புதுமணத் தம்பதி ஒன்று ஓடும் ரயிலில் அபாயகரமாக ஃபோட்டோஷுட் நடத்தி வெளியிட்ட காட்சிகள் உலகெங்கும் பதற்றத்தை ஏற்படுத்தி வைரலாகியுள்ளது.
இப்போதெல்லாம் திருமணத்தில் சுவாரஸ்யமாக வித்தியாசமான சூழலில், வித்தியாசமான முறையில் புதுமண ஜோடி போட்டோ ஷூட்கள் நடத்துவது சகஜமாகி விட்டது.
அந்த வகையில் குரோஷியோவைச் சேர்ந்த ஒரு ஹனிமூன் ஜோடியின் சாகசமான ஃபோட்டோ ஷூட் காண்போரை அதிர வைக்கிறது. சரக்கு ரயில் ஒன்று ஓடிக் கொண்டிருக்க, அந்த ரயில்மீது ஆபத்தான வகையில் விதவிதமான போஸ் கொடுத்து படமெடுத்துள்ளனர். குரோஷியாவைச் சேர்ந்த கிறிஸ்டிஜான் இலிசிக் (35) மற்றும் அவரது மனைவி ஆண்ட்ரியா ட்ரகோவ்செவிக் (29) ஜோடியின் புகைப்படங்கள்தான் தற்போது வைரலாகி வருகிறது.
–இதுகுறித்து இந்த ஜோடி தன் சமூக வலைதள்ப் பக்கத்தில் பகிர்ந்து கொண்டதாவது;
ஹனிமூன் ஜோடிகளான நாங்கள் இருவருமே பயண விரும்பிகள். அதனால் சாகச பயணம் ஒன்றை திருமண உடையில் படம் பிடிக்க விரும்பினோம். அதற்காக சரக்கு ரயில் ஒன்றைத் தேர்ந்தெடுத்தோம்.
சுமார் 2 கிலோ மீட்டர் நீளம் கொண்ட அந்த ரயிலில் 200 பெட்டிகள் உண்டு. அத்தனை பெட்டிகளிலும் இரும்புத்தாது துகள்கள் நிரப்பப் பட்டிருந்தன. ஆப்பிரிக்காவின் சஹாரா பாலைவனம் வழியாக 700 கிலோ மீட்டர் தூரம் தூரத்தை 20 மணிநேரத்தில் இந்த ரயில் கடக்கும்.
மேலும் இந்த பயணத்தின்போது பகலில் 45 டிகிரிக்கும் அதிக வெப்பநிலையும், இரவில் ஜீரோ டிகிரிக்கும் கீழான தட்பவெப்ப நிலையை சமாளித்தாக வேண்டும். ஆளரவமற்ற இந்த பயணப் பாதை, புழுதிகள் அடங்கிய கடுமையான பயணம்.
இந்த ரயிலில் நாங்கள் ஜாலியாக, ஆபத்தான போஸ்கள் கொடுத்து படமெடுத்தது மறக்க முடியாத அனுபவம். எங்களின் மிக நெருங்கிய நண்பர்தான் போட்டோ மற்றும் வீடியோக்காரர். அதனால் பயணம் ஜாலியாகவே இருந்தது. நாங்கள் ரொம்பவே என்ஜாய் செய்தோம்.
-இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
இந்த ஜோடி இதுவரை சுமார் 150 நாடுகளுக்கு மேல் பயணம் செய்து வீடியோ வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.