யூரோப் சுற்றுலா (4) - கிரிஸ்டல் உலகமா? சொர்க்கலோகமா?

Europe Tour - Swarovski Crystal Museum
Europe Tour - Swarovski Crystal Museum
Updated on
Europe Tour
Europe Tour

பத்தாம் நாள்:

ஹோட்டல் தெஸோனியில் காலை உணவை முடித்தோம். அதன்பின் சுவிட்ச்சர்லாந்தில் ஆல்ப்ஸ் மலையின் மற்றொரு புறம் அமைந்துள்ள மவுண்ட் டிட்லிஸ் (Mount Titlis) என்ற பனி மூடிய மலையைக் காணப் புறப்பட்டோம். சுமார் 3,020 மீட்டர் உயரமான இம்மலையின் உச்சிக்கு, உலகிலேயே முதல்முறையாக அமைக்கப்பட்ட 'ரோடைர்' (Rotair) என்னும் சுழலும் கேபிள் காரில் (Revolving Cablecar) பயணித்தது ஒரு சாகசமான அனுபவமாய் அமைந்தது. அங்குச் சென்றதும் கண்ணுக்கெட்டியத் தூரம் வரை பனிக்கட்டிகள் போர்த்திய மலைகளையே காணமுடிந்தது. பனிக்கட்டிகள் மீது காலை வைத்து, ஒருவயதுக் குழந்தைபோல தள்ளாடியபடி மெதுவாக ஒரு 25 மீட்டர் தூரம் வரை சென்றோம்.

'ஆல்ப்ஸ் மலையின் சிகரத்தில்... அழகிய ரைன் நதி ஓரத்தில்' என்ற 'சிவந்த மண்' படப் பாடல் வரிகள் ஞாபகம் வந்தது. சினிமா ஹீரோ- ஹீரோயின்போல் பாட்டெல்லாம் பாடாமல், குளிரில் நடுங்கியபடி, ஜோடியாக, தனித்தனியாக, நின்றுக்கொண்டு, அமர்ந்துகொண்டு என ஆல்ப்ஸ் மலையின் பின்னணியில் பல வகையில் போட்டோக்களை எடுத்துக்கொண்டு, மீண்டும் கேபிள் காரில் கீழே வந்து சேர்ந்தோம். 

பின் அங்கிருந்து சுவிஸ்ஸில் உள்ள லூசெர்னே (Lucerne) என்றதொரு அழகிய ஊருக்குச் சென்றோம். லூசெர்னே ஏரியின் கரையில், பனி சூழ்ந்த மலைகள் நிறைந்த இடத்தில் அமைந்துள்ள இந்த ஊரின் பிரமிக்க வைக்கும் அழகு சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுத்து இரண்டு நாட்களாவது அங்கு தங்க வைத்துவிடும்.  இந்த ஊரில் உள்ள பாறை ஒன்றில், டேனிஷ் சிற்பி Bertel Thorvaldsen என்பவரால் வடிவமைக்கப்பட்டு Lukas Ahorn என்பவரால் செதுக்கப்பட்ட Lion Monument ஒன்று உள்ளது. உலகப் புகழ் பெற்ற இந்த நினைவுச் சிலை 1820-1821 காலக்கட்டத்தில் செதுக்கப்பட்டது.

1792ஆம் ஆண்டு நடந்த பிரஞ்சுப் புரட்சியின்போது பாரிஸில் உள்ள Tuileries என்ற அரண்மனையில் வாழ்ந்துவந்த லூயிஸ் XVI என்ற அரசரின் பாதுகாப்புப் படையில் பல சுவிஸ் காவலர்கள் பணியில் இருந்து வந்தனர். அவர்களில் 760 பேர் புரட்சியாளர்களால் கொல்லப்பட்டனர். இறந்த வீரர்களின் விசுவாசம், துணிவு, தியாகம் ஆகியவற்றைப் போற்றும் வகையில் இந்த சிங்கச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

அடிபட்ட சிங்கம் ஒன்று உயிர் பிரியும் நேரத்தில், தனது பாதங்களில் ஒன்றை பிரஞ்ச் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கவசம் ஒன்றின் மீது வைத்துக்கொண்டும், சுவிச்சர்லாந்தின் தேசிய அடையாளத்தைக் குறிக்கும் மற்றொரு கவசத்தை தலைக்கருகில் பாதுகாப்பாக வைத்துக்கொண்டும் படுத்திருப்பதுபோல் சிலை சித்தரிக்கப்பட்டுள்ளது.

இதை அமெரிக்க எழுத்தாளர் Mark Twain என்பவர்,

"உலகிலேயே மிகுந்த சோகம் மற்றும் வலியைத் தத்ரூபமாகப் பிரதிபலிக்கும் அற்புதமான சிலை" என வர்ணித்துள்ளார். உலகம் முழுவதும் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முக்கிய இடமாக உள்ளது இந்தச் சிலை. கனத்த இதயத்துடன் சிங்கச் சிலையின் பின்னணியில் படம் எடுத்துக்கொண்டபின் புகழ்பெற்ற Kapell Brucke என்ற மரப்பாலம் ஒன்றையும் பார்த்தோம்.

பின் மதிய உணவை முடித்துக்கொண்டு, லூசெர்னே ஏரியில் சொகுசுப் படகில் சென்று இயற்கைக் காட்சிகளை மனம்கொள்ளும் மட்டும் ரசித்து மகிழ்ந்தோம். கொஞ்சம் ஷாப்பிங் செய்தபின் மீண்டும் ஜூரிச் வந்து ஹோட்டலில் ரிலாக்ஸாக அமர்ந்து சுவிட்ச்சர்லாந்தில் இருப்பதை நினைத்து பெருமையாகப் பேசிக்கொண்டிருந்தோம். அதன்பின்  டின்னருக்குச் சென்றோம்.

Europe Tour
Europe Tour

பதினொன்றாம் நாள்:

ன்று காலை சிற்றுண்டியை முடித்துக்கொண்டு, கண்களுக்கு குளிர்ச்சி தரும் பசுமையான புல்வெளிகள் நிறைந்த ஆஸ்திரியா நாட்டிற்கு பஸ்ஸில் செல்லத் தயாரானோம்.

ஆல்ப்ஸ் மலைத் தொடர்கள், கம்பீரமான கட்டடக்கலை மற்றும் வளமான கலாச்சார பாரம்பரியத்திற்குப் பெயர் பெற்ற நாடு ஆஸ்திரியா. ஆஸ்திரியாவின் மிக நீளமான Arlberg Tunnel என்னும் ரோடு டன்னல் வழியாக 14 கிலோமீட்டர் பயணித்து, இன்ஸ்பிரக் (Innsbruck) என்ற ஊரை சென்றடைந்தோம். உலகின் மிகப் பெரிய பனிக்குகை ஆஸ்திரியாவின் வெர்ஃபென் (Werfen) பகுதியில் உள்ளது.

முதலில் இன்ஸ்பிரக்கில் சிட்டி டூராக அதன் முக்கியமான அடையாளமான, உலகப் பிரசித்தி பெற்ற கோல்டன் ரூஃப் (Golden Roof) என்னும் கட்டடத்தைப் பார்த்தோம். ஆல்ப்ஸ் மலைத்தொடர்களின் பின்னணியில் அமைந்த கட்டடங்கள், வளைவுகள், கடைகள், காபி ஷாப்ஸ் நிறைந்த, சிறிதும் வசீகரம் குறையாத பழைய யூரோப்பின் தெருக்கள் வழியே காலார நடந்துசென்றோம். அவற்றுள் மிக முக்கியமான, சரித்திரப் புகழ் வாய்ந்த மரிய தெரேசியன் ஸ்ட்ரெஸ்ஸே (Maria-Theresien-Strasse) என்ற தெருவும் அடங்கும்.

பின், ஃபியூனிகுலர் ரயில்வே (Funicular Railway) மூலம்  ஹங்கர்பெர்க் (Hungerberg) என்ற மலை உச்சிக்குச் சென்றோம். அங்கிருந்து இன்ஸ்பிரக் நகரின் மொத்த அழகையும், ஊரைச் சுற்றிலும் அமைந்துள்ள ஆல்ப்ஸ் மலைத் தொடர்களையும் கண்டு ரசிக்க முடிந்தது.

பின், கீழிறங்கி லஞ்சை முடித்தோம். அதன் பின் வாட்டன்ஸ் (Wattens) என்னுமிடத்தில் உள்ள ஸ்வரோவ்ஸ்கி கிரிஸ்டல் ம்யூசியத்தை (Swarovski Crystal Museum) காணச் சென்றோம். அந்தக் கிரிஸ்டல் உலகத்தின் நுழைவு வாயிலே சொர்க்கலோகம்போல் ஜொலித்தது. அங்கிருந்த ஒளிப்பிழம்புடன் கேமராக்களின் 'பளிச்' ஒளியும் சேர்ந்து கண்களைக்  கூசச் செய்தன.

பேஸ்மென்ட் பகுதியில் சுமார் 18 அறைகளைக்கொண்ட இந்த ம்யூசியத்தில் பன்னாட்டு கலைஞர்களால் வடிவமைத்து உருவாக்கப்பட்ட கிறிஸ்டலிலான ஆபரணங்கள் மற்றும் பரிசுப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

மேலும், உலக அதிசயங்களான தாஜ்மஹால், பிரமிட்கள், எம்பயர் ஸ்டேட் பில்டிங் போன்றவற்றின் நகலையும் துல்லியமாகச் சிறிய வடிவில் கிரிஸ்டலால் உருவாக்கிக் காட்சிப்படுத்தியுள்ளனர். கலப்படமற்ற, நம்பகத்தன்மையுடைய இப்பொருட்களை வாங்குவதற்கும் அங்கே வசதியுண்டு.

1995ல் திறக்கப்பட்ட ஸ்வரோவ்ஸ்கியின் தலைமை தொழிற்சாலையகம் இங்குதான் உள்ளது. நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்குப் பரிசளிக்கத் தேவையானதை வாங்கிக்கொண்டு, அங்கிருந்து கிளம்பினோம்.

பஸ்ஸில் ஹோட்டலுக்குத் திரும்புகையில், மலைச்சரிவுகளிலும், அடிவாரங்களிலும் பசுக்களுக்காகப் பிரத்யேகமாக வளர்க்கப்பட்டுள்ள அடர்த்தியான புல்வெளிகளைக் கண்டோம். அங்கே கொழு கொழுவென்ற மாடுகள் தனியாகவும், கூட்டமாகவும் மேய்ந்து கொண்டிருந்தன.

அவற்றைக் கண்ட என் கணவர், "ஏதாவது ஒரு மாட்டிடம் சென்று எங்க ஊருக்கு வர்றியான்னு கேட்டுடாதே?" என்றார். "ஏன்?" என்றேன் நான். "குளு குளு ஆல்ப்ஸ் மலையின் அடிவாரத்தில் செழித்து வளர்ந்துள்ள புற்களை உண்டு கொழுத்திருக்கும் என்னை உங்க ஊருக்குக் கூட்டிச் சென்று பிளாஸ்டிக் கழிவுகளை உண்ண விடலாம்னு நினைக்கிறாயா?"ன்னு கேட்டு, கொம்பால் குத்தி மலையில் உன்னை உருட்டி விட்டுடும்" என்றார். அவர் தமாஷாக கூறியது, என்னை ஆழ்ந்து சிந்திக்கவைத்தது.

(பயணம் தொடரும்... 5)

logo
Kalki Online
kalkionline.com