

விசாகப்பட்டினம் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாக இருந்தாலும், அதன் கடற்கரைகள் அழகாக காணப்படுவதற்கு காரணம் அதன் புவியியல் அமைப்பு. விசாகப்பட்டினத்தில் உள்ள கங்காவரம் கடற்கரை (Gangavaram Beach) அதன் இயற்கை அழகு, அமைதி மற்றும் திரைப்பட படப்பிடிப்புகளுக்கு பெயர் பெற்ற இடமாகும். நகரின் சலசலப்பில் இருந்து விலகி குடும்பம் மற்றும் நண்பர்களுடன் ஓய்வெடுக்க சிறந்த இடமாகும்.
பெரிய நிழல் தரும் பனை மரங்களின் நிழலால் சூழப்பட்டு, குளிர்ந்த காற்று வீசும், ஒதுக்குப்புறமான கங்காவரம் கடற்கரை விசாகப்பட்டினத்தில் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்களில் ஒன்றாகும். வார இறுதி நாட்களில் பயணத்துக்கு ஏற்ற, நகர வாழ்க்கையின் மன அழுத்தத்திலிருந்து விலகிச்செல்ல ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது. இங்கு நீச்சல் அடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது என்றாலும், குடும்பத்துடன் சூரிய குளியல் செய்து பொழுதை கழிக்க ஒரு அற்புதமான இடமாக அமைந்துள்ளது. கங்காவரத்தில் உள்ள கடற்கரை விசாகப்பட்டினம் எஃகு ஆலை கட்டப்படுவதற்கு முன்பு இருந்த நகரத்தின் பெயரால் கங்காவரம் கடற்கரை என்று அழைக்கப்படுகிறது.
விசாகப்பட்டினம் எஃகு ஆலைக்கு அருகில், நகரின் தெற்கு பகுதியில் கடற்கரை அமைந்துள்ளது. இந்த கடற்கரை அதன் அழகிய பனை மரங்கள், கிருஷ்ணர் கோவில் மற்றும் கடலில் அமைந்துள்ள ஒரு சிறிய பாறைத் தீவு போன்ற அம்சங்களுடன் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்கிறது. மாலை நேர சூரிய அஸ்தமனத்தைக் காணவும், படகில் செல்லவும், உள்ளூர் கலாச்சாரத்தை அனுபவிக்கவும் ஏற்ற இடமாக உள்ளது.
மென்மையான மணல், பசுமையான பனை மரங்கள் மற்றும் அமைதியான அலைகள் என இயற்கை அழகு கொஞ்சும் இடமிது. ஆர்.கே கடற்கரை அல்லது ருஷிகொண்டா போன்ற பிற கடற்கரைகளைவிட குறைவான கூட்டம் கூடுவதால் அமைதியாக நேரத்தை செலவிட ஏற்ற இடமாக உள்ளது. இங்குள்ள உயரமான பனை மரங்கள் மற்றும் பாறை அமைப்புகள் போன்ற எழில் கொஞ்சும் அழகிய இயற்கை காட்சிகள் காரணமாக பல தெலுங்குத் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களின் படப்பிடிப்பு நடைபெறும் தளமாக உள்ளது.
கடற்கரையோரம் அமைந்துள்ள கிருஷ்ணர் கோவில் ஒரு முக்கியமான ஆன்மீகத்தலமாக விளங்குகிறது. இங்கு உள்ளூர் திருவிழாக்கள் சிறப்பாக கொண்டாடப் படுகின்றன. சூர்ய அஸ்தமனத்தைக் கண்டு களிக்கவும், கடற்கரை கைப்பந்து(Beach volleyball) விளையாடவும் ஏற்ற இடமிது. படகுகளில் பயணம் செய்து கடலின் அழகை ரசிக்கலாம்.
கங்காவரம் துறைமுகம்:
தற்போது இந்த பகுதியின் பெரும் பகுதி கங்காவரம் துறைமுக வளர்ச்சி திட்டத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடற்கரையின் அனைத்து பகுதிகளுக்கும் செல்வதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இங்கிருந்து சிறிது தூரத்தில் உள்ள யாரடா கடற்கரை (Yarada Beach) சுற்றுலாப் பயணிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. கங்காவரம் பகுதிக்கு செல்பவர்கள் அங்கிருந்து யாரடா கடற்கரையின் அழகிய மலைக் காட்சிகளையும் கண்டு ரசிக்கலாம்.
கடற்கரைக்குச் செல்ல கட்டணம் ஏதுமில்லை. 24 மணி நேரமும் திறந்திருக்கும் என்றாலும் பாதுகாப்பு காரணங்களுக்காக பகல் நேரங்களில் செல்வது நல்லது. கடற்கரையில் அலைகளின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் சில பகுதிகளில் குளிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
எப்படி செல்வது?
விசாகப்பட்டினம் நகர மையத்திலிருந்து சுமார் 26 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. விமான நிலையம், ரயில் நிலையம் அல்லது பேருந்து நிலையத்திலிருந்து டாக்ஸி அல்லது தனியார் வாகனங்கள் மூலம் எளிதில் அடையலாம்.
செல்ல ஏற்ற நேரம்?
கோடைக் காலங்களில் மார்ச்-மே பகல் நேரங்களில் அதிக வெப்பம் இருக்கும். எனவே இந்த மாதங்களை தவிர்த்துவிடுவது நல்லது. பாதுகாப்பிற்காக தனியாக செல்வதைவிட குழுவாக செல்வது அல்லது குடும்பத்துடன் செல்வது சிறந்தது.