

ஒன்பதாம் நாள்:
சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில், ஹோட்டல் 'தெஸோனி' (Thessoni) யில் இன்றையப் பொழுது விடிந்தது! சிற்றுண்டியை முடித்தோம். பயணத்தின் ஹைலைட்களில் ஒன்றான ஜங்ஃபராஜோச் (Jungfraujoch) என்றழைக்கப்படும் ஐரோப்பாவின் மிக உச்சப்பகுதிக்கு (Top of Europe) இன்று செல்லத் தயாரானோம்.
எங்கள் பஸ்ஸில் அமர்ந்து 'லாட்டர்பிரன்னென்' (Lauterbrunnen) என்ற அழகிய ஊரை சென்றடைந்தோம். வழி நெடுக சிறு சிறு கிராமங்கள், காடுகள், பச்சைப் பசேலென்ற மேய்ச்சல் நிலங்கள் போன்றவை கண்ணுக்கு விருந்தளித்தன. அந்த ஊரில் இருந்து மேற்கொண்டு பயணத்தை மலை ரயிலில்தான் தொடர வேண்டும்.
எனவே, அங்கிருந்து காக் வீல் (CogWheel) ரெயில்வே ட்ரெயினில், 3454 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள யூரோப்பாவின் மிக உயரமான ரயில்வே ஸ்டேஷனாகிய ஜங்ஃபராஜோச்சுக்குப் பயணிக்கலானோம்.
இங்கே, அந்த செங்குத்தான ரயில் பாதையை அமைத்ததின் கதையை சுருக்கமாகச் சொல்ல விரும்புகிறேன். பனிப்பாறைகள் மீது டனல் அமைத்து, ரயில்பாதை அமைக்கும் பணிக்குத் திட்டம் போட்டது 1893ஆம் ஆண்டு. 100 இத்தாலியன் வேலையாட்களைக் கொண்டு பணி ஆரம்பித்தது 1896ஆம் ஆண்டு. ஒவ்வொரு ஸ்டேஷனாக கட்டி முடித்து, நடுவில் பைனான்ஸ் பிரச்சனை காரணமா இரண்டு ஆண்டுகள் பணி நிறுத்தப்பட்டு, பின் மீண்டும் தொடர்ந்து, 16 ஆண்டுகளுக்குப்பின் ரயில் பாதை முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டது. 1-8-1912ல் ஜங்ஃபராஜோச் ரயில்வே ஸ்டேஷன் திறப்புவிழா கண்டது.
இப்பாதைக்கான மொத்த செலவு 16 மில்லியன் ஃப்ராங்க்ஸ். இது ஆரம்பத்தில் போட்ட மதிப்பீட்டின் இரண்டு மடங்கு ஆகும். இதனாலேயே ரயில்வே டெக்னாலஜியில், உலக அதிசயங்களில் ஒன்றாகத் திகழ்கிறது இந்த ரயில்வே. நூறாண்டுகள் கடந்தும் வெற்றிகரமாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் இதன் சேவையைப் பாராட்டியே ஆகவேண்டும்.
எங்கள் பயணத்தின்போது, வழி நெடுக பனி மற்றும் பனிக்கட்டியால் மூடப்பட்ட வானளாவிய மலைகள், பள்ளத்தாக்குகள், பாறைகளின் மீதுள்ள சிறு சிறு பள்ளங்களில் பனிப்பாறைகளிலிருந்து உருகிய நீர் நிரம்பி, நீல நிறத்தில் காணப்பட்ட குட்டைகள் என கண்ணுக்கு விருந்தளித்த காட்சிகள் ஏராளம்... ஏராளம். ரயிலில் எங்களுக்கு ஸ்விஸ் சாக்லேட் வழங்கப்பட்டது. நாவில் கரைந்த அதன் சுவை... அ...ப்...பா... இணையில்லாதது!
இரண்டு மணி நேரத்தில் ரயில் ஜங்கபராஜோச் ஸ்டேஷனில் வந்து நின்றது. பலத்த ஆரவாரத்துடன் கீழிறங்கினோம். அனைவரும், விண்வெளியில் பயணிக்கும் வீரர்கள்போல், குளிரைத் தாங்கும் கம்பளி ஆடைகளை உச்சி முதல் உள்ளங்கால் வரை அணிந்திருந்தோம். ஸ்டேஷன் அருகிலேயே ஒரு பில்டிங் காம்ப்ளெக்ஸ் இருந்தது. அதனுள் சென்றோம்.
முதல் நிகழ்வாக, அங்கிருந்த ரெஸ்டாரென்டில் ஷாம்பைன்னுடன் கூடிய ஸ்பெஷல் லஞ்ச் எங்களுக்குகாகக் காத்திருந்தது! ஸ்விட், ஐஸ்கிரீம், ஃபுரூட் சாலட்டுடன் பரிமாறப்பட்ட வகை வகையான, சுவை மிக்க உணவு அயிட்டங்களை ஒருபிடி பிடித்தோம். பின், வாழ்நாளில், அநேகமா ஒரே ஒருமுறை மட்டுமே சென்று வரக்கூடிய அந்த ஸ்பெஷலான இடத்தில் நாம் இருக்கிறோம் என்ற நினைப்பில் ஏற்பட்ட உற்சாகத்தில், சின்னக் குழந்தைபோல் தரையில் இருந்து எகிறிக் குதித்தபடி வெளியில் வந்தோம்.
எங்கள் டுர் மேனேஜர், அங்கே நாங்கள் பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியல் மற்றும் ஒரு வரைபடத்தையும் கையில் கொடுத்து, மீண்டும் அவரை நாங்கள் அந்த இடத்தில் சந்திக்க வேண்டிய நேரத்தையும் சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.
சக பயணிகள் அனைவரும் பிரிந்து, பிரிந்து சென்றுவிட நாங்களும் வரைபடத்தைப் பார்த்து அதன்படி சென்றுகொண்டிருந்தோம். காபி ஷாப், கிஃப்ட் ஷாப், வேறெங்கும் வாங்கக் கிடைக்காத தனித்துவமான சுவைகொண்ட ஸ்பெஷல் சுவிஸ் சாக்லேட் விற்பனைக்கூடங்கள் ஆகியவற்றினுள் நுழைந்து, வாங்க வேண்டியதை வாங்கிக்கொண்டோம். இயற்கைக்காட்சிகளைக் காணவென்று குறிப்பிட்டிருந்த இடத்திற்குச் சென்றோம்.
வெளியில் பார்த்தபோது, ஏதோ ஒரு அதிசயமான மாயாஜால உலகினுள் இருப்பதுபோன்ற உணர்வு ஏற்பட்டது. பனிச்சறுக்கு விளையாட்டு, மலையேற்றம் போன்றவையும் வெளியே நடந்துகொண்டிருந்தது. பரவசத்தில் மெய் மறந்தோம். உள்ளே டனல் போன்ற அமைப்புடன் ஓர் 'ஐஸ் பேலஸ்' உள்ளது. அங்கே கரடி, கழுகு, பென்ங்குயின் உருவ வடிவங்களை, பனிக்கட்டியில், கிரிஸ்டல் போன்று தெளிவாக உருவமைத்து வைத்துள்ளனர்.
ஸ்டுடியோ ஒன்றில், டூரிஸ்டுகள் கட்டணம் செலுத்தி, தங்கள் உருவத்தை தாம் விரும்பிய மனிதர் வடிவில், (ராணி எலிசபெத், மைக்கேல் ஜாக்சன், சார்லி சாப்ளின், வேட்டைகாரன், பூக்காரின்னு பாகுபாடின்றி) ஆடை அணிகலன் அணிந்து, மேக்கப் போட்டு, போட்டோ எடுத்து, அவற்றின் பிரதியை உடனே பெற்றுக்கொள்ளும் வசதியும் இருந்தது.
இவை மட்டுமின்றி, டூரிஸ்ட்களை மேலும் மேலும் கவர்ந்திழுக்க, ஆங்காங்கே இடங்களை விரிவுபடுத்தி, புதுப்புது விஷயங்களைத் தெரியப்படுத்தவும் செய்கின்றனர். 'ஆல்பைன் சென்சேஷன்' (Alpine Sensation) என்றோர் இடம். அங்கு 'சுவிட்சர்லாந்தின் சிறு கனவு', 'மலைகளின் இரகசியம்', 'ஜங்ஃபராஜோச்சில் அந்தக் கால டூரிஸம்', 'காக் வீல் ரயில்வே அமைக்க பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு மரியாதை' என்ற தலைப்புகளில் எல்லாம் காட்சிகளை அமைத்து, சிறிய மியூசியம்போல் வைத்துள்ளனர். 3571 மீட்டர் உயரத்தில் Sphina Terrace உள்ளது. சுவிஸ் நாட்டுக் தேசியக் கொடியும் பறக்கிறது.
புறப்படும் நேரம் நெருங்கியதால், டூர் மேனேஜர் சொன்ன இடத்துக்குச் சென்றோம். அங்கிருந்த ரயில்வே அலுவலகத்தில், எங்கள் அனைவருக்கும் பாஸ்போர்ட் மாதிரியான ஒரு புத்தகம் கொடுத்தனர். அதன் அட்டையில் ஜங்ஃபரோ ரயில்வேஸ் பாஸ்போர்ட் என்றிருந்தது. உள்ளே, நாங்கள் அங்கு சென்றதற்கானச் சான்று, தேதி, நேரம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு ஸ்டாம்ப் போட்டிருந்தனர். அதைப் பெற்றுக்கொண்டு, அங்கு வந்ததைப் போலவே, திரும்பிச்சென்று ஹோட்டலை அடைந்தோம்.
(பயணம் தொடரும்... 4)