கிரேக்க நாட்டுக்கு ஒரு விசிட்: பகுதி 3 - குட்டி குட்டி 'பீச்'களும் எண்ணற்ற தீவுகளும்...

Odeon of Herodes Atticus - Greece Travel - 3
Odeon of Herodes Atticus - Greece Travel - 3
Updated on

இன்றைய அரசியலுக்கு அன்றே வழி வகுத்தவர் அரிஸ்டாட்டில்! சாக்ரடீசின் தத்துவங்களை நெறிப் படுத்தி எழுதி வைத்தவர் பிளாட்டோ! கட்டடம், சிற்பம் என்று அக்காலத்திலேயே கொடி கட்டிப் பறந்தவர்கள் கிரேக்கர்கள் என்றால் அது மிகையில்லை!

உயரமான இடங்களைத் தேர்ந்தெடுத்து அங்கு பளிங்குக் கற்களால் ஆன பெரும் மண்டபங்களை எழுப்புவதில் அவர்கள் சிறந்தவர்களாக இருந்திருக்கிறார்கள். ஒவ்வொரு தூணும் இரண்டு, மூன்று பேர் சேர்ந்து கட்டிப் பிடிக்கும் அளவுக்கு அகலமானவை. நமது நாட்டில் பிரிட்டிஷாரால் கட்டப்பட்ட பல கட்டடங்கள் அவர்கள் மாடலைப் பின்பற்றியே உள்ளன.

பின்னர் ஏற்பட்ட படையெடுப்புகளாலும், இயற்கையின் சீற்றங்களாலும், காலத்தின் ஓட்டங்களாலும் அவை சிதிலமடைந்து விட, அவற்றை இன்று வரை அப்படியே பாதுகாத்து, காட்சிப் படுத்தி வைத்திருக்கிறார்கள். அவற்றின் மூலம் உலக மக்களைக் கவர்ந்தும் வருகிறார்கள்.

பேசிக் கொண்டே நாம் டாக்சியிலிருந்து இறங்கி, எதிரே தெரியும் படிக்கட்டில் மேலே ஏறுகிறோம். படிக்கட்டின் இருமருங்கிலும் மரங்களும், செடிகளும் வளர்ந்துள்ளதால் சூழல் சுகமாக உள்ளது. பிரமாண்ட கட்டடங்கள் பல பழுதடைந்துள்ளதால் அவற்றை வெளியில் இருந்து மட்டுமே பார்க்க முடிகிறது.

உள்ளே சென்று பார்க்க அனுமதி இல்லை. ஆனால் அவற்றின் தெளிவான விபரங்களை கிரேக்கத்திலும், ஆங்கிலத்திலும் எழுதி வைத்துள்ளார்கள்.

இதனைப் பார்த்து விட்டுச் சற்றே கீழே தெரியும் மீயூசியத்தைப் பார்க்கப் பக்கவாட்டில் உள்ள படிக்கட்டுகளில் இறங்கிச் செல்ல வேண்டும். நடுவில் தோட்டம் இருக்கிறது.

நிறைய சாய்வு பெஞ்சுகளை அமைத்துக் களைப்பாற வழி செய்துள்ளார்கள். ரெஸ்ட் எடுத்த பின்னால் அந்த நீண்டு அழகிய கட்டடத்தை அடைந்தால் தரைத் தளத்திலும், மாடியிலும் பழஞ்சிற்பங்களைக் காட்சிக்கு வைத்துள்ளார்கள். அந்த பில்டிங்கின் உயர்ந்த தூண்களும் நீண்ட வரிசையுமே நம்மைக் கவர்ந்து விடுகின்றன.

அவற்றைப் பார்த்த பிறகு அடுத்த இடத்திற்குப் போகும் வழியிலேயே கிரேக்க பார்லிமெண்ட் கட்டடமும் அதன் எதிரே டவுன் ஸ்கொயரும் நம்மை அழைக்கின்றன.

Greece Travel
Greece Travel

ஐரோப்பிய நாடுகள் பெரும்பாலானவற்றில் இந்த டவுன் ஸ்கொயர்கள் நகரின் நடுவில் அமைந்துள்ளன. ஒரு மைதானத்தில் மக்கள் கூடுவதற்கு ஏற்ற வகையில் இவை அமைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து, ரெஸ்டாரண்டுகள், பலவகைக் கடைகள், ஓய்வெடுக்கப் பெஞ்சுகள் என்று அனைத்து வசதிகளும் இவ்விடங்களில் நிரம்பியுள்ளன. மாலையானால் மைதானத்தின் நடுவில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்தி மக்களை மகிழ்விக்கிறார்கள். பார்லிமெண்ட் கட்டடத்தைச் சுற்றிப் பெரிய பூங்கா அமைத்திருக்கிறார்கள். பூங்கா நெடுகிலும், உயர்ந்த மரங்களும், சிறு சிறு குட்டைகளும் அவற்றில் வாழும் நீர்வாழ் உயிரினங்களும் (பலவகை வாத்துகள், வண்ண மீன்கள், ஆமை, நண்டு போன்றவை) மனதுக்கு இதமளிக்கின்றன.

அங்கு உணவருந்தி ஓய்வெடுத்தபின் இப்பொழுது நாம் செல்வது ஓர் உயரமான இடத்திற்கு. முக்கியச் சாலையிலிருந்து பிரிந்து குறுகலான உயரமான சாலைகளில் நம் கார் பயணிக்கிறது. நமக்குச் சற்றே அச்சமாக இருந்தாலும், இங்குள்ள ஓட்டுனர்கள் அனாயாசமாக ஓட்டுகிறார்கள். அந்த உயரமான இடத்திற்கு வந்து, டிக்கட் வாங்கிக் கொண்டு உள்ளே சென்றால், இழுவை ரயில் தயாராக நிற்கிறது. ஏறி அமர்ந்ததும் அது மேலே ஏற, குறிப்பிட்ட உயரத்தை அடைந்ததும் இறங்கிப் படிகளில் ஏறி மேலே செல்கிறோம்.

அந்த அதி உயர இடத்தின் மேலே உள்ள ஒரு கொடிக்கம்பத்தில் மாலையானதும் சகல மரியாதைகளுடன் இரு ஜவான்கள் கொடியை இறக்குகிறார்கள். அதனைப் பார்க்கவும், அதனைத் தொடர்ந்து மறையும் சூரியனைப் பார்க்கவும் அங்கு மக்கள் பெருந்திரளாகக் கூடுகிறார்கள்.

கிரேக்க நடைமுறைகள் நமது நாட்டுடன் பல விஷயங்களில் ஒத்துப் போவதாக ஏற்கெனவே சொன்னோமல்லவா! வாஹா பார்டரில் நடைபெறும் நிகழ்ச்சி முன்னதுடனும், நமது கன்னியாகுமரியில் ‘சன்ரைஸ்’, ’சன்செட்’ஐக் காண அலைமோதும் கூட்டம் பின்னதுவுடனும் ஒத்துப் போவதை, நாம் இங்கு நினைவில் கொள்ளலாம்.

சன் செட் டைக் கண்ட பிறகு பெரும்பாலானவர்கள் கீழிறங்கி விட, பலர் அங்குள்ள ரெஸ்டாரண்டிலேயே இரவு உணவை முடித்துக் கொள்கிறார்கள். மேலிருந்து நகரை 360 டிகிரியில் காணமுடிகிறது. விளக்குகளில் மின்னும் நகரைக் காண்கையில் நம் தீபக் கார்த்திகை நாள் மனதுள் வலம் வருகிறது.

பெரிய நகரங்களில் பீச் இருந்தால் அது ஒரு தனிச் சிறப்பு. உலகின் இரண்டாவது பெரிய பீச், அமெரிக்காவின் மியாமியைத் தொடர்ந்து, நமது மெரீனா கடற்கரைதான் என்பதை அறிவோம். மெரீனாவுடன் ஒப்பிடுகையில் இங்குள்ள பீச்கள் குட்டி குட்டியாகத் தெரிகின்றன.

Greece Travel
Greece Travel

பீச்சில் சப்மரீன் என்றழைக்கப்படும் ஒரு நீர்மூழ்கிக் கப்பலையும், பயன் பாட்டில் இருந்த ஒரு பழம் கப்பலையும் பார்வைக்கு வைத்துள்ளார்கள். கப்பலின் உள்ளே சென்றால் ஒரு மாளிகை போல் இருக்கிறது. அப்பப்பா! எத்தனை அறைகள். என்னென்ன பாதுகாப்பு வசதிகள். மேலே பீரங்கியும் உண்டு.

நமது நாட்டுடனான அடுத்த ஒற்றுமை, நிறைய குட்டித் தீவுகளை கிரேக்கமும் கொண்டுள்ளது. நமது அந்தமான் நிக்கோபார் தீவுகளின் மொத்த எண்ணிக்கை ஐநூறுக்கும் மேலென்றும், சுமார் 8000 க்கும் மேலான சதுர கி.மீ பரப்பளவு கொண்டதென்றும் கூறப்படுகிறது. ஆனால் வெறும் 36 தீவுகளில்தான் மனிதர்கள் வசிக்கிறார்களாம்.

கிரேக்க நாட்டைச் சுற்றியுள்ள ஏஜியன் மற்றும் அயோனியன் கடற்பகுதிகளில் சுமார் 6000 தீவுகளும், தீவுக் கூட்டங்களும் பரந்து கிடக்கின்றனவாம். ஆனால், 227 தீவுகளில் மட்டுமே மனிதர்கள் வசிப்பதாக விபரங்கள் தெரிவிக்கின்றன.

அந்தத் தீவு ஒன்றுக்குச் சென்று வருவோமே..! பகுதி 4

logo
Kalki Online
kalkionline.com