ஒவ்வொரு வாகனம் ஓட்டுபவரும் கடைபிடிக்க வேண்டிய 3 விநாடிகள் விதி

ஒவ்வொரு வாகனம் ஓட்டுபவரும் கடைபிடிக்க வேண்டிய 3 விநாடிகள் விதி

ஒவ்வொரு வாகன ஓட்டியும், அவர் சிற்றுந்து ஓட்டுபவராகட்டும் அல்லது இருசக்கர வாகனம் ஓட்டுபவராகட்டும்,கடைபிடிக்க வேண்டிய விதி , 3 விநாடிகள் விதி. 

அதென்ன 3 விநாடிகள் விதி என்கிறீர்களா ? இந்த 3 விநாடிகள் விதியைக் கடைபிடிப்பதன் மூலம், வாகன விபத்துக்களைத் தவிர்க்க முடியும். 

இந்த விதியின் படி, வாகனமோட்டி தான் ஓட்டும் வாகனத்திற்கு, முன்பு செல்லும் வாகனம் ஒரு மரம் அல்லது விளக்கு கம்பம் போன்ற ஏதோ ஒன்றைக் கடந்த பின்னர், தனது வாகனம் அதே மரம் அல்லது விளக்கு கம்பத்தினைக் கடக்க 3 விநாடிகள் எடுத்துக் கொள்ளும் அளவிற்கு, பாதுகாப்பான இடைவெளியை முன்னே செல்லும் வாகனத்திற்கும், தனது வாகனத்திற்கும் இடையே கடைபிடிக்க வேண்டும். 

இதனைக் கடைபிடிப்பதன் மூலம், முன்னே செல்லும் வாகனம் திடீரென நின்றால் கூட, அவசரமாக தானும் பிரேக் அமிழ்த்தி, முன்னே செல்லும் வாகனத்தினை பின்புறமாக மோதாமல் இருக்க முடியும். அதற்கு இந்த 3 விநாடிகள் இடைவெளி தூரம் உதவும். நமது வாகனத்தின் எடை கூடும் போது, இந்த 3 விநாடிகள் தூரத்தினை 5 விநாடிகள் தூரமாக வைத்திருக்க வேண்டும். உதாரணமாக, எஸ்யூவி போன்ற அதிக எடையுள்ள வாகனங்களை நிறுத்துவதற்கு காலம் எடுக்கும். எனவே, 5 விநாடிகள் இடைவெளி தூரத்தைக் கடைபிடிக்க வேண்டும். லாரி போன்ற கனரக வாகனங்களில், இதனை இன்னும் அதிகப்படுத்தலாம். மேலும், அதிக வேகத்தில் செல்லும் போது, வாகனத்தை நிறுத்த நேரமாகலாம். எனவே, அப்போது, 5 விநாடி நேரத்திற்கான இடைவெளியைக் கடைபிடிக்கலாம். மழைக் காலம் போன்ற காலங்களில், வாகனத்தை நிறுத்த அதிக நேரமாகலாம். எனவே, மிதமான வேகத்தையும், 5 விநாடிக்கும் அதிகமான இடைவெளி தூரத்தையும் கடைபிடித்தால், அவசரமாக பிரேக் அமிழ்த்தும் போதும், முன்னே செல்லும் வாகனத்தைப் பின்பக்கமாக மோதுதலைத் தவிர்க்க முடியும். 

மேலும், சில காரணங்களால்,  வாகனத்தை வாகனமோட்டி, அவசரமாக நிறுத்தும் போது, பின்னர் ஏதாவது வாகனம் நெருங்கி வருகிறதா என்று பார்த்துவிட்டு, பிரேக்கை அமிழ்த்தி, பாதுகாப்பாக வாகனத்தை நிறுத்த வேண்டும். இதன் மூலம், ஏதாவது நெருங்கி வரும் வாகனம் தனது வாகனத்தைப் பின்புறமாக மோதுவதைத் தவிர்க்க முடியும். 

3 விநாடிகள் இடைவெளி விதியைக் கடைபிடிப்பதன் மூலம், நம்மால் நமது வாகனங்களைப் பாதுகாப்பாக நிறுத்த முடியும். விபத்துகளைத் தவிர்க்க முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com