கடந்த ஆயிரத்தி நானூறு வருடங்களாக உலகின் பல நாடுகளிலிருந்து கோடிக்கணக்கான சுற்றுலா பயணிகளை தன்னகத்தே வரவழைத்து வியக்க வைத்த வண்ணம் கம்பீரமாகத் திகழ்கிறது பல்லவ மன்னர்களின் சிற்பக் களஞ்சியங்கள் அமைந்த மாமல்லபுரம்.
முதலாம் நரசிம்மவர்மன் என்னும் மாமல்லனால் (கி. பி. 630 – 638) தெற்கிலிருந்து வடக்காக சரிந்த சிறு குன்றிலிருந்து செதுக்கப்பட்ட இந்த ஐந்து சிற்ப இரதங்கள் ஐந்து ரதங்கள் அல்லது பஞ்சபாண்டவ இரதங்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஐந்து ஒற்றைக்கல் கோயில்கள் மற்றும் சிம்மம், யானை, நந்தி போன்ற விலங்கு சிற்பங்கள் அடங்கிய இந்த தொகுதி ஐந்து இரதங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த இரதங்களுக்கு முன்புறமாக சிம்மமும், பக்கவாட்டில் யானையும் நந்தியும் செதுக்கப்பட்டுள்ளன.
பஞ்ச பாண்டவ இரதங்கள் என்று அழைக்கப்பட்டாலும் பஞ்ச பாண்டவர்களுக்கும் இதற்கும் யாதொரு தொடர்பும் இல்லை. மூன்று அடுக்குகளுடன் எட்டுபட்டை சிகரத்துடன் திராவிட விமான வடிவத்தை உடைய தர்மராச இரதம் மற்றும் அருச்சுன இரதம், கூண்டு வண்டி வடிவிலான சிகரத்தை உடைய பீம இரதம், சதுரமான குடிசை போன்ற வடிவத்தில் அமைந்த திரௌபதி இரதம் மற்றும் கஜபிருஷ்ட வடிவத்தில் உருவாக்கப்பட்டுள்ள நகுல சகாதேவ இரதம் ஆகிய இரதங்கள் கோயில் மாதிரிகளுக்காகத் தோற்றுவிக்கப்பட்டவையாகவே கருதப்படுகின்றன.
ஐந்து இரதங்களிலேயே அளவில் பெரியதும் அழகு வாய்ந்ததும் தர்மராஜா இரதம் ஆகும். மூன்று தளங்களுடன் காட்சி தருகிறது இந்த இரதம். இதில் மேலே அமைந்துள்ள இரண்டு தளங்களும் முழுவதுமாக பூர்த்தியாகியுள்ளதைக் காண முடிகிறது.
இரண்டாவது தளத்தில் சூரியன், சந்திரன் மற்றும் தட்சிணாமூர்த்தி வடிவில் உள்ள சிவன் ஆகிய சிற்பங்கள் காணப்படுகின்றன.
முதல் தளத்தில் நாற்பதுக்கும் மேற்பட்ட சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. கங்காள மூர்த்தி, வீணை ஏந்திய வீணாதார சிவன், தண்டு முனிவருக்கு நடனம் கற்பிக்கும் சிவன், சண்டிகேசனுக்கு அருளும் சிவன், கங்காதரனாகக் கங்கையைச் சடைமுடியில் ஏந்தும் சிவன், காலாரிமுர்த்தியாகக் காலன் என்ற அசுரனை வதம் செய்யும் சிவன், ரிஷபாந்திகனாகக் காளை மாட்டின்மீது சாய்ந்திருக்கும் சிவன், அந்தகாசுரனை வதம் செய்யும் சிவன், நந்திக்கு அருள் வழங்கும் சிவன், சூரியன், சந்திரன், திருமால், பிரமன், சுப்பிரமணியன் ஆகியோர் சிலைகள் காணப்படுகின்றன. மேலும் இந்த தளத்தில் கையில் ஓலைக்குடவையில் பூவுடன் ஓர் அர்ச்சகர், ஒரு பணியாளர், ஒரு சமையல்காரர், ஓர் ஓதுவார், பூசைக்கு நீர் எடுத்துச் செல்லும் ஒரு பெண்ணின் அழகான சிற்பமும் வடிக்கப்பட்டுள்ளன.
தரைத்தளச் சிற்பப் பணிகள் முழுமையாக பூர்த்தியாகாமல் காட்சி தருகிறது. மேலே அமைந்துள்ள இரு தளங்களிலும் கருவறைகள் உள்ளன. அதனுள் சோமாஸ்கந்தர் சிற்பங்கள் உள்ளன. மேலே உள்ள தளங்களுக்குச் செல்லப் படிகள் கிடையாது. தரைத்தளத்தில் கருவறை குடையப்படவில்லை. தரைதளத்தில் அமைந்துள்ள எட்டு மூலைகளிலும் அர்த்தநாரீஸ்வரர், ஹரிஹரன், சுப்பிரமணியன், பைரவன் வடிவில் சிவன், மேலும் இரு வேறு சிவன், பிரமன், நரசிம்மவர்மப் பல்லவன் என எட்டு அழகிய சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
பீம இரதம் அர்ஜீன இரதத்திற்கு தெற்குப் பகுதியில் மேற்கு திசை நோக்கி அமைந்துள்ளது. பீம இரதத்தின் வெளியே இரண்டு துவாகபாலர் சிற்பங்கள் அமைந்துள்ளன. உள்ளே சிற்பங்கள் காணப்படவில்லை. இந்த இரதம் திருமாலுக்காக உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
நீள் சதுர வடிவிலான பெரிய பாறையைக் குடைந்து இந்த இரதம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இரதம் நீண்ட சதுர வடிவத்தில் ஒரு மண்டபத்தினையும் அதன் மேற்புறத்தில் படகு ஒன்றைக் கவிழ்த்து வைத்தது போன்ற விமானத்தையும் கொண்டு அமைந்துள்ளது. இந்த இரதத்தின் நாற்புரத்திலும் தாழ்வாரம் போன்ற அமைப்பு காணப்படுகிறது. இரதத்தின் கீழ்ப்பகுதி முற்று பெறாமல் காட்சியளிக்கிறது.
அர்ஜீன இரதம் எந்த ஒரு கடவுளுக்காக அமைக்கப்பட்டது என்பதில் கருத்து வேறுபாடு காணப்படுகிறது. முருகன், சிவன், இந்திரன் இவர்களில் ஒருவருக்காக அமைக்கப் பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அருகில் அமைந்துள்ள திரௌபதி இரதமும் இந்த அர்ஜீனன் இரதமும் ஒரே தளத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளது. சதுர அமைப்புடைய இந்த இரதத்தை யானைகளும் சிங்கங்களும் தாங்கி நிற்பதைப் போல இது உருவாக்கப் பட்டுள்ளது.
நுழைவாயிலைக் கடந்து உள்ளே நுழைந்ததும் முதலில் தென்படுவது திரௌபதி இரதம். இது மேற்கு திசை நோக்கி அமைந்துள்ளது. இந்த இரதம் அர்ஜீன இரதத்தோடு சேர்ந்து ஒரே மேடையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இரதம் ஒன்றன் மேல் ஒன்றாக அமைந்த இரண்டு தளங்களில் மேல் அமைக்கப்பட்டுள்ளது. அடித்தளத்தைச் சுற்றிலும் யானைகளும் சிங்கங்களின் சிற்பங்களும் வடிக்கப்பட்டுள்ளன.
ஒரு குடிசை வடிவத்தில் பிற இரதங்களைக் காட்டிலும் சற்று சிறிய அளவில் இந்த இரதம் உருவாக்கப்பட்டுள்ளது. நுழைவாயிலின் இருபுறமும் இரு பெண்களின் சிற்பம் காணப்படுகிறது. ஒரு பெண் வில்லையும் மற்றொரு பெண் கத்தியையும் வைத்துள்ளார்கள். கருவறைக்குள் புடைப்புச் சிற்ப வகையில் அமைந்துள்ள கொற்றவை நான்கு திருக்கரங்களுடன் தாமரைப் பீடத்தின் மீது நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள். இச்சிற்பத்துக்குக் கீழே வழிபடும் ஒருவரின் சிற்பமும், தன்னைத் தானே பலி கொடுத்துக்கொள்ளும் ஒருவரின் சிற்பமும் உள்ளன. இரதத்திற்கு வெளிப்புறத்தில் துர்க்கையின் வாகனமாக சிம்மம் அமைக்கப்பட்டுள்ளது.
மருத நிலத்துக்கு உரிய கடவுளான இந்திரனுக்காகக் கட்டப்பட்ட இக்கோயிலில் இதைக் குறிக்கக்கூடிய சிற்பங்கள் காணப்படாவிட்டாலும் அருகில் அமைக்கப்பட்டுள்ள பெரிய யானைச் சிற்பம் இந்திரனுடைய ஐராவதம் எனக் கொண்டே இக்கோயில் இந்திரனுக்கு உரியது என்று அடையாளப்படுத்து கின்றனர். இந்திரனுக்காக உருவாக்கப்பட்ட இந்த ரதமானது கஜபிருஷ்டம் (யானையின் பின்பகுதி) எனக் குறிப்பிடப்படும் அமைப்பிலான விமான வடிவத்தைக் கொண்டுள்ளது. இவ்வகை விமானமானது தமிழில் தூங்கானை மாடம் என்று அழைக்கப்படுகிறது. இந்த இரத்தில் பிற இரதங்களைப் போல சிற்பங்கள் காணப்படவில்லை. மேலும் இந்த இரதம் முற்றுப்பெறாத நிலையில் உள்ளது.
மாமல்லபுரத்தில் புகழ் பெற்ற ஐந்து ரதங்களைத் தவிர மேலும் நான்கு கல் ரதங்கள் அமைந்துள்ளன.