‘ஸ்காட்லேன்ட் ஆப் இந்தியா’ என அழைக்கப்படும் கூர்க் இயற்கை அழகு கொஞ்சும் குளிர்ச்சியான இடமாக இந்த கோடைக்காலத்தில் சுற்றுலாப்பயணிகளுக்கு இருக்கும் என்பதில் ஐயமில்லை. காபி கொட்டை தோட்டமும், இயற்கை எழில் கொஞ்சும் அழகும், தலைக்காவேரியின் பிறப்பிடமும், எண்ணற்ற அருவிகள் என்று கோடையை குதுகலமாகக் கொண்டாட ஏற்ற இடமாகும்.
கர்நாடகாவில் மேற்குமலை தொடர்ச்சியில் அமைந்துள்ள கூர்க்கில் உள்ள பிரசித்திபெற்ற அருவி அபே அருவியாகும். அபே அருவியின் எதிரிலேயே தொங்கும் பாலம் ஒன்று கட்டப்பட்டிருக்கிறது. பருவமழை காலங்களில் அருவியில் நீர்வரத்து அதிகரித்து காணப்படும். இந்த அருவியை சுற்றியிருக்கும் காபி மற்றும் ஏலக்காய் எஸ்டேட் மற்றும் இங்குள்ள குளிர்ச்சியான பருவ நிலையும் இந்த இடத்தை பிரபலமான சுற்றுலாத்தளமாக மாற்றியுள்ளது. இந்த அருவியை பார்க்க ஜூலை முதல் அக்டோபர் சிறந்த மாதமாக இருக்கும். அபே அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பருவகால தோட்டம் அதன் இயற்கை காட்சிக்கு பெயர் போனதாகும். கர்நாடகாவை 200 ஆண்டுகளாக ஆட்சி புரிந்த ராஜா,ராணிக்கு இந்த இடம் மிகவும் பிடித்த இடமாகும். இங்கே அமர்ந்துதான் இயற்கை காட்சிகளை ரசித்திருக்கிறார்கள். அதனாலேயே இவ்விடம் ராஜா சீட் என்று அழைக்கப்படுகிறது. இங்கே பொழுதுபோக்கிற்கு டாய் டிரைன் மற்றும் மாலையில் வண்ணமயமான ஃபவுண்டெயின் ஷோவும் நடைபெறும். நுழைவு சீட்டு கட்டணமாக ஒருவருக்கு 5 ரூபாய் செலுத்த வேண்டும். வெளியிலிருந்து உணவு பொருட்கள் வாங்கி வர அனுமதி கிடையாது. குப்பைகளை கொட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கே வருவதற்கான சிறந்த நேரம் காலை சூரிய உதயம் மற்றும் சாயங்கால சூரிய அஸ்தமனமாகும். அதை பார்ப்பதற்காகவே சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் அலைமோதும் என்பது குறிப்பிடத்தக்கது.
காவேரி ஆறு உருவாகிய இடத்தையே தலைக்காவேரி என்று அழைக்கப்படுகிறது. இது இந்துக்களின் மிக புனிதமான இடமாக கருதப்படுகிறது. இது கூர்க்கின் அருகிலுள்ள பிரம்மகிரி மலையில் அமைந்துள்ளது. தலைக்காவேரி கடல் மட்டத்திலிருந்து 1276 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இங்கே சென்று பார்ப்பதற்கு எந்த கட்டணமும் கிடையாது. தலைக்காவேரியை சுற்றி பார்க்க ஜூலை முதல் செப்டம்பர் சிறந்த மாதங்களாகும். காவேரி அம்மனையே முக்கிய கடவுளாக வழிபடு கிறார்கள். அவரை அடுத்து அகதீஸ்வரரையும் பக்தர்கள் வழிப்பட்டு செல்கிறார்கள். பிரம்மகிரியிலிருந்து தலைக்காவேரிக்கு செல்ல மொத்தம் 450 படிகட்டுக்கள் உள்ளது. தலைக்காவேரிக்கு செல்லும் சாலைவழி பசுமை நிறைந்த மலைப்பிரதேசமாக அழகாக காட்சியளிக்கிறது.
இருப்பு அருவி கர்நாடக மாநிலத்தில் உள்ள கூர்க் மாவட்டத்தில் பிரம்மகிரி மலையில் உள்ளது. அதன் அருகிலேயே கேரளாவின் வயநாட்டு எல்லை பகுதி அமைந்திருக்கிறது. இந்த அருவியை லக்ஷ்மண தீர்த்த அருவி என்றும் அழைப்பார்கள். இருப்பு அருவி மிகவும் பிரபலமான சுற்றுலாத்தளம் மற்றும் ஆன்மீகத் தலமுமாகும். இங்கேதான் மிகவும் பிரபலமான ராமேஸ்வரா சிவன் கோவில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இக்கோவில் லஷ்மண தீர்த்த கரையோரம் அமைந்துள்ளது. இங்கு சிவராத்திரியன்று பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும்.
ஒருமுறை ராமனும், லஷ்மணரும் சீதையை தேடி காட்டில் அலைந்து கொண்டிருந்தபோது ராமர் தாகம் எடுக்கிறது என்று லக்ஷ்மணரிடம் கேட்க, உடனே லக்ஷ்மணர் பிரம்பகிரி மலையிலே அம்பெய்து லக்ஷ்மண தீர்த்தத்தை உருவாக்கினார். இதனால் இந்த அருவிக்கு பாவங்களை போக்கக்கூடிய சக்தி உள்ளது என்று பக்தர்கள் நம்புகிறார்கள். சிவராத்தியன்று பாவங்களை போக்க பக்தர்கள் இங்கே வருவதுண்டு. பருவமழை காலங்களில் இந்த அருவியை காண வருவது சிறந்ததாகும்.
துபாரே யானை முகாம் கூர்க்கில் உள்ள காவேரி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இது கூர்க்கிலுள்ள மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாகும். இந்த யானை முகாமில் யானைகளுக்கு புத்துணர்ச்சி தருவதோடு, சுற்றுலாப்பயணிகள் யானையுடன் நெருங்கி பழக ஒரு வாய்ப்பாகவும் அமைகிறது. இது வனவிலங்கு ஆர்வலர்களுக்கு வந்து செல்வதற்கு ஒரு சிறந்த இடமாக இருக்கும். இங்கு யானை சவாரி செய்யலாம் முக்கியமாக குழந்தைகள். இங்கே நுழைவு சீட்டுகட்டணம் 800ரூபாய் ஆகும். இங்கு யானைகளுக்கு வெல்லம், கரும்பு, வாழைப்பழம் போன்ற உணவுகளை சுற்றுலாப்பயணிகள் ஊட்டலாம். அதுமட்டுமில்லாமல் யானையை குளிப்பாட்டுவதை அருகிலிருந்து ரசிக்கலாம். துபாரே யானை முகாமை சுற்றிப்பாக்க வருகை தர அக்டோபர் முதல் மார்ச் வரை சிறந்த மாதங்களாகும். இங்கே மொத்தம் 150 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றது.
எனவே இக்கோடைக்காலத்தை இதமாக்க கூர்க்கிற்கு ஒரு விசிட் அடித்துவிட்டு வருவது வெயிலை சமாளிக்க ஒரு சிறந்த வழியாகும்.