யூரோப் சுற்றுலா (6) - 4,00,000 மக்கள், ஒரு மில்லியன் விலங்குகள் இறந்த வீர விளையாட்டுகள்!

வருடம்தோறும் சுமார் நான்கு மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் கொலோசியம்!
Europe Tour - Colosseum
Europe Tour - Colosseum
Updated on

அங்கு முதலில் வாடிகன் ம்யூசியத்தைப் பார்த்தோம். பின், Apostolic Palace என்னும் அரண்மனைக்குச் சென்றோம். கத்தோலிக்கச் சர்ச்களின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் போப் ஆண்டவர் வசிக்குமிடம் இந்த அரண்மனை. இந்த அரண்மனைக்குள்ளே, 1473-1481ல் கட்டப்பட்டு, ஒப்பிட முடியாத கலைநயத்துடன் உலகப் பிரசித்தி பெற்றுத் திகழும் தேவாலயமான சிஸ்டைன் சேப்பல் (Sistine Chapel) அமைந்துள்ளது. இதன் உட்புறச் சுவர்களும், மேற்கூரையும், மறுமலர்ச்சி அடைந்த இத்தாலியன் கலைநயத்துடன், அதி அற்புத வேலைப்பாடுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள ஓவியங்கள் கொலு வீற்றிருக்கும் இடங்களாகத் திகழ்கின்றன. 15ஆம் நூற்றாண்டுகளில், இதன் உட்புறச்சுவர்களின் பெரும்பகுதி பலதிறமை மிக்க ஓவியர்கள் மற்றும் சிற்பக் கலைஞர்களால் அழகுபடுத்தப்பட்டுள்ளன.

அதி நவீன நிபுணத்துவம் பெற்ற, சிறந்த கட்டிடக்கலை நிபுணர், சிற்பி, ஓவியர் என்று பன்முகத்தன்மை கொண்ட கலைஞரான மைக்கேல் ஏஞ்சலோ, தேவாலயத்தின் மேற்கூரை முழுவதையும், அங்குள்ள பலிபீடத்தின் பின்புறச் சுவர் முழுக்கவும், தன் கை வண்ணத்து ஓவியங்களால் நிறைத்து, காலத்தால் அழியாத கலைப்படைப்பாக உருவாக்கியுள்ளார். இவர் வரைந்த ஓவியங்கள், பைபிளில் கூறப்பட்டுள்ள The Last Judgement, The Last Supper, Creation of Adam, உள்பட ஒன்பது முக்கிய நிகழ்வுகளை விவரிக்கும் சித்திரங்களாய் மிளிர்கின்றன.

Europe Tour
Europe Tour

இவரின் இந்தப் படைப்புகள் மிகச் சிறப்பான, அற்புதமானவைகளாக கூறப்படுகின்றன. அவை அனைத்தும் காலத்தாலும், சுற்றுப்புறச் சூழல்களாலும், சிதைந்து, அழிந்து போய்விடாமல், குறிப்பிட்ட கால இடைவெளியில் புதுப்பித்து, நல்லவிதத்தில் பராமரிக்கப்பட்டும் வருகின்றன.

மைக்கேல் ஏஞ்சலோவால் உருவாக்கப்பட்ட, உடையுடன்கூடிய, உடை இல்லாத பல மனித வடிவங்கள் உயிரோட்டமாய் இங்கு நிறைந்திருக்கின்றன. இந்தக் கட்டடத்தின் மொத்த தரைப்பரப்பும், கைகளால் வரைந்து பெயிண்ட் செய்யப்பட்ட ஓவியம்போல் தோற்றமளிக்கும் அளவுக்கு, மிக நேர்த்தியாக மார்பிள், டைல்ஸ், கலர் கலர் கற்கள் ஆகியவற்றால் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

அதிலும் வரலாற்றுக் கதைகளை விவரிக்கும் வண்ணம் சில இடங்கள் டிசைன் செய்யப்பட்டுள்ளன. இந்தத் தேவாலயத்தின் உள்ளே, புத்தாண்டுக் கொண்டாட்டம் போன்ற மகிழ்ச்சி தரும் விழாக்கள் அவ்வப்போது நடத்தப்படுகின்றன.

சூழ்நிலை காரணமாக, புதியதொரு தலைமைப் போப்பாண்டவரை நியமிக்க வேண்டிய அவசியம் நேரும்போது, அதற்கான தேர்தல் இந்த ஆலயத்தின் உள்ளேதான் நடத்தப்படுகிறது. தேர்தல் நடந்து முடிந்து, புதிய போப் தேர்வானதும், அந்தச் செய்தியைப் பொதுமக்கள் தெரிந்துகொள்வதற்காக அங்குள்ள உயரமான சிம்னி வழியாக வெண்புகை 'குபு குபு'வென வெளியேற்றப்படுகிறது.

ஒரு பால்கனி போன்ற இடத்தில் சென்று அந்தச் சிம்னியை நாங்களும் பார்த்தோம். ஒவ்வொரு புத்தாண்டு பிறக்கும்போதும், நள்ளிரவில் போப்பாண்டவர் நேரில் நின்று, மக்களுக்கு நல்வாழ்த்துக்களுடன் ஓர் அறிக்கை விடுவார். அதைக்கேட்க மக்கள் கூடும் வளாகத்தையும், போப் நிற்கும் இடத்தையும் கைட் எங்களுக்குக் காட்டினார்.

இவை அனைத்தையும் பார்த்தபின், இந்தத் தேவாலயம் அமைந்துள்ள வளாகத்தினுள்ளேயே, அருகில் கட்டப்பட்டுள்ள மிகப்பெரிய செய்ன்ட் பீட்டர்ஸ் பசிலிகா (St.Peter's Basilica) என்னும் பேராலயத்தைக் காணச் சென்றோம். பிரம்மாண்டமான சதுக்கத்தில், மிக மிக அகலமான வடிவில், இரு பக்கமும், பிரமிக்க வைக்கும் எண்ணிலடங்கா தூண்களுடன் கம்பீரமாய் காட்சியளித்த அதன் முகப்புத் தோற்றத்தைப் பார்த்ததுமே மெய்மறந்து போனோம்.

கத்தோலிக்க கிறிஸ்த்துவர்களின் கூற்றுப்படி, இயேசுநாதரின் பன்னிரண்டு இறைத்தூதர்களின் தலைவராக விளங்கியவர் செய்ன்ட் பீட்டர் பிற்காலத்தில் ரோம் நகரின் முதல் பிஷப் என அறிவிக்கப்பட்டவர்.

1626ல் திறக்கப்பட்டுள்ள செய்ன்ட் பீட்டர்ஸ் பசிலிகா கட்டடத்தின் உயரம் 137 மீட்டர். உச்சியில் கும்ப வடிவிலான குவி மாடம் (roof), 42 மீட்டர் விட்டம் (diameter) கொண்டுள்ளது. அந்த இடம்வரை சென்று பார்க்க உள்ளேயே 551 படிகளைக் கொண்ட படிக்கட்டும் உள்ளது. சாகசம் புரிவதில் சாதுர்யம் மிக்கவர்கள் மட்டுமே ஏறமுடியும் என்பது வேறு விஷயம்!

இக்கட்டடத்தின் அடியில் பூமிக்குள், செய்ன்ட் பீட்டர் மற்றும் சில போப்கள், மன்னர்கள் ஆகியோரின் உடல்கள் புதைக்கப்பட்டுள்ளதாக வரலாறு கூறுகிறது.

இங்கும், வரலாற்று கதைகளைச் சித்தரிக்கும் சிற்பங்களும் ஓவியங்களும் அழகுறச் செதுக்கப்பட்டு/வரையப்பட்டு, காலத்தை வென்று, கவிதைகளாய் நிமிர்ந்து நிற்கின்றன. இவற்றிற்கெல்லாம் அதிகப்படியான பங்களிப்பை வழங்கியவர்கள், ஒப்பீடில்லாத தனித்துவம் நிறைந்த நிபுணர்களான மைக்கேல் ஏஞ்சலோவும் அவரின் கூட்டாளியான பெர்னினி (Bernini)யும் ஆவர். இவர்களின் கூட்டுமுயற்சியில் உருவான, இக் கலைக்களஞ்சியம் அவர்களின் படைப்புகளின் 'மாஸ்டர் பீஸஸ்' ஆக விளங்குகின்றன. அனைத்தையும் அமைதியாகப் பார்த்து ரசித்துவிட்டு, பேசக்கூட நா ஏழாமல், எங்களையே மறந்தநிலையில், வெளியே வந்தோம்.

அடுத்ததாக நாங்கள் பார்க்கச் சென்ற இடம், ரோம் நகரின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள, மிகப்பெரிய, தற்போது கொலோசியம் (Colosseum) என்றழைக்கப்படும் திறந்தவெளி விளையாட்டரங்கம். இது, அந்நாட்டை A.D 69-79களில் ஆட்சி செய்த வெஸ்பாசியன் ஃபிலேவியஸ் (Vespasian Flavius) என்ற பேரரசரால் கட்டப்பட்டதால், ஆரம்பக் காலங்களில் இதை அரசர் பெயரால் ஃபிலேவியன் (Flavian Amphi theatre) என்று அழைத்து வந்தனர்.

அதற்குமுன்பு, அங்கு ஆட்சி செய்தவன், வரலாற்றில் பேர்போன நீரோ மன்னன். அவன், அங்கு அரண்மனையைக் கட்டியெழுப்பி, அருகில் பெரிய ஏரியையும் உருவாக்கி இருந்தான். பிற்காலத்தில் ஆட்சிக்கு வந்த ஃபிலேவியன் மன்னன், அந்த ஏரியின் மீதுதான், இந்த கொலோசியத்தைக் கட்டினான்.

57 மீட்டர் உயரம், 188 மீட்டர் சுற்றுவட்ட நீளம், 156 மீட்டர் அகலமும்கொண்டு, 80 நுழைவு வாயில்களுடன் கட்டப்பட்ட, உலகிலேயே மிகப்பெரிதான கொலோசியம் இது! ரோமானிய மக்களை மகிழ்விக்க, மன்னரால் கட்டிக்கொடுக்கப்பட்ட மகத்தானதொரு, வரலாற்றுச் சிறப்புமிக்க பரிசாகும்.

A.D. 70ல், மன்னரின் இளைய மகனான டைட்டஸ் (Titus) என்ற இளவரசர், ஜெருசலமுடன் போரிட்டு, ஜெயித்து, அங்கிருந்து 50,000 கிலோ தங்கம்/வெள்ளி மற்றும் பல்லாயிரக்கணக்கில் அடிமைகளையும் கொண்டு வந்தார். திரட்டிவந்த செல்வத்தையெல்லாம், மன்னர், பலவித விளையாட்டுகளிலும், கொலோசியம் கட்டுவதிலும் செலவிட்டுள்ளார். A.D.72யில் ஆரம்பிக்கப்பட்ட கட்டுமானப்பணி, சுமார் பத்தாண்டுகளுக்குள் நிறைவடைந்துள்ளது.

அதிகாரம், கொடூரம், மேதைத்தனம் மிக்க மன்னர்கள் இந்த கொலோசியத்தினுள், க்ளேடியேட்டர் (Gladiator) என்றழைக்கப்படும், மிக்க திறமையும், பலமும் கொண்ட வாள் வீச்சு வீரர்களுக்குள் நடக்கும் வாள் சண்டை, கத்திச் சண்டை, மற்றும் சிங்கம், புலி, கரடி, முதலை, நீர் யானை போன்ற மிருகங்களுடன் வீரர்கள் மோதும் ஆக்ரோஷமான சண்டைகள், வீர விளையாட்டுகள், மிருகங்கள் மற்ற மிருகங்களுடன் மோதி சண்டையிடுவது, தண்ணீரை தரைப்பகுதியில் நிரப்பி கடலுக்குள் சண்டையிடுவது போன்ற நிகழ்ச்சிகளை அரங்கேற்றுவது, கைதிகளுக்குக், கொடுக்கப்படும் தண்டனைகளை நிறைவேற்றும் நிகழ்வு போன்றவற்றை நடத்தி மக்களை மிரட்சியடையவும், மகிழ்ச்சியடையவும் செய்துள்ளனர்.

நிகழ்ச்சிகள் தொடங்கும் முன் க்ளேடியேட்டர்கள் மற்றும் வனவிலங்குகளை அடைத்து வைப்பதற்காக கட்டிடத்திற்குக் கீழே பூமிக்குள் பல அறைகளையும். நடைபாதைகளையும் கட்டியிருந்தனர். இந்த நிகழ்ச்சிகளுக்காக மன்னர்கள் ரோமனியப் பேரரசின் பல பகுதிகளில் இருந்து விலங்குகளை வரவழைத்துள்ளனர்.

இவ்வாறெல்லாம் மன்னர்கள் மக்களுக்கு அளித்து வந்த இவ்வகையான கேளிக்கை மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் 500 ஆண்டுகள் தொடர்ந்து நடந்துள்ளன. இவ்விளையாட்டுக்கள் நடைபெற்ற நூற்றாண்டுகளில், 4,00,000 மக்கள், ஒரு மில்லியன் விலங்குகள் இறந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது.

அதன்பின், காலப்போக்கில் உண்டான இரண்டாம் உலகப்போர், இரண்டு பூகம்பங்கள் போன்றவற்றால் கட்டடத்தின் தோற்றத்திலும் உபயோகத்திலும் குறிப்பிடும்படியான மாற்றங்கள் ஏற்பட்டன. முழு கட்டடத்தின் மூன்றில் இரண்டு பகுதி இடிந்து சிதிலமடைந்துவிட்டது.

1900 வருட பழைமையாகி, தற்போது எஞ்சி நிற்கும், கம்பீரம் குறையாத அந்த உலக அதிசயத்தைப் பார்வையிட, உலகெங்கிலுமிருந்து, வருடம்தோறும் சுமார் நான்கு மில்லியன் சுற்றுலாப் பயணிகள் ரோம் நகருக்குப் படையெடுத்தவண்ணம் இருக்கின்றனர்.

(பயணம் தொடரும்... 7)

logo
Kalki Online
kalkionline.com