

பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகருக்கு அடுத்து, அங்கிருந்து சுமார் 640 கிலோமீட்டர் தொலைவில், மெடிட்டரேனியன் கடற்கரையில் அமைந்துள்ள ஸ்பெயின் நாட்டின் அழகிய, மிகப்பெரிய நகரமான பார்சிலோனோவுக்குப் புறப்பட்டோம்.
இந்நகரம், ஸ்பெயினின் ஓர் அங்கமான கேட்டலோனியா (Catalonia) பகுதியின் தலைநகரமாகும். பலவிதமான கலைகளுக்கும் பிரசித்தி பெற்ற நகரம். சிட்டி சைட்- சீயிங் டூராக பயணித்தோம். அந்தோணி கவுடி (Antoni Gaudi) என்ற கட்டடக்கலை நிபுணரால் வடிவமைக்கப்பட்டு நவீனமுறையில் கட்டப்பட்டுள்ள பல கட்டடங்களைப் பார்த்துப் பிரமிப்படைந்தோம். ஆங்காங்கே பல கேளிக்கை விடுதிகளுடன், மிக நீளநீளமாக தெருக்கள் அமைந்திருந்தன. பெரிய மால்களுள் சென்று ஷாப்பிங் செய்தோம். பின் பீச் சென்று அழகை ரசித்தபடி காலாற நடந்துவிட்டு டின்னருக்குச் சென்றோம்.
17ஆம் நாள்:
மறுநாள் அங்குள்ள உலகப்புகழ் பெற்ற La Sagrada (sacred) Familia என்ற கத்தோலிக்க சர்ச்சுக்குச் சென்றோம். இது 560 அடி உயரம் கொண்டுள்ளது. 1882ஆம் ஆண்டு கட்ட ஆரம்பித்து, 140 ஆண்டுகள் சென்றபின்னும் இன்னும் முடிவடையாத நிலையில் உள்ளது அந்தோணி கவுடி, அவர் காலத்தில் இதன் ஒரு பகுதியைத் தனித்துவமான ஸ்டைலில் நவீனமாக கட்டி முடித்துள்ளார்.
இவ்வாறு, மிகப் பழைமையும், புதுமையும் கலந்த கலவையாக, நான்கு உயர்ந்த டவர்களுடன் நிமிர்ந்து நிற்கும் இந்தப் பிரசித்தி பெற்ற சர்ச், உலகின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுத்தபடி உள்ளது (சென்ற ஆண்டு நயன்தாரா - விக்கி தம்பதியினர் தங்கள் இரண்டாவது தேனிலவின்போது சென்ற இடங்களில் இதுவும் ஒன்று)
1992ல் இங்கு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றன. அந்த விளையாட்டு அரங்கத்தையும் போய்ப்பார்த்தோம். 55,000 இருக்கைகள் கொண்ட மிகப் பெரிய ஸ்டேடியம். ஒலிம்பிக் கேம்ஸ் பார்க்கும் வாய்ப்பு அமையாத எங்களுக்கு, குறைந்தபட்சம் அந்த ஸ்டேடியத்தைப் பார்த்தது மிகுந்த திருப்தி அளித்தது.
வரலாற்றில், பல முறை முற்றுகையிடப்பட்டு சிதைக்கப்பட்ட நகரம் அது என்ற கூடுதல் தகவலும் கூறப்பட்டது. தற்போது மிக முக்கியமான கலாச்சார நடுவமாகவும் பாரம்பரியச் சின்னமாகவும் அந்த நகரம் விளங்குகிறது!
18ஆம் நாள்:
அடுத்த நாள் காலை டிபனை முடித்துக்கொண்டு 9 மணிக்கு முன்பாகவே கிளம்பிவிட்டோம். டூரின் கடைசி நாள், பார்சிலோனாவிலிருந்து 620 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள, ஸ்பெயினின் தலைநகரமான மேட்ரிட் (Madrid) நோக்கி சென்றுகொண்டிருந்தது எங்கள் பஸ். மேட்ரிட் சென்று, ஒரு அரை நாள்போல கிடைக்கும் நேரத்தில் அந்த ஊரை சுத்திப் பார்த்துவிட வேண்டும் என்பது பிளான்.
அதுவரைக்கும் எல்லாம் பிளான்படி சென்றுகொண்டிருந்தது. ஆனால், அன்றைக்கு, என் டூர் சென்டிமெண்ட்படி, விழுந்து எழுந்த அனுபவமும், வேறு பல இடையூறுகளும் நிகழ்ந்தன.
பார்சிலோனாவிலிருந்து புறப்பட்டு சுமார் ஒரு மணி நேரப் பயணத்தை முடித்திருந்தபோது, பஸ் ஏதோ கோளாறாகி நின்றுவிட்டது. டிரைவர் பஸ்சை ஓரங்கட்டி நிறுத்தினார். டூல்பாக்ஸை எடுத்து ரிப்பேரைச் சரி செய்ய முயன்றார். இருபது நிமிடங்கள் சென்றபின்னும் அவரால் சரி பண்ணமுடியல.
கம்பெனி மெக்கானிக்கை வரவழைக்க போன் பண்ணினார். பயணிகள் அனைவரும் பொறுமையா அமர்ந்திருந்தோம். முக்கால் மணி நேரத்தில் மெக்கானிக் வந்து சேர்ந்தார். அவர் ஒரு அரை மணி நேரம் வேலை செய்தும் பஸ் ஸ்டார்ட் ஆகல. இறுதியா, இந்த பஸ்ஸில் மேற்கொண்டு பயணிக்க இயலாது. வேறு பஸ் வரவழைக்க ஏற்பாடு பண்ணுங்கன்னு சொல்லிட்டு கிளம்பிவிட்டார். டூர் மேனேஜர் பேச வேண்டியவர்களுடன் பேசி மாற்று பஸ்ஸுக்கு ஏற்பாடு செய்தார். அதற்குள் நாங்கள் அனைவரும் பொறுமை இழந்தோம்.
வேறு பஸ் வர மேலும் ஒரு மணி நேரமாகலாம் என்ற நிலை காத்திருந்தோம், ரோட்டோரம். நாங்கள் அனைவரும் காத்திருந்த நேரத்தில், இயற்கை உபாதை காத்திருக்கத் தயாராயில்லை.
பஸ்ஸில் அமைக்கப்பட்டிருந்த எமெர்ஜென்சி ஸ்டோரேஜ் நாலு பேர் போனதும் ஃபுல் ஆயிடுச்சு. மற்றவர்கள் எல்லாம் அங்கே ரோட்டின் பக்கவாட்டு சரிவில் கொஞ்சம் கீழே சிமெண்டில் கட்டப்பட்டிருந்த மழை நீர் கால்வாயில் ஆங்காங்கே சென்று வந்தனர்.
எனக்கு கூச்ச சுபாவம் அதிகமிருந்ததால், கால்வாய்க்கு மேல், சரிவில் இருந்த ஒரு புதர் மறைவுக்கு செல்ல நினைத்தேன். ஷூ காலோடு சரிவில் கால் வைத்து ஒரு அடி ஏறியதும் கால் சறுக்கி கால்வாய்க்குள் மல்லாக்க விழுந்தேன். பண்ணிய புண்ணியமெல்லாம் சேர்ந்து காப்பாற்ற, தலை சிமெண்ட் சுவரில் மோதாமல் தப்பியது. கை, கால்களில் சரியான சிராய்ப்பு. விழுந்தது போலவே வேகமா எழுந்து, போன வேலையையும் முடித்து, பஸ்ஸுக்குத் திரும்பினேன்.
பையில் வைத்திருந்த முதலுதவிப் பெட்டியிலிருந்து, வெட் டிஸ்யூ எடுத்து துடைத்து, தேவையான ஆயிண்ட்மென்ட், பிளாஸ்திரி போட்டு நானே சமாளித்துக்கொண்டேன்.
பின், பன்னிரண்டு மணி வாக்கில் மாற்று பஸ் வந்து சேர, மீண்டும் பயணம் தொடர்ந்தது. இரண்டு மணிக்கு முன்பாக மேட்ரிட் சேர பிளான் பண்ணியது நான்கு மணிக்கும் மேலாகிவிட்டது.வரும் வழியிலேயே ஆளுக்கு பதினைந்து யூரோ கொடுத்து, நின்ற இடத்தில் லஞ்ச் முடித்துக்கொள்ள சொன்னார் மேனேஜர். மேட்ரிட் நகருக்குள் நுழைந்து எங்களை எங்கும் இறக்கிவிடவில்லை.
பஸ்ஸுக்குள் இருந்தபடியே அந்த அழகிய நகரையும், டூரிஸ்டாக அங்கு பார்க்க வேண்டிய முக்கிய இடங்களான ராயல் பேலஸ், பார்லிமென்ட் ஹவுஸ், ரியோ பார்க், நேஷனல் ஆர்ட் மியூசியம்,கடற்படை (Naval) மியூசியம்,சுமார் எண்பதாயிரம் பேர் அமரக்கூடிய, புகழ் பெற்ற Santiago Bernabeu ஃபுட்பால் ஸ்டேடியம், சரித்திரப்புகழ் வாய்ந்த ஸ்ட்ரீட் மார்க்கெட்,
பழைமையான சிதிலமடைந்த கட்டடங்கள், கலைநயம் மிக்க சிலைகளுடன் கூடிய நினைவுச் சின்னங்கள், நடைப்பயிற்சி செய்வதற்காக அமைந்துள்ள, செடிகள் மரங்கள் நிறைந்த ஓர் அழகான இடம், டவுன் ஸ்கொயர், கதீட்ரல், சர்ச், கார்டன்ஸ் என அனைத்து இடங்களையும் ஒரு கைடின் (guide) உதவியுடன் சுனாமி வேகத்தில் சுற்றிக்காட்டினர்.
சிறந்த வாழ்கைத் தரத்துடன், தென் ஐரோப்பாவின் பொருளாதார மையமாகத் திகழும் மேட்ரிட் நகரை இப்படி அவசரகதியில் சுற்றியது சிறிது திருப்தியின்மையைத் தந்தாலும், மறுநாள் காலை பத்து மணிக்கு ஃபிளைட் பிடித்து சொந்த நாட்டுக்குத் திரும்புகிறோம் என்ற நினைப்பு நிம்மதியாயிருந்தது.
டின்னர் முடித்து, ஹோட்டல் ரூம் சென்று பேக்கிங் செய்துவிட்டு தூங்கச் சென்றோம். மறுநாள் காலை சிற்றுண்டி முடித்து, பஸ்ஸில் ஏறி அமர்ந்து, ஏர்போர்ட் நோக்கி பயணித்தோம். அதற்கு அடுத்த நாள் அதிகாலை, சாக்லேட் மற்றும் பரிசுப் பொருட்களுடன், அதிக அளவில் இனிமையான நினைவுகளைச் சுமந்தபடி இல்லம் வந்து சேர்ந்தோம்.
***************
இந்தப் பயணத்தில், அருமையான உறுப்பினர்களைக்கொண்ட மூன்று குடும்பத்துடன் நட்பு ஏற்பட்டது.
முதலாவதாக, கோவாவை பிறப்பிடம்/இருப்பிடமாகக் கொண்ட திரு. அலெக்ஸ் திருமதி லூசி அலெக்ஸ் தம்பதியர் டூர் பீரியட் முழுக்க, ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்குச் செல்ல ஹோட்டல் ரூம் காலி செய்யும்போது, எங்கள் சூட்கேஸ்களை ரூம் வாசலில் பிக்கப் பண்ணி, ஹோட்டல் வாசலிலிருந்து சற்று தொலைவில் நிறுத்தப்பட்டிருக்கும் பஸ்ஸின் அடிப்பாகத்திலுள்ள ஸ்டோரேஜின் உள்ளே கொண்டு வைக்கும்வரை அந்த வேலையைத் தவறாமல் செய்து, சங்கோஜத்துடன் ஓரிரு முறை, "நீங்க விடுங்க, நாங்க பாத்துக்கிறோம் சார்"னு சொன்னா, "மேடம், இந்த மாதிரி உதவி நாங்க ஒவ்வொரு நாளும் ஒரு சில பேருக்காவது செய்யறதுதான், போங்க" என்பார். சாப்பாட்டுக் கூடத்தில் எங்கள் இருவருக்கும் சேர்த்து சீட் பிடிப்பது அவர் மனைவி லூசியின் வேலை.
இரண்டாவது, மைசூரிலிருந்து வந்திருந்த திரு.ஸ்ரீனிவாசன் சார் குடும்பம். அப்போதெல்லாம், என்னிடமிருந்த சிறு கைக்கேமராவை சரிவர கையாளவே தெரியாது எனக்கு. சாரும் அவர் மகனும் நிறைய உதவி பண்ணுவாங்க. ஒரு கட்டத்தில் அவங்ககிட்ட இருந்த ஏழு எட்டு கேமராக்களில் சுலபமா இருந்த ஒன்றை டூர் முழுக்க வச்சிக்கச் சொல்லிக் கொடுத்துட்டு, பின் அதை அவர் ஊருக்கு எடுத்துச் சென்று, படங்களை சிடியில் போட்டு, கொரியரில் எனக்கு அனுப்பி வைத்தார்.
மூணாவது, சவுத் ஆப்பிரிக்காவிலிருந்து வந்திருந்த திரு சாமுவேல் சாரும் அவர் மனைவியும். எங்களை நிறைய போட்டோ எடுத்து, ஊருக்குச் சென்று அவற்றைப் பிரித்து, அனுப்பி வைத்தார்.
இம்மூன்று குடும்பங்களும் இன்றும் தொடர்பில் இருக்காங்க. அவங்க வீட்டு விசேஷங்களுக்கு அழைப்பதும் சந்தித்துக்கொள்வதுமாய் தொடர்பு நீடிக்கிறது.
இம்மாதிரியான பயணங்கள் மூலம் அந்தந்த நாட்டு கலாச்சாரம், பண்பாடு, கலைகள், உணவுப் பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை அறிந்துகொள்கிறோம். உடம்புக்கும் மனதுக்கும் உற்சாகம் கிடைக்கிறது. நல்ல நட்பும் உருவாகிறது என்பது கூடுதல் மகிழ்ச்சி.
(சுற்றுலா நிறைவுற்றது)