நூறு குழந்தைகளுக்கு அப்பா! கல்லறைகள் சொல்லும் செய்தி!

அழகிய எகிப்தின் அதிசயங்கள்
நூறு குழந்தைகளுக்கு அப்பா! 
கல்லறைகள் சொல்லும் செய்தி!

பகுதி - 4

கெய்ரோ மியூசியம்

ப்பிரிக்கா கண்டத்திலேயே மிகப் பெரிய அருங்காட்சியகம், சுமார் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட, சுமார் ஒன்றேகால் லட்சம் புராதனப் பொருட்களை காட்சிப்படுத்தியிருக்கும் மியூசியம். மம்மிகள் பலவற்றையும், மிகப் பாதுகாப்பாக கண்ணாடிப் பேழைகளுக்குள் வைத்திருக்கும் இடம்.  முழுவதும் பார்க்க நான்கு நாட்கள் போதாது. இருந்தாலும் ஒரே நாளில் மியூசியத்தில் நாம் பார்த்தவை பற்றி ஓரளவு செய்திகளை இந்தப் பகுதியில் வழங்கியுள்ளேன். முக்கியமாக ஒன்று சொல்ல வேண்டும்.

சில வருடங்களுக்கு முன் எகிப்தில் இளைஞர் புரட்சி ஒன்று வெடித்தது.

அப்போது சிலர் இந்த மியூசியத்தில் புகுந்து, இரண்டு மம்மிகள் உட்பட  சில பொருட்களைச் சேதப்படுத்தியும் சிலவற்றைக் கொள்ளையடித்தும் சென்றிருக்கிறார்கள். அவை ஓரளவு சரி செய்யப்பட்டு விட்டன என்று சொல்லப்படுகிறது.

3500 ஆண்டுகள் ஆன மம்மி

நாம் பார்த்த மம்மி  உடல் 3500 ஆண்டுகளுக்கு முன் எகிப்தை ஆண்ட புகழ் பெற்ற (Pharaoh) இரண்டாம் ரெமிஸிஸ் (Ramesses II) என்னும் அரசருடையது.

ஆப்பிரிக்க கண்டத்தின்  மிகப் பெரிய மியூசியமான கெய்ரோ அருங்காட்சியகத்தில் (Egyptian Museum) பாதுகாப்பாக இருக்கும் இந்த அரசரின் பதப்படுத்தப்பட்ட உடலைக் கண்டோம். இந்த அரசரின்  காலம் (கி.மு.1279-1213) என்பதாக இருக்கலாம்.

சற்றே வளைந்த மூக்குடன், ஐந்தடி ஏழு அங்குல உயரத்தில் (பாடம் செய்யப்பட்ட பிறகு) உடல் கருத்து சுருங்கினாலும் ராஜகளையுடன் காணப்படுகிறார்.

சுமார் 60 ஆண்டுகள் எகிப்தை ஆண்ட இவர் தனது 90வது வயதில் இறந்தபோது பற்சிதைவு நோய், மூட்டுக்களில் ஆர்த்திரிடிஸ், இறுகிப் போன இதய ரத்தக் குழாய்கள் என சகல நோய்களோடும் மம்மிஃபை செய்யப்பட்டிருப்பதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன.

1881ம் ஆண்டு இவரது கல்லறை வேலி ஆஃப் கிங்க்ஸ் (The Valley of Kings) பள்ளத்தாக்கில் கண்டுபிடிக்கப்பட்டது. அவரது கல்லறையில் வைத்திருந்த ஏராளமான தங்க ஆபரணங்கள் கொள்ளை யடிக்கப்பட்டு விட்டன என்கிறார்கள். இவரது கல்லறையுடன் சுமார் 50க்கும் மேற்பட்ட அரச குடும்பத்தினரின் உடல் வைத்திருந்த  பெட்டிகளும் கண்டுபிடிக்கப்பட்டனவாம். அரசரின் உடல் இருந்த பெட்டியில், (Sarcophagus) செதுக்கப்பட்ட சித்திரங்கள், எகிப்திய எழுத்துகள் இவை மூலம் பல வரலாற்று உண்மைகள் வெளிவந்தன. குறிப்புகளிலிருந்து இவர் 100 குழந்தைகளுக்கு அப்பா என்றும் தெரிய வருகிறது!!

மம்மிக்கு பாஸ்போர்ட்

1975ம் ஆண்டு சில ஆராய்ச்சிகள் செய்வதற்காகவும், சேதமடையாமல் பாதுகாக்கும் வழி முறைகளைச் செயல்படுத்தவும் இந்த அரசரின் மம்மி பாரிஸ் நகருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது அவருக்கு ‘பாஸ்போர்ட்’ வழங்கப்பட்டிருக்கிறது. தொழில் என்ற இடத்தில், இறந்த அரசர் என்றும் குறிப்பிடப் பட்டிருந்ததாம்.

மியூசியத்தின் உள்ளே…

ந்தப் பிரமாண்ட அருங்காட்சியகம், கெய்ரோவில் 1902ல் திறக்கப்பட்டது.

இதில் சுமார் ஒன்றேகால் லட்சம் எண்ணிக்கையில் உலகின் மிகப் புராதனமான பொருட்கள் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன. பாதுகாப்பு சோதனைகள் முடிந்து நாம் நுழைந்தபோது விரிந்த மிகப் பெரிய நீண்ட ஹால். உட்கார்ந்திருக்கும் பிரமாண்டமான சிலைகளிலிருந்து சிறியன வரை,  பெரிய கீழ்த்தளம் முழுவதும் பண்டைய எகிப்தைச் சேர்ந்த ஏராளமான கற்சிலைகள் நாலா பக்கமும் காட்சிக்குக் கிடைக்கின்றன.

தவிர, பல மம்மிகளைச் சுமந்த (sarcophagus) கல்லாலான பெட்டிகளும், உடல்களை நைல் நதியில் எடுத்து வர உபயோகப்படுத்தப்பட்ட படகுகளும் வரிசையாக வைக்கப் பட்டுள்ளன.

நுழைவாயிலின் இடது புறம் ஒரு ஹால் முழுவதும்  தனிமனிதர், குழந்தைகள், குடும்பம், தொழிலாளர்  என பண்டைய எகிப்திய வாழ்வைச் சித்தரிக்கும் மக்களின் சிலைகள்.

கிசா பிரமீட்களைக்  கட்டிய அரசர்கள் குஃபு (Khufu) காஃப்ரா (Khafra)  மற்றும் மென்குரே கிரானைட் கல்லில் செதுக்கப் பட்ட மிக பிரபலமான  ஹட்ஷெபுட் (Hatshepsut) அரசி ஆகியோரின் சிலைகள். (மிகவும் அழகானவர்கள் என்று தோன்றுகிறது.)

பல நூற்றாண்டுகளில் கொள்ளையடிக்கப்பட்டவை போக மீதமிருக்கும் பாரோக்களின் தங்க முக கவசங்கள், அவர்களது கல்லறையில் வைக்கப்பட்டிருந்த பொக்கிஷங்கள் காணக் கிடைக்கின்றன.

இரண்டாவது தளத்தில் ‘ராயல் மம்மிகள் ஹாலில்’ 4000 ஆண்டுகளுக்கு முன் கம்பீரமாக ஆண்ட அரசர், அரசிகளின் சுருங்கிய, உலர்ந்த  மம்மி  செய்யப்பட்ட உடல்கள், மிகப் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

18 அரசர்கள் மற்றும் 4 அரசிகளின் உடல்கள், நைட்ரஜன் வாயு அடைக்கப்பட்ட கண்ணாடிப் பெட்டிகளில் வைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. ரெமிஸிஸ் உடல் தவிர மற்றவற்றை அன்று பார்க்க முடியவில்லை.

உலகப் புகழ் பெற்ற பாரோ டுடான்கமுன் (Tutankhamun)

மிக அபூர்வமான டுடான்கமுன் (Tutankhamun) பொக்கிஷங்கள் அவசியம் பார்க்க வேண்டியவை. 1922ம் ஆண்டு எந்தச் சேதமுமில்லாமல், கார்ட்டர் என்னும் அகழ்வாராய்ச்சியாளரால்  (Howard Carter) கண்டு பிடிக்கப்பட்ட மம்மி ‘டுடான்கமுன்’ என்ற அரசனுடையது. அதனாலேயே உலகப் புகழ் பெற்றுவிட்டது.

சுமார்  3500  ஆண்டுகளுக்கு முன் 10 வயதில் அரியணை ஏறி  ‘boy-king’ என்றழைக்கப் பட்ட இந்த அரசன் இறந்தது தனது 19 வயதில்.

கார்ட்டர் குறிப்பிடுகிறார்…

“இந்தக் கல்லறையை முதலில் திறந்தபோது, கைவிளக்குகளின் ஒளியில் முதலில்
ஒரு புகை மண்டலம் போல இருந்தது.  பல தங்கச் சிலைகள்,  தங்க ஆபரணங்கள், வேலையாட்களைக் குறிக்கும் சிறிய மனித உருவ மற்றும் எகிப்தியக் கடவுளரின் சிலைகள்,  பல விலங்குகளின் சிலைகள், சிறு தங்க ஆலய கருவறை போன்ற அமைப்புக்கள்  (Shrines) என்று செல்வக் குவியலாக இருந்தது.”

மூன்றடுக்கு பெட்டிகளுக்குள் உடல் வைக்கப்பட்டிருந்த நிலையில் அவன் உடல் இருந்த மூன்றாவது உள் பெட்டி முழுவதும் தங்கத்தால் ஆனது.

தங்கத்தாலான அவனது முக கவசம், சிம்மாசனங்கள், ட்ரம்பெட் வாத்தியங்கள், சிறிய உடைவாள், செனட் போர்ட் என்ற விளையாட்டுப் பலகை கட்டில் உட்பட்ட ஃபர்னிச்சர்கள் பார்லி, கோதுமை, பேரீச்சம்பழம், திராட்சை, மெலன் போன்ற  உணவு வகைகள் (அடுத்த நிலை வாழ்வுக்கு வேண்டுமே) ஆபரணங்கள், உடைகள் வேலைக்கார சிலைகள், அவன் அமர்ந்த நாற்காலி, இறுதிச் சடங்கு செய்த பொருட்கள் என சுமார் 5400 பொருட்கள் இருந்தனவாம். இவற்றில் இருந்த தங்கத்தின் எடை 110  கிலோ என்கிறார்கள்.

டுடான்கமுன் உடல் மட்டும் தற்போது அவனது கல்லறை இருந்த இடத்திலேயே மீண்டும் வைக்கப்பட்டுள்ள தாகவும், பார்வையாளர்கள் குறிப்பிட்ட தினங்களில் அனுமதிக்கப்படுவதாகவும்  சொல்லப்படுகிறது.

அந்தச் சேம்பரை விட்டு வெளியே வந்தால் பல தளங்களிலும் பல நிலைகளில் சிலைகள், Hieroglyphics என்னும் சித்திர எழுத்துகள் செதுக்கிய கல் பாறைகள்,

4500 ஆண்டுகளுக்கு முன் பாப்பிரஸ் என்ற கோரைப் புல்லில் எழுதப்பட்ட டாக்குமென்ட் எல்லாம் வியக்க வைக்கின்றன.

பாப்பிரஸ் என்னும் ஒரு வகை கோரைப்புல்லை நீரில் இரண்டு நாள் நனைத்து வைத்த பின் அதை உலர விட்டால் அவை அளவில் பெரிதாகி பரந்து விடும்.

அதில்  இயற்கை வண்ணங்களினால் சித்திர எழுத்துக்களை பண்டைய எகிப்தியர்கள் எழுதியிருக்கிறார்கள். (பாப்பிரஸ் என்ற சொல்லில் இருந்துதான் பேப்பர் என்ற வார்த்தை வந்திருக்கிறது.)

கிரேட் பிரமீட் கட்டிய குஃபு (Khufu) அரசரின் பாப்பிரஸ் டாக்குமென்ட், 4500 ஆண்டுகளுக்கு முற்பட்டது.  கண்ணாடிப் பேழைக்குள் இருப்பதை ஆர்வத்துடன் பார்வையிட்டோம். அவரது வளர்ப்புப் பிராணிகளைப் பற்றிய குறிப்பு என்றார் கைடு.

நேரம் போவதே தெரியாமல் காலச் சக்கரத்தில் 5000 ஆண்டுகள் பின் நோக்கிச் சென்ற உணர்வோடு வெளியே வந்தோம். வந்த உடன் பசித்தது. எகிப்திய சைவ உணவுகளை ஒரு கை பார்க்கலாம் என்று வந்தால்… ரமலான் நோன்பு ஆரம்பமாகியிருந்த  நாட்கள் அவை. எல்லா உணவு விடுதிகளும் மூடப்பட்டிருந்தன…

பின் குறிப்பு:

மியூசியத்துக்குள், கேமராவின் ஃப்ளாஷ் லைட் கூடாது என்பதால் அங்கிருந்த வெளிச்சத்திலேயே படங்கள் எடுக்க வேண்டியிருந்தது.

(அதிசயங்கள் விரியும்...)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com