கிரேக்க நாட்டுக்கு ஒரு விசிட்: பகுதி 2 - ஒலிம்பிக் நகரமாம் ஏதென்ஸ்! வெண் பளிங்கு அரங்கத்தை சுற்றி வருவோமா?

Temple of Olympian Zeus - Greece Travel - 2
Temple of Olympian Zeus - Greece Travel - 2
Updated on

நமது இந்திய நாட்டிற்கும் கிரேக்கத்திற்கும் இடையே ஏகப்பட்ட ஒற்றுமைகள் உள்ளன என்று பார்த்தோம். கனிம வளமும் இரு நாடுகளிலும் தழைத்தே உள்ளது.

மணல், கிரானைட் (கருங்கல்) போன்றவை நம்மூரில் அதிகமென்றால் ‘மார்பிள்’ (Marble) என்றழைக்கப்படும் வெண் பளிங்குக் கற்கள் கிரேக்க நாட்டில் அதிகம் போலும். அதனைக் கண்கூடாகக் காண முடிகிறது. பெரும்பாலான இடங்களில் மார்பிளே பயன்பாட்டில் இருந்து வருகிறது, பழங்காலம் முதலே!

உலக அதிசயங்களில் ஒன்றான நமது காதல் சின்னம் தாஜ்மஹால் வெண் பளிங்குக் கற்களால் ஆனது என்பது இங்கு நினைவு கூரத்தக்கது.

“உன்னையே நீ அறிவாய்!” என்பதும் “ஏன்? எதற்காக என்று கேள்!” என்பதும் உன்னத ஞானி சாக்ரடீசின் உயர்வான தத்துவங்கள்.

ஏன்? எதற்கு என்று கூட வலிமையும், வாய் ஜாலமும் கொண்டவர்களால் கேட்டு விட முடியும்! ஆனால் ஒரு மனிதன் தன்னை அறிவதற்குப் பொறுமையும், நிதானமும், நேர்மையான எண்ணமும் வேண்டும். மனத்தின் தன்மையை எண்ணங்களால் அறியலாம்; உடலின் வலிமையை உயர் விளையாட்டுக்களே தீர்மானிக்குமல்லவா! எனவேதான் கி.மு 776 முதல் கி.பி 393 வரை கிரேக்கத்தில் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஜீயஸ் கடவுளை மகிழ்விக்கும் வகையில் நடத்தப்பட்டுள்ளன.

நவீன ஒலிம்பிக் 1896 ல் மீண்டும் ஏதென்ஸ் நகரிலேயே தொடங்கப்பட்டு, நான்காண்டுகள் இடைவெளியில் பல்வேறு உலக நாடுகளிலும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன. பியர் டி கூபர்டின் (Pierre de Coubertin) என்பவரின் முயற்சியால் தொடங்கப் பட்டதால், அவரே ஒலிம்பிக் போட்டிகளின் தந்தை என்றும் அழைக்கப் படுகிறார். 1896, 1906 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளிலும் ஏதென்ஸ் நகரமே இந்த விளையாட்டுத் திருவிழாவை வெற்றிகரமாக நடத்திக் காட்டி இருக்கிறது.

சரி வாருங்கள்! வெண் பளிங்குக் கற்களால் ஆன அந்தப் பிரமாண்டமான விளையாட்டு அரங்கத்தை ஒரு சுற்று சுற்றி வருவோம்.

என்ன செய்வது? யாம் விளையாட்டில் சிறக்கவில்லை. பள்ளி நாட்களில் சாப்ட் பாலிலும், கல்லூரி நாட்களில் ஈட்டி எறிதல், ரிலே ரேசில் ஓடுதல் என்று அனைத்துப் போட்டிகளிலும் பங்கு கொள்வதுண்டு. ஓட்டப் பந்தயங்களில் எனக்குப் பயந்து எல்லோரும் முந்திக் கொண்டு ஓடி விடுவார்கள். ஒரே ஒரு ரிலே ரேசில், கல்லூரியில் ஒரு சிறு கப் வாங்கியது மட்டுமே நமது வெற்றி.

Greece Travel
Greece Travel

விளையாட்டில் வெற்றிக்கும் நமக்கும் வெகு தூரம் என்றாலும், ஒலிம்பிக்கில் பங்கேற்கப் பொசுப்பே இல்லாது போனாலும், ஒலிம்பிக் போட்டிகளை நேரில் பார்க்கும் சந்தர்ப்பங்களும் வாய்க்காது போனாலும், ஒலிம்பிக் நடைபெற்ற, அதிலும் மிகப் பழமையும், புதுமையும் கலந்த ஒலிம்பிக் போட்டிகளைப் பலமுறை சக்சசாக நடத்திய அரங்கத்தில் நின்றபோது, கையில் கப்புடன் வெற்றி மேடையில் ஏறிய உற்சாகம் கிடைத்தது.

நகரத்தின் நடுவே எவ்வளவு பெரிய விளையாட்டு அரங்கம். அரசர் காலத்தில் ராஜாவும், ராணியும் அமரும் விதமாக நடுவில் இரண்டு நாற்காலி இருக்கைகள்.

ஆங்காங்கே விஐபிக்கள் அமர சாய்வு பெஞ்சுகள். நட்ட நடுவில் ட்ராக்குகள்.

விளையாட்டு வீரர்களும், விஐபி க்களும் வந்து செல்வதற்கான தனி வழி!

அரங்கத்தின் நடுவில், அனைவரும் காணும் உயரத்தில் ஒலிம்பிக் இலச்சினை. தனித்துவமான வெண் பளிங்குக் கற்களின் அணி வகுப்பால் அரங்கமே அலாதி அழகுடன் மிளிர்கிறது. ஆங்காங்கே விளக்குகளும், பார்வையாளர்களுக்கான போதுமான குடிநீர் வசதிகளுக்கான டேப்புகளும் பொருத்தப் பட்டுள்ளன. வீரர்கள் வருவதற்கான வாசலுக்கு மேலே ஒவ்வொரு ஒலிம்பிக்கின் போதும் எடுத்துச் செல்லப்பட்ட ‘டார்ச்’ என்றழைக்கப்படும் ஒலிம்பிக் ஜோதிகளின் வடிவங்கள். ஒவ்வொரு இடத்திலும் பல வரலாற்றுச் சிறப்புக்கள் வரிசை கட்டி நிற்கின்றன. எல்லாவற்றையும் படித்துணரத்தான் நேரம் போதவில்லை.

Greece Travel
Greece Travel

உள்ளே செல்ல டிக்கட் உண்டு. ஆனால் எவ்வளவு நேரந்தான் உள்ளே இருக்கலாம் என்ற கட்டுப்பாடுகள் எதுவும் கிடையாது. பார்வையாளர்கள் தாங்கள் விரும்பிய இடங்களில் அமர்ந்து ரசிக்கிறார்கள். ட்ராக்குகளில் ஓடி, ஒலிம்பிக்கில் பங்கு பெற்ற உற்சாகத்தை அனுபவிக்கிறார்கள். வின்னர்ஸ் ஸ்டாண்டில் ஏறி, ஒலிம்பிக்கிலேயே முதல், இரண்டு, மூன்றாம் இடம் பெற்ற மகிழ்ச்சியை அனுபவிக்கிறார்கள். என்ன? கப் கொடுக்கத்தான் யாரும் இல்லை!

இதன் விளக்கு அமைப்புகளால் ‘இரவு நேர அரங்கு’ என்ற பெயரும் இதற்கு உண்டு. கி.மு முதல் இன்று வரை கிரேக்கம் தத்துவத்தில், அரசியலில், நாகரீகத்தில், கட்டிடக் கலையில் மட்டுமல்ல; விளையாட்டிற்கு முக்கியத்துவம் அளிப்பதிலும் முந்தியே நிற்கிறது!

இவ்வளவு பளிங்குக் கற்களை இறைவன் கிரேக்கத்திற்கு மட்டுமே கொடுத்ததே அவர்களின் கட்டடக்கலை ரகசியம் அறிந்துதானோ என்றே எண்ணத் தோன்றுகிறது.

அப்பப்பா! நம்மூரில் சின்ன வயதில் நாங்கள் பளிங்கு கொண்டு விளையாடியதுண்டு.

ஆனால் இவர்களோ, வெண் பளிங்கினால் சும்மா பூந்து விளையாடி இருக்கிறார்கள்!

அடுத்த பகுதியில் அளவலாவுவோம்..! பகுதி 3

logo
Kalki Online
kalkionline.com