதை எட்டி, பணி ஓய்வும் பெற்றுவிட்டேன். பர்சனல் கமிட்மென்ட்ஸ் சில இருந்ததையும் செவ்வனே செய்து முடித்துவிட்டோம். இனி நமக்கான இரண்டாம் இன்னிங்ஸ் வாழ்கையைத் தொடங்கலாம் என நானும் என் கணவரும் எண்ணினோம். அதன் விளைவுதான், நாங்கள் முதன்முறையா வெளிநாடுகளுக்கு ஓர் இன்ப சுற்றுலா சென்று வரலாம் என திட்டமிட்டது.

குறைந்தபட்சம் பதினைந்து நாட்களாவது சென்று வரலாம் என நினைத்தபோது முதல் தேர்வாக கண்முன் விரிந்தது சுவிட்சர்லாந்தை உள்ளடக்கிய யூரோப் டூர்தான். இருவர் கருத்தும் ஒருமித்து இருந்ததால், உடனே பயண ஏற்பாடுகளைத் தொடங்கினோம்.

ட்ராவல் ஏஜென்சி மூலமே செல்ல விரும்பி, பிரபலமான ஏஜென்சி ஒன்றை அணுகினோம். யூரோப் டூருக்காக அவர்கள் கேட்டபடி பாஸ்போர்ட், பைனான்சியல் சப்போர்ட்டுக்கான டாக்குமெண்ட்ஸ் மற்றும் விசா ஃபீஸ் உள்ளடக்கிய மொத்த தொகையையும் கொடுத்து முடித்தோம். பின், நாங்கள் புறப்பட வேண்டிய தேதி, டிக்கெட் விவரம், தேதி வாரியாக பயண விவரங்கள் அடங்கிய கையேடு ஆகியவற்றை எங்களுக்கு அளித்தனர்.

நாங்கள் செல்லவிருந்த குழுவில், வெவ்வேறு
மாநிலங்கள் / நாடுகளில் இருந்து வந்திருந்த சுமார் ஐம்பது பேர் இருந்தனர். புதுப்புது மனிதர்களுடன் புதுப்புது நாடுகளில் சுமார் இருபது நாட்கள் சுற்றி வரப்போகிறோம் என்ற நினைப்பே இனித்தது. அவர்களில் மூன்று குடும்பத்தினர் நிரந்தர நண்பர்களாகி, அவர்களுடனான நட்பை என்றும் தொடர்ந்துகொண்டிருப்போம் என்று அப்போது நான் நினைக்கவில்லை.

Europe Tour
Europe Tour

முதல் நாள்:

புறப்பட வேண்டிய நாள் வந்தது. சென்னையில் இருந்து கிளம்பி, மும்பை சென்றடைந்தோம். அங்கிருந்து லண்டன் செல்லவேண்டும். செல்லவேண்டிய விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக்கோளாறால் இரண்டு மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. இரவு ஏழு மணிக்குத்தான் லண்டன் சென்றடைந்தோம். ஹோட்டலில் செட்டில் ஆகி டின்னர் சாப்பிடத்தான் நேரம் இருந்தது.

இரண்டாம் நாள்:

றுநாள் காலை சிற்றுண்டிக்குப்பின் சிட்டி டூர் கிளம்பினோம். ஆங்கிலம் பேசும் கைடு ஒருவர் உடன்வர, பிரைவேட் பஸ்சில் பயணித்து, லண்டனில் குறிப்பிட்டுப் பார்க்கவேண்டிய மிக முக்கிய இடங்களான பக்கிங்காம் பேலஸ், டவர் பிரிட்ஜ், வெஸ்ட் மின்ஸ்டர் அபே, லார்ட்ஸ் கிரிக்கெட் ஸ்டேடியம், பிக் பென், ரிவர் தேம்ஸ் ஆகியவற்றைப் பார்த்து முடித்தோம்.

மதிய உணவுக்குப்பின் முதலில் சென்றது பிரசித்தி பெற்ற மேடம் துஸ்ஸாட்ஸ் அருங்காட்சியகம். இதனுள் உலகப்புகழ் வாய்ந்த தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமாத் துறை சார்ந்த பிரபலங்கள், அரசியல் முக்கியஸ்தர்கள் என அனைத்து நாட்டு விஐபிக்களின் உருவங்களும் மெழுகில் மிகத் தத்ரூபமாக உருவாக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அவற்றைக் கண்டுகளித்ததோடன்றி, விரும்பிய சிலைகளின் அருகில் நின்று புகைப்படமும் எடுத்துக்கொண்டோம்.

அடுத்ததாக தேம்ஸ் நதிக்கரையில் அமைந்துள்ள 'லண்டன் ஐ' எனப்படும் மிகப்பெரிய ஆப்செர்வேஷன் வீலில் ஏறி சுமார் 450 அடி உயரம் சென்று அம் மாநகரின் மொத்த அழகையும் கண்டு ரசித்தோம். பின், தியேட்டர் ஒன்றுனுள் சென்றமர்ந்து, 'சமாதானம்' என்ற குறும்படம் ஒன்றைப் பார்த்துவிட்டு அந்த நாள் இனிதாக முடிந்த களிப்புடன் இருப்பிடம் திரும்பினோம்.

Europe Tour
Europe Tour

மூன்றாம் நாள்:

ண்டனில் இருந்து பாரிஸுக்கு பஸ்ஸில் புறப்பட்டோம். இரண்டுக்கும் இடையில் சவுத் இங்கிலாந்தில் இருக்கும் ஃபோக்ஸ்டோன் (Folkestone) என்ற இடத்தில் இருந்து ஃபிரான்ஸில், கலாய்ஸ் (Calais) என்ற இடம் வரை ஒரு ஐம்பது கிலோமீட்டர் தூரத்தைக் கடலுக்கு அடியில் 'லீ ஷட்டில்' என்னும் 'யூரோ டனல் ஷட்டில்' மூலம் பயணித்துக் கடக்கவேண்டியிருந்தது. ட்ரெயின் வடிவிலான அந்த ஷட்டில் உள்ளே, ஒரே நேரம் 12 கோச் மற்றும் 120 கார்களை எடுத்துச் செல்லும் வசதியுள்ளது. பயணம் செய்யும் பயணிகள், அவரவர் வாகனங்களில் இருந்தபடியே, தங்கள் வாகனத்தை. ஷட்டில் உள்ளே ஓட்டிச்சென்று நிறுத்திக்கொள்ளலாம். எங்கள் பஸ்ஸும் ஷட்டில் உள்ளே சென்று நிறுத்தப்பட்டது.

நாங்கள் அனைவரும் எங்கள் இருக்கையில் அமர்ந்துகொண்டு, பிரகாசமான வெளிச்சமும், ஏர்கண்டிஷன் மூலம் குளிர்ந்த சூழ்நிலையும்கொண்ட அந்த யூரோ டனல் ஷட்டில் பயணத்தை ரசித்து அனுபவித்தோம். ஐம்பது கிலோமீட்டர் தூரத்தை
31 நிமிடங்களில் கடந்து எங்களை பஸ்ஸுடன் பத்திரமாக கலாய்ஸில் கொண்டுபோய் சேர்த்தது அந்த ஷட்டில். இந்த அனுபவம், டூரில் நான் எதிர்பாரத ஒன்று. அதன் பிரமிப்பிலிருந்து விடுபட, நீண்ட காலமானபின்னும், முடியவில்லை.

சில மணி நேரப் பயணத்திற்குப் பின், உலகையே கவர்ந்திழுக்கும் பேஷன் தலைநகரமாம் பாரிஸ் நகரை சென்றடைந்தோம். அங்கும் அனுபவம் மிக்க கைடின் வழிகாட்டுதலுடன், அலெக்சாண்டர் பிரிட்ஜ், ஓபெரா ஹவுஸ், கான்கார்ட் ஸ்கொயர் மற்றும் பல நினைவுச்சின்னங்களை எல்லாம் பார்த்தோம்.

பிறகு, பிரமிக்க வைக்கும் உயரத்தில், வானையும் பூமியையும் இணைக்க முயற்சிப்பதுபோல நிமிர்ந்து நிற்கும், உலக அதிசயங்களில் ஒன்றான ஈஃபில் டவருக்குச் சென்றோம். மின்தூக்கியில் அதன் மூன்றாம் லெவலுக்குச் சென்று, அங்கிருந்து பாரிஸ் நகரின் முழு அழகையும், சுற்றிசுற்றி வந்து கண்டு ரசித்தோம்.

அங்கே செம அழகான பின்னணியில், 'முத்தமிடும் இடம் (A place to kiss)' என்ற வாசகத்துடன் ஓர் இடம் காணப்பட்டது. அங்கு, தமிழ்நாடு உள்பட, பல நாடுகளிலிருந்து வந்திருந்த ஜோடிகள் பலர், வயது வித்தியாசமின்றி, தங்கள் துணையை விதவிதமான போஸில் முத்தமிட்டபடி, படம் பிடித்துக்கொண்டிருந்தனர். காண்போர் கண்களுக்கு அது கவர்ச்சி விருந்தளிப்பதாயிருந்தது.

அன்றிரவு, டின்னரை முடித்துவிட்டு, 11 மணிக்கு மேல், 'லிடோ ஷோ' (Lido Show) என்னும் இரவுக்காட்சிக்கு, விருப்பம் உள்ளவர்கள் மட்டும், நூறு யூரோ கட்டணம் செலுத்தி சென்றுவந்தோம். அந்த ஷோவில் சுமார் ஐம்பது, இளம் ஆண்களும், பெண்களும் பங்கேற்றிருந்தனர். கவர்ச்சிப் பதுமைகளாய், அரை நிர்வாணத்தில், அவர்கள் புரிந்த சாகச விளையாட்டுக்கள் மெய் மறக்க வைத்தது. நம் ஊர் பழமொழியான, 'களவும் கற்று மற' என்பதோடு, 'காபரேயும் கண்டு களி' என்பதை சேர்த்துக்கொள்ளலாம்போல் தோன்றியது!

(பயணம் தொடரும்... 2)

logo
Kalki Online
kalkionline.com