கிரேக்க நாட்டுக்கு ஒரு விசிட்: பகுதி 4 - நீலக் கடல் ஓரத்திலே நீண்டு நெளியும் அழகு நகர்!

Aegina Port & Waterfront - Greece Travel - 4
Aegina Port & Waterfront - Greece Travel - 4
Updated on

பழசும் புதுசும் கலந்து கிடக்கும் ஏதென்ஸ் நகரைச் சுற்றிப் பார்த்த பிறகு, பக்கத்திலுள்ள ‘எஜினா’ தீவுக்குப் பயணமானோம். இந்தத் தீவில் நிறைய பிஸ்தா உற்பத்தி செய்கிறார்களாம். ஏதென்சிலிருந்து சுமார் ஒன்றேகால் மணி நேரக் கடற் பயணந்தான். 'ஃபெரி’ என்றழைக்கப்படும் மீடியமான கப்பல் அது. அதிலேயே ஆயிரம் பேர் பயணம் செய்யலாமாம். கீழே உள்ள டெக்கில் கார்களையும், டாங்கர் லாரிகளையுங்கூட ஏற்றிக் கொள்கிறார்கள். அதற்குமேல் உள்ள இரண்டு டெக்குகளில் ஸ்டார் ஹோட்டல்களையொத்த ஹால் அமைப்புகள் உள்ளன. நாம் குடும்பத்தாருடன் அமர்ந்து செல்ல வசதியாக உள்ளது. நடுவிலேயே ரெஸ்டாரண்டும் உள்ளது.

பயணத்தின்போதே விருப்பமானவற்றை ஆர்டர் செய்து சாப்பிட்டுக் கொள்ளலாம்.

குறிப்பிட்ட நேரத்தில் எஜினா தீவைத் தொட்டு விட்டது எங்கள்ஃபெரி.

Greece Travel
Greece Travel

இறங்கிச் சிறிது தூரம் நடந்தால் நம்மூர் கடைத்தெரு போல வரிசையாகக் கடைகள். ரெஸ்டாரண்டு என்றழைக்கப்படும் சாப்பாட்டுக் கடைகளும், ஐஸ் க்ரீம் பார்லர்களும், பிஸ்தா விற்கும் கடைகளுமென்று நீண்டு கொண்டே போகிறது. கடையொன்றில் சாப்பிட்டு விட்டு, அருகிலுள்ள வாடகைக்குக் கார் விடும் நிலையத்தில் ஒரு காரை எடுத்துக் கொண்டு, சுமார் 7 கி.மீ தூரத்தில் நாங்கள் புக் செய்திருந்த வீட்டிற்குச் சென்றோம். சாலைகள் நன்றாக உள்ளன. அந்த வீடு மலையின் மீது அமைந்துள்ளது.

வசதியான வீடு. வாசலில் அமர்ந்தால், எதிரே கடல்! பீச்சில் அமர்ந்திருப்பதைப் போலவே இருந்தது. இன்னும் முழுதான குளிர் குறைந்து கோடை வரவில்லை. எனவே கூட்டம் அதிகமாக இல்லை. வீட்டில் சமைத்துக் கொள்வதற்கான அனைத்து வசதிகளும் உள்ளன. கடலைப் பார்த்தபடி இருந்த ஈசி சேர்களில் படுத்து, இதமான சூழலில் ஓய்வு எடுத்தோம்.

Greece Travel
Greece Travel

கூட்டமில்லாத பீச்கள்! பக்கத்திலேயே ரெஸ்டாரண்டுகள். ஆழமில்லாத கடல்.

கடலில் இறங்கிக் குளிப்பதும் பிறகு சற்று நேரம் கரையில் கிடக்கும் ஈசி சேர்களில் ஓய்வெடுப்பதுமாக இருந்தார்கள் அங்குள்ளவர்கள். பக்கத்திலுள்ள ரெஸ்டாரண்ட் காரர்களே பீச்சில் குடைகளையும், சேர்களையும் போட்டுள்ளார்கள். நமது சீட்டுக்கே வந்து ஆர்டர் எடுத்துச் செல்வதுடன் சீட்டுக்கே உணவு வகைகளையும், குடிக்கும் பானங்களையும் சப்ளை செய்து விடுகிறார்கள்.

Greece Travel
Greece Travel

இரவு எட்டரை ஒன்பது வரை வெளிச்சம் இருக்கிறது. அமைதியும், உடலுக்கு உகந்த சூழலும் இதம் தருகின்றன. தீவு என்பதால் கடல் மீன் தாராளமாகக் கிடைக்கிறது. உணவகங்களில் மீன்கள் இருக்கும் தொட்டிகளுக்கே நம்மை அழைத்துச் சென்று நமக்குப் பிடித்த மீனைத் தேர்வு செய்யச் சொல்கிறார்கள்.

சிறிது நேரத்திலேயே ஃப்ரை செய்து நமது டேபிளுக்குக் கொண்டு வந்து விடுகிறார்கள். இன்னும் சீசன் ஆரம்பிக்காததால் எல்லா இடங்களிலும் வரிசையில் நிற்கும் நிலை வரவில்லை.

அமைதி என்றால் அப்படியோர் அமைதி. கடல் கூட நமது மெரீனா போன்று பெரிய அலைகளுடன் வந்து நம்மைப் பயமுறுத்துவதில்லை. மிக மெலிதான அலைகளே அடிக்கின்றன. நீலக் கடல் என்று அழைப்பதற்கேற்ப, கண்ணனின் வண்ணமே கடலெங்கும் பரவியிருக்கிறது. உடற்பயிற்சி செய்ய, தியானம் செய்ய ஏற்ற சூழல் நிலவுகிறது. பெரும் பணம் படைத்தோர் தனித்தீவு வாங்க ஆசைப்படுவதன் நோக்கத்தை இங்கிருக்கையில் நன்றாக உணர முடிகிறது. தீவு என்றாலும், நீண்டு நெளிந்து ஒரு நகரைப் போன்றே காட்சியளிக்கிறது.

பேரூந்துகள், வேன்கள், கார்கள், குதிரை வண்டிகள், பைக், ஸ்கூட்டர், சைக்கிள் என்று அத்தனை போக்குவரத்துச் சாதனங்களும் ஓடுகின்றன. ஆக்டிவ்வாகச் சுற்றிப் பார்ப்பவர்களுக்கு ஓரிரண்டு நாட்களே போதுமானவை. ஓய்வெடுப்பவர்கள் ஒரு வாரம் தங்கி ஓய்வெடுத்து, தினமும் கடலில் குளித்து, அசைவப் பிரியர்கள் என்றால், தினம் ஒரு மீன் வகையாக ருசித்து வாழ்க்கையை அனுபவித்து வரலாம்.

நாங்கள் இரண்டு நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஃபெரி ஏறி, ஏதென்ஸ் துறைமுகம் வந்தோம். அங்கிருந்து ரயில் பிடித்து விமான நிலையம் அடைந்தோம். சுமார் ஒரு மணி நேரப் பயணம். கடைசி சில நிமிடங்களைத் தவிர, ரயில் ‘டன்னல்’ என்றழைக்கப்படும் பூமிக்கு அடியிலான பாதையிலேயே பயணிக்கிறது. நல்ல வேகத்தில் இயக்கு கிறார்கள். பாதாள ஸ்டேஷன்கள் என்றால்கூட அவ்வளவு நேர்த்தியாக உள்ளன.

ஸ்டார் அலையன்ஸ் விமானம் அடுத்த இரண்டரை மணி நேரத்தில் எங்களைச் சூரிக்கில் தள்ள, ரயில், பஸ் என்று மாறி வீட்டை அடைந்தோம்!

கிரேக்க மக்கள் பிரியமுடனே நடந்து கொள்கிறார்கள். ரயில், பேரூந்தில் வயதானவர்கள் வந்தால் எழுந்து இடம் கொடுக்கிறார்கள். பாதைக்கு அருகில் நாம் புகைப்படம் எடுத்தால், இடைஞ்சல் ஏற்படுமோ என்று எண்ணி நின்று விடுகிறார்கள்.

முக்கிய இடங்களில் நினைவுச் சின்னங்களுடன் குடும்பப் புகைப்படம் எடுக்க நாம் செல்பிக்குப் போனால், அவர்களாகவே வந்து நமது செல்லை வாங்கிப் படம் எடுத்துக் கொடுக்கிறார்கள். க்யூக்களில் முந்தும் வழக்கமெல்லாம் இங்கு கிடையாது.

ரயில்கள் தாமதமின்றி ஓடுகின்றன. டாக்சிகள் கூப்பிட்டவுடனே வந்து விடுகின்றன.

ட்ராபிக் ஜாம்கள் அரிதாகவே உள்ளன. சாலைகளும் நன்றாகவே உள்ளன.

நம்மூர் அரளிச் செடியையும், ஆடா தோடையையும் இங்கு பல இடங்களில் காண முடிந்தது. குளிர் இருந்தாலும் பனிப்பொழிவு இல்லாத நாடாம் கிரேக்கம். ஐரோப்பிய நாடுகளைச் சுற்றிப்பார்க்க இதுவே சரியான நேரம். ஸ்ப்ரிங் எனப்படும் வசந்த காலம் இது. தாவரங்கள் அனைத்தும் பூத்துக் குலுங்கித் தளிர் விடும் நேரம் இது. தொடர்ந்து கோடை ஆரம்பமாகி விடும். நமக்கு, அதிகக் குளிரின்றி இதமாக இருக்கும்.

இந்திய ரெஸ்டாரண்டுகள் இப்பொழுது எல்லா இடங்களிலும் இருக்கின்றன.

ஏதென்சில் ‘தோசா கிங்’ (Dosa King) ’ராஜஸ்தான் பேலஸ்’ (Rajasthan Palace), இண்டியன் செப் (Indian Chef) போன்றவை உள்ளன.

என்ன? திட்டம் தீட்ட ஆரம்பித்து விட்டீர்களா? நல்லது. ஒரு முறை சென்று பார்த்துத்தான் வாருங்களேன்!

நிறைவு.

logo
Kalki Online
kalkionline.com