நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி, குளிர்காலத்தில் கட்டாயம் சென்று பார்க்க வேண்டிய ஒரு தளமாகும். பொதுவாக குளிர்காலத்தில் வெப்பநிலை குறைவாகவும் , மேக மூட்டதுடனே இருக்கும் என்பதால் அழகாகவும், ஒரு இலகுவான மன நிலையையும் தரும். பிஸியான நகரத்தில் வாழ்ந்தவர்கள் இந்த இடத்திற்கு சென்றால் மனதிற்கு அமைதியாக இருக்கும். தேயிலை தோட்டங்கள், மலை ஏறுதல், பாறை ஏறுதல் மற்றும் பல அற்புதமான காட்சிகளை இங்கு பார்க்க முடியும்.
திருநெல்வேலி மாவட்டத்தில் மணிமுத்தாறு அணை மற்றும் நீர்வீழ்ச்சியின் மேல் உள்ள இடம் தான் மாஞ்சோலை. இந்த இடத்தில் அணைகள், நீர்வீழ்ச்சிகள், தேயிலை தோட்டங்கள், அப்பர் கோதையாறு அணை, குதிரை வெட்டி வியூ பாயின்ட் போன்றவை குளிர்காலத்தில் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்கள். குறிப்பாக குளிர்காலத்தில் மாஞ்சோலை அதிக பனியால் மூடி அழகான ஒரு இடமாக இருக்கும்.
உங்களுக்கு அதிகப்படியான காடுகளையும், விலங்குகளையும் பார்க்க வேண்டும் என்ற ஆசை உள்ளதா? அப்போது கட்டாயம் வால்பாறை நீங்கள் பார்க்க வேண்டிய ஒரு இடம். காடுகள் சூழ்ந்த அந்த இடத்தை வியூ பாய்ண்டில் நின்று பார்க்கும்போது அந்த பசுமை உங்கள் மனதில் ஒரு பாசிட்டிவ் எனர்ஜியை கொடுக்கும். அந்த இடத்தில் நீர்வீழ்ச்சி, வளைவான பாதைகள், தேயிலை தோட்டங்கள், நீர்வீழ்ச்சி பக்கம் பூத்துக்குலுங்கும் வண்ணப்பூக்கள் உங்கள் மனதை கொள்ளைக்கொண்டு போய்விடும்.
ஏலகிரியில் குளிர் காலத்திற்கு ஏற்றவாரு மிதமான வானிலை, பசுமையான இடங்கள், நீர்வீழ்ச்சிகள் போன்றவை பார்க்கவே அழகாக காட்சிதரும். இதுபோக ஒரு கலைநயம் அதிகமிக்க சுற்றுலாத்தளமாகும். ஜலகண்டீஸ்வரி கோவில்,புங்கனூர் ஏரி பூங்கா, அமிர்தி விலங்கியல் நீர்வீழ்ச்சிகள் ஆகியவை ஏலகிரியில் சென்று பார்த்து மகிழ வேண்டிய இடங்கள். அதுவும் அதிகாலை மற்றும் மாலை நேரம் அந்த இடம் நம்மை சொர்க்க பூமிக்கு அழைத்து செல்லும் அளவிற்கு அழகு வாய்ந்தது.
திருவண்ணாமலையில் உள்ள ஜவ்வாது மலை, காடுகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் நிறைந்த இடம். மலை மேல் இருக்கும் கோவில்கள் மிக பழமையானதாகவும் பாரம்பரியம் மிக்கதாகவும் இருக்கும். ஜவ்வாது மலையில் ஒன்றான பர்வதமலையில் உள்ள மல்லிகார்ஜுனா ஸ்வாமி கோவில் அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய அழகுமிக்க மலைகோவில். அங்கிருக்கும் கோவில்களின் சிற்ப கலைகள் மிகவும் பழமையானதாக இருக்கும். அதேபோல் பசுமைக்கும் காடுகளுக்கும் பனிமூட்டத்திற்கும் பஞ்சமே இருக்காது.
இந்த ஐந்து இடங்களும் அனைவரும் தனது வாழ்நாளில் தமிழ்நாட்டில் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்கள். அதுவும் குளிர்காலத்தில் இந்த இடங்களை சென்று பார்ப்பது சொர்க்கத்தை கண் முன்னே பார்ப்பதற்கு சமம்.