

குஜராத் மாநிலத்தில் போர்பந்தர் - ராஜ்கோட் நெடுஞ்சாலையில், போர்பந்தரில் இருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ரணவவ் (Ranavav) எனும் கிராமத்தில் அமைந்துள்ளது ஜாம்பவான் குகை. கிருஷ்ணர் ஜாம்பவானுடன் 28 நாட்கள் போரிட்டதாக கருதப்படும் புராண முக்கியத்துவம் வாய்ந்த குகையாகும். இது ராமாயணம் மற்றும் மகாபாரதத்துடன் தொடர்புடையது. மேலும் இது சுயம்பு லிங்கங்களைக் கொண்ட ஒரு புனித தலமாகும்.
குஜராத்தில் முக்கியமான வரலாற்று மற்றும் ஆன்மீக தலங்களில் ஒன்றான இந்த குகை பஞ்ச துவாரகா யாத்திரை பாதையில் ஒரு முக்கிய நிறுத்தமாகும். குகைக்கு வெளியே ராமர் கோயிலும், குரு ராம்தாஸ் என்பவரின் சமாதியும் உள்ளது.
புராணக்கதை:
சியமந்தக மணி என்ற விலைமதிப்பற்ற ரத்தினத்திற்காக பகவான் கிருஷ்ணருக்கும், கரடி அரசன் ஜாம்பவானுக்கும் இடையே 28 நாட்கள் கடுமையான போர் நடந்த இடமாக இந்த குகை நம்பப்படுகிறது. போரின் முடிவில் ஜாம்பவான் கிருஷ்ணரை ராமபிரானின் அவதாரம் என்பதை உணர்ந்து, அவரிடம் மன்னிப்பு கேட்டு ரத்தினத்தை திரும்ப ஒப்படைத்ததுடன் தன்னுடைய மகள் ஜாம்பவதியை கிருஷ்ணருக்கு மணமுடித்துக் கொடுத்தார்.
குகையின் அமைப்பு:
குகைக்குச் செல்லும் பாதை செங்குத்தான மற்றும் குறுகிய இறக்கத்தைக் கொண்டுள்ளது. குகையின் நுழைவாயில் குறுகலாக இருந்தாலும், உள்ளே சென்றவுடன் விசாலமான இடத்தைக் கொண்டுள்ளது. குகையின் கூரையிலிருந்து நீர் சொட்டிக்கொண்டே இருப்பதால், இயற்கையாகவே உருவான 50க்கும் மேற்பட்ட சுயம்பு லிங்கங்கள் இங்கு காணப்படுகின்றன. இது அமர்நாத் குகையைப் போன்ற ஒரு அனுபவத்தைத் தருகிறது. குகை இயற்கையான குளிர்ந்த சூழலைக் கொண்டுள்ளது. தியானம் செய்ய ஏற்ற அமைதியான இடமாக திகழ்கிறது.
நிலப்பரப்பிலிருந்து சுமார் 25 அடி ஆழம் வரை நீளும் இந்த குகை குஜராத் அரசின் புதைபொருள் ஆராய்ச்சி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்குதான் ஸ்ரீ கிருஷ்ணர் ஜாம்பவதி திருமணம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இங்கு குகைக்குள் இறங்குவதற்கு பாறைகளே இயற்கை படிக்கட்டுகளாக திகழ்கின்றன. உள்ளே இரண்டு சுரங்கப்பாதைகள் தெரிகின்றன. ஒன்று துவாரகாவுக்கும் (இதனை ஸ்ரீ கிருஷ்ணர் வந்த வழி என்கிறார்கள்), மற்றொன்று ஜுநாகாட் என்ற இடத்துக்கும் செல்கிறது. இங்கு வற்றாத கிணறு ஒன்றும் உள்ளது.
சுமார் 100 அடி நீளம், 80 அடி அகல குகைக்குள் சுயம்புவாக சிவலிங்கங்களும், சங்கு முகமும் காணப்படுகின்றன. ஜாம்பவானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பழங்கால கோவிலும், அங்கு இயற்கையாகவே உருவான சிவலிங்கமும் வழிபடப்படுகிறது. குகையைச் சுற்றி இயற்கையான சிற்பங்களையும் காணமுடிகிறது. குகைக்குள் ஒரு இயற்கை நீரோடை உள்ளது. அது லிங்கத்தின் மேல் நேரடியாக எந்த இடையூறும் இன்றி தொடர்ந்து சொட்டுகிறது.
எப்படி செல்வது?
பார்வையிட சிறந்த நேரம் அக்டோபர் முதல் மார்ச் வரை. அருகில் உள்ள விமான நிலையம் மற்றும் ரயில் நிலையம் - போர்பந்தர். அங்கிருந்து குகைக்கு டாக்ஸிகள் மற்றும் பொது போக்குவரத்து வசதிகள் உள்ளன. காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பார்வையிட அனுமதிக்கப் படுகிறது. ஜாம்பவான் குகையைப் பார்வையிட டிக்கெட் எதுவும் கிடையாது. அனுமதி இலவசம்.
அருகில் பார்க்க வேண்டிய இடங்களாக மகாத்மா காந்தியின் பிறந்த இடமான கீர்த்தி மந்திர் எனும் அருங்காட்சியகமும், கிருஷ்ணரின் பால்ய நண்பரான சுதாமாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கோவிலும் உள்ளது.