
தமிழ்நாட்டிற்கு அருகில் அமைந்துள்ள ஆந்திரபிரதேசத்தைச் சேர்ந்த சித்தூர் மாவட்டத்தில் தலகோணா அருவி, தடா அருவி, ஆகாச கங்கா அருவி, கைலாசகோனா அருவி என பல அருவிகள் அமைந்துள்ளன. சென்னையிலிருந்து சுமார் எண்பது கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இத்தகைய அருவிகளுக்கு சென்னையிலிருந்து காலையில் புறப்பட்டு அருவிகளில் நீராடி மாலை திரும்பிவிட இயலும் என்பது சிறப்பு.
சென்னையிலிருந்து குற்றாலம் சென்று திரும்ப இரண்டு நாட்களாகும். மேலும் செலவும் அதிகம் பிடிக்கும். சென்னையிலிருந்து இரண்டு மணி நேரப்பயண தூரத்தில் அமைந்துள்ளது கைலாசகோனா அருவி.
கைலாசகோனா அருவி 1980 களில் பிரபலமடையத் தொடங்கி தற்போது பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. தினந்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் இந்த அருவிக்கு வருகை தந்து குளித்து மகிழ்ச்சியோடு திரும்புகிறார்கள்.
சுமார் 30 மீட்டர் உயரம் கொண்ட இந்த அருவி பல வழித்தடங்களைக் கடந்து வருவதால் மருத்துவ குணம் கொண்டதாகக் கருதப்படுகிறது. இந்த அருவியின் சிறப்பு என்னவென்றால் வருடத்தில் அனைத்து நாட்களிலும் தண்ணீர் கொட்டியபடியே இருப்பதுதான். ஒரு சமயத்தில் இருபது பேர்கள் வரை குறிக்க இயலும்.
இப்பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீகைலாசநாத ஸ்வாமி கோயிலுக்கு அருகில் பிரதான அருவி அமைந்துள்ளது. இந்த கைலாசகோனா அருவியைத் தவிர இப்பகுதியில் இரண்டு சிறிய நீர்வீழ்ச்சிகள் உள்ளன. இந்த இரண்டு நீர்வீழ்ச்சிகளை அணுக சரியான பாதைகள் இல்லை.
கைலாசகோனா சென்னையிலிருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து ஊத்துக்கோட்டை நாகலாபுரம் மார்க்கமாகச் சென்றால் கைலாச கோனா அருவியை அடைந்து விடலாம்.
அருவியின் நுழைவாயிலின் முன்னால் கார் மற்றும் பேருந்துகளை நிறுத்தும் வசதி உள்ளது. அருவி பகுதிக்குச் செல்ல ஒரு நபருக்கு பத்து ரூபாய் நுழைவுக்கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. நுழைவாயிலிலிருந்து ஐந்து நிமிட நடை பயணத்தில் அருவியை அடைந்து விடலாம். நுழைவாயில் அருகில் சிறு சிறு கடைகள் உள்ளன.