கிரேக்க நாட்டுக்கு ஒரு விசிட்: பகுதி 1 - “ஏ சாக்ரடீஸ்! நீர் கொடுத்து வைத்தவர்!"

Acropolis Museum, Athens - Greece Travel - 1
Acropolis Museum, Athens - Greece Travel - 1
ரெ. ஆத்மநாதன்

எழுத்தாளர் ரெ.ஆத்மநாதன் பொருளாதாரத்திலும், இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியலிலும் முதுகலைப் பட்டங்கள் பெற்றவர். கதை, கவிதை, நாடகம் என்று முத்தமிழுக்கும் பணி செய்பவர். கதை, கவிதைகளை மாத,வார, ஆன்லைன் இதழ்களில் எழுதி வருபவர். இவரின் 4 நாடகங்கள் சென்னை, திருச்சி வானொலி நிலையங்களால் ஒலி பரப்பப் பட்டன. இளங்கலை முதலாண்டு மதுரைத் தமிழ்ச்சங்கத் தேர்வில் (1972-73) மாநில முதன்மை பெற்றவர்.பட்டி மன்றம், கவியரங்கம் ஆகியவற்றில் பங்கேற்பவர். அமெச்சூர் நாடகங்களில் நடித்தவர். தமிழக அரசின் மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சித் துறையில் ஆராய்ச்சி முன்னவராகச் சேர்ந்து, அத்துறையின் பொறுப்பு இயக்குனராக ஓய்வு பெற்றவர். “தொடர்கதைகளும் முற்றும்” என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டவர்.

Updated on

நமது இந்திய நாட்டைப்போலவே பழம்பெருமை வாய்ந்தது கிரீஸ்! சாக்ரடீசும், பிளாட்டோவும், அரிஸ்டாட்டிலும் வாழ்ந்த அந்தப் புனித மண்ணைப் பார்க்கப் போகிறோம்; அதில் நம் தடத்தைப் பதிக்கப் போகிறோம் என்ற எண்ணமே மனதில் ஓர் இனம் புரியாத உற்சாகத்தைப் பரவ விட்டது. தத்துவ ஞானிகள் ஒருபுறம் என்றால் கிரேக்கக் கடவுளர்கள் வரிசை மறுபுறம் என்று, சின்ன வயதிலிருந்து நாம் படித்ததெல்லாம் மனதில் அலைபாய ஆரம்பித்தது!

“எனதருமை ஏதன்ஸ் நகரத்து எழில் மிக்க வீதிகளே!

வீதியோரத்து மர நிழல்களே!

வீட்டோரத்துத் திண்ணைகளே!

உங்கள் அனைவரிடமிருந்தும் இந்த சாக்ரடீஸ் விடைபெறப் போகிறான்!”

என்று சின்ன வயதில் மனதுக்குள் விதைந்த வசனம் இப்பொழுது மேல் எழும்பி வந்தது.

“இந்த விஷத்தைக் குடித்து விட்டு உங்கள் அறையில் மெல்ல நடங்கள்…கால்கள் ஓயும் வரை!” - காவலன் கூறி விஷத்தைக் கொடுக்க,

“அப்புறம் கால்கள் இரண்டும் மரத்துப் போகும்! மயக்கம் வரும். கனவு மங்கையாலும் கலைக்க முடியாததாக அது இருக்கும்!அப்படித்தானே?” - சாக்ரடீஸ்.

தண்டனையைக் கூடத் தகைவாய் ஏற்றுக் கொண்ட தகைசால் பெருந்தகை அவர்!

நமது தற்காலக் கவிஞர் ஒருவர் மறக்க முடியாத கவிதையைச் சாக்ரடீஸின் பெயரால் வடித்தார்!

“ஏ சாக்ரடீஸ்!

நீர் கொடுத்து வைத்தவர்!

ஏனெனில்…

உமக்குக் கொடுக்கப்பட்ட விஷம் கலப்படமில்லாதது!”

உணவுப் பொருட்களில் கலப்படம் செய்யும் உன்மத்தர்கள் வாழும் காலமல்லவா இது!

சூரிக்கில் ஸ்விஸ் ஏர்வேய்ஸ் விமானம் இரவு ஒன்பதரைக்குக் கிளம்பி, நள்ளிரவு பன்னிரண்டுக்கு ஏதன்ஸைத் தொட்டது.

Greece Travel
Greece Travel

லேசான குளிர் வரவேற்க, காரைப் பிடித்து (ஊபரே அதிகம்) 40 கி.மீ, தூரத்திலுள்ள வீட்டை அடைந்தோம். இப்பொழுதெல்லாம் ‘ஹோம் ஸ்டே’ உலகெங்கும் பிரபலமாகி விட்டது.

சேர்ந்தாற்போல் பல தலைமுறை வாழ்ந்தவர்களும் இல்லை, தாழ்ந்தவர்களும் இல்லை என்பதற்கிணங்க, ஒரு காலத்தில் உலகளவில் தத்துவம், அரசியல், நாகரீகம் என்று அனைத்திலும் உயர்ந்து நின்ற நாடு, தற்பொழுது பொருளாதாரத்தில் சற்று பின் தங்கியே உள்ளது. நகரெங்கும் பழமையும், புதுமையும் ஒட்டியே வாழ்வதைக் காண முடிகிறது.

நகரின் ஒவ்வொரு தெருவைக் கடக்கும்போதும், சாக்ரடீஸ் இங்கெல்லாம் நடந்திருப்பாரோ என்ற எண்ணமே மேலோங்கி நின்றது. ஆனால், திண்ணையுள்ள வீடுகளைக் காணமுடியவில்லை!

லேசான மழை குளிரைப் பரப்பிற்று!

அடுத்த நாள் காலை! ஏதென்ஸ் மியூசியத்திற்குச் சென்றோம். கீழே பழமை தோண்டப் பட்டுக் காட்சிப்படுத்தப்பட, மேலே நவீன அமைப்புக் கட்டடத்தில் முன்பே எடுக்கப்பட்டவையும், பிறவும் நம்மைக் கவர்கின்றன! என்ன கிடைத்ததோ அதை அப்படியே வைத்துள்ளார்கள். நமது ஆதிச்ச நல்லூரும், கீழடியும் மனதில் வந்து போயின.

Greece Travel
Greece Travel

நமது இந்தியக் கலாச்சாரமும் பண்பாடும் பல விதங்களிலும் கிரேக்க நாகரீகத்துடன் ஒத்துப் போவதைப் பலவற்றிலும் காண முடிகிறது.

முதலாவதாக, எல்லாவற்றுக்கும் இறை வடிவம் கொடுக்கும் பண்பாடு நமது நாட்டிலும் அதிகமாகவே உண்டு. அதன் காரணமாகவே இந்து மதத்தில் ஏகப்பட்ட கடவுளர்கள் உள்ளனர்.

பக்திப் பரவசத்தில், தெய்வ வழிபாட்டு இடங்களிலுள்ள கிணறுகளில் காசு போடும் வழக்கம் இங்கும் நடைமுறையில் இருந்திருக்கிறது.

Greece Travel
Greece Travel

சிலை வைக்கும் வழக்கம் இங்கும் அதிக அளவில் காணப்படுகிறது.

மண்பாண்டங்களை வகை, வகையாகச் செய்து அழகு பார்த்ததோடு சமையல் செய்யவும் அவற்றைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

அக்காலத்தில் உயரமான இடங்களைத் தேர்ந்தெடுத்தே குடியேற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

மக்களை நல்வழிப்படுத்த, தத்துவங்கள் பெரிதும் கை கொடுக்கும் என்பதை, அந்தக் காலத்திலேயே அறிந்து வைத்திருந்திருக்கிறார்கள். நமது நாட்டிலும் அடுக்கு மொழிப் பேச்சுகளும், அனல் பறக்கும் வசனங்களும் ஆட்சி மாற்றங்களையே ஏற்படுத்துகின்றன அல்லவா?

இப்படி இன்னும் பலவற்றையும் குறிப்பிட்டுக்கொண்டே போகலாம். இதிலிருந்து ஒன்றை ஊர்ஜிதப் படுத்தலாம். நமது இந்திய நாகரீகம் பழம் பெருமை மிக்க கிரேக்க, ரோமானிய நாகரீகங்களுக்குச் சற்றும் குறைந்ததல்ல!

மீண்டும் சந்திப்போம் .... பகுதி 2

logo
Kalki Online
kalkionline.com