யூரோப் சுற்றுலா (5) - பூலோக சொர்க்கம்; ரொமான்டிக் நகரம்... வெனீஸின் அழகோ அழகு...

Europe Tour - Venice
Europe Tour - Venice
Updated on
Europe Tour
Europe Tour

பனிரெண்டாம் நாள்:

ன்று காலை உணவுக்குப்பின் ஹோட்டல் அறையைக் காலி செய்தோம். அதன்பின் பஸ்ஸில் அமர்ந்து இத்தாலியை நோக்கி பயணிக்கலானோம். அங்கு சென்று மதிய உணவை முடித்துவிட்டு, கப்பல் துறைக்குச் (Pier) சென்றோம். அங்குள்ள தனியார் படகு ஒன்றில் அனைவரும் அமர்ந்து, தொடர்ந்து பயணிக்கலானோம்.

அது எங்களை, பாரம்பரியம் மிக்கதும், கவித்துவம் நிறைந்ததும், பூலோக சொர்க்கம் என அறியப்பட்டதுமான ரொமான்டிக் நகரமாம் வெனீசின் (Venice) இதயப்பகுதியான செய்ன்ட் மார்க்ஸ் சதுக்கத்தில் (St. Mark's Square) கொண்டுபோய்ச் சேர்த்தது. அங்குள்ள செய்ன்ட் மார்க்ஸ் கதீட்ரல், Doge's Palace, Bridge of Sighs ஆகியவற்றைப் பார்த்தோம்.

லகூன் என்னும் குளம் போன்ற நீருக்குள், 150க்கும் மேற்பட்ட சிறிய கால்வாய்கள்(canals), சிறு சிறு பாலங்கள், கிராண்ட் கனால் (Grand Canal) என்றழைக்கப்படும் மற்றொரு பெரிய கால்வாய் ஆகியவற்றால், அட்ரியாடிக் கடலின்(Adriatic Sea) கரையோரம் அமைந்துள்ள அழகிய நகரம் வெனிஸ். வெளிநாட்டுக்குச் சுற்றுலா செல்ல நினைக்கும் அநேக பயணிகளின் கனவு நகரம் இங்கு செல்பவர்கள் தவறாமல் அனுபவிக்க வேண்டிய மிக முக்கியமான ஒன்று, கால்வாய்களின் வழியே பயணித்து, நகரின் மொத்த அழகையும் கண்டு களிக்கும் வாய்ப்பைத் தரும் கொண்டோலா சவாரி!

அடிபாகம் தட்டையான, 36 அடி நீளம்கொண்ட, கைகளால் வனையப்பட்ட, ஆடம்பரக் கார் போன்ற அமைப்புடன் கூடிய, மர போட்(boat)களே இந்தக் கொண்டோலாக்கள். ரொமான்டிக் மூட் வரவழைக்கும் விதத்தில், வெல்வெட்டிலான சீட் கவர், மணி வகைகள் போன்றவற்றால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். இந்த கொண்டோலாக்களே வெனிஸின் வரலாற்று, பாரம்பரியச் சின்னமாகத் திகழ்கின்றன.

கிராண்ட் கனால் வழியே செல்லும்போது, Santa Maria della Salute, San Moise Church, Fenice Opera House, Clock Tower, Ca'Dolfin, Rialto Bridge போன்ற பழமையானதும், பிரபலம் மிக்கதுமான பல அரண்மனைகள், சர்ச்கள், நினைவுச் சின்னங்கள், பாலங்கள், ரெஸ்டாரன்ட்களையெல்லாம் காண முடிகிறது.

இவ்வாறான 170க்கும் மேற்பட்ட பழைமை மிக்கக் கட்டடங்கள், கிராண்ட் கனாலின் கரைகளில் அமைந்துள்ளன. அவைகளின் வரலாற்றுச் சிறப்புகளை வெனீஷியர்கள் மட்டுமே அறிந்துள்ளனர். அச்சிறப்புகளை, கொண்டோலா ஓட்டுனர்கள் பயணிகளிடம் விவரித்துக்கொண்டு வருவது பயணிகளுக்கு வெனிசைப் பற்றின கூடுதல் தகவல்களை அறிந்துகொள்ள உதவுகிறது.

சிறு கால்வாய்களுக்கிடையே, நீருக்குள், மரத்தால் கட்டப்பட்ட வீடுகளில் மக்கள் வசிக்கின்றனர். இவ்வீடுகள் காலத்தால் அழியாதவை. சிறு கால்வாய் வழியே நாம் கொண்டோலாவில் செல்லும்போது, ஜன்னல் அருகே குழந்தைகளுடன் அமர்ந்து அந்த மக்கள் நம்மை வேடிக்கை பார்ப்பது புதுமை. கொண்டோலாவில் செல்ல, செலவு கொஞ்சம் அதிகம்தான். ஆனால், அனுபவம் புதிது- தவிர்க்க முடியாதது.

அரை மணி நேரப் பயணத்திற்கு, நான்குபேர் வரை அமரக்கூடிய ஒரு கொண்டோலாவிற்கு எண்பது யூரோ, இரவானால் நூறு யூரோக்கள். நாங்களும் சிறிய கால்வாய்கள் வழியே கொண்டோலாவில் பயணித்து தனித்துவமான வெனிஸ் நகரின் அழகை ரசித்தோம்.

பின் வெனிசுக்கு அருகிலுள்ள முரானோ என்ற சிறு தீவிற்குச் சென்றோம். அங்குள்ள கண்ணாடித் தொழிற்சாலையும், ஆய்வுக்கூடமும் பிரசித்தி பெற்றவை. அங்கே உருவாக்கப்பெற்ற கண்ணாடியாலான வீட்டு உபயோகப் பொருட்களும், பரிசுப் பொருட்களும், ஆடம்பர அணிகலன்களும், பார்வைக்கு வைக்கப்பட்டு, விற்பனையும் செய்யப்படுகின்றன. கண்ணாடியாலான ஒரு சிறு குதிரையின் உருவத்தை, அதன் செய்முறை விளக்கத்தோடு, எங்களுக்கு செய்தும் காட்டினர். நாங்களும், தேவைப்பட்ட சில பொருட்களை வாங்கிக்கொண்டு, ஹோட்டலுக்குத் திரும்பினோம்.

Europe Tour
Europe Tour

பதினான்காம் நாள்:

லக அதிசயங்களில் ஒன்றான சாய்ந்த கோபுரத்தைத் தன்னகத்தே கொண்டிருக்கும் அந்த அற்புதங்கள் நிறைந்த அழகிய நகரமாம் 'பைசா'வைவிட்டு இன்று காலை, இத்தாலியின் தலைநகரான ரோம் நகரை நோக்கி எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம்.

ரோம் சென்று மதிய உணவை முடித்தோம். ஆங்கிலம் பேசும் வழிகாட்டியின் துணையோடு நகரத்தைச் சுற்றிப் பார்க்கச் சென்றோம். பார்த்துவிட்டுப் பின், ரோம் நகரின் எல்லைகளுக்குள்ளேயே அமைந்திருக்கும், உலகிலேயே மிகச் சிறிய நாடான வாடிகனுக்குச் சென்றோம்.

(பயணம் தொடரும்... 6)

logo
Kalki Online
kalkionline.com