கோடை விடுமுறையில் உங்கள் குழந்தைகளுக்குக் காட்ட அருமையான வனவிலங்கு சரணாலயங்கள் லிஸ்ட் இங்கே!

கோடை விடுமுறையில் உங்கள் குழந்தைகளுக்குக் காட்ட அருமையான வனவிலங்கு சரணாலயங்கள் லிஸ்ட் இங்கே!

குழந்தைகளுக்கு ஆண்டு இறுதி பள்ளி விடுமுறை அறிவிக்கப்படும் ஒவ்வொரு முறையும் பெற்றோருக்கு ஒரு புதுத் தலைவலி ஆரம்பமாகி விடும். இந்த முறை சுற்றுலாவுக்கு அவர்களை எங்கு அழைத்துச் செல்வது? எங்கு சென்றால் அவர்கள் சந்தோசமாகவும், குதூகலமாகவும் உணர்வார்கள். எங்கு சென்றால் டைம் வேஸ்ட் என்ற மனநிலை வராமல் இருக்கும்? எது வொர்த்தான டூர் ஸ்பாட்? இத்யாதி… இத்யாதி யோசனைகள் மூளைக்குள் விண் விண்ணென்று தெறித்துக்கொண்டே இருக்கும். இதற்கு பொருத்தமான இடமொன்று சீக்கிரத்தில் சிக்கவில்லையோ பிறகு பிள்ளைகளின் நச்சுத் தொல்லையிலிருந்து நம்மைக் காக்க யாராலும் முடியாது. ஆக, இந்தப் பிரச்சனையைத் தீர்க்க சுலபமான வழி ஒன்று உண்டு என்றால் அது முன்கூட்டிய திட்டமிடல் மட்டுமே.

இப்போதெல்லாம் ரிஸார்ட்டுகளுக்குப் படையெடுக்கிறார்கள் எல்லோரும். ஆனால், வருடாந்திர டூர் என்பது பொழுதுபோக்கை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இல்லாமல் கொஞ்சம் நமக்கான படிப்பினைகளையும், வாழ்நாள் பாடங்களையும், கொஞ்சம் சுற்றுச் சூழல் பாடங்களையும் கூடவே அதிகப்படியான சந்தோசங்களையும் அள்ளித்தருவதாக அமைந்தால் அதல்லவோ சூப்பர்ப் மொமண்டுகளை நமக்குப் பரிசளிக்கக் கூடும்.

அப்படியான இடங்களைப் பட்டியலிடத் தொடங்கினால் அதில் நிச்சயம் வனவிலங்கு சரணாலயங்கள் மற்றும் பறவைகள் சரணாலயங்களுக்கு எப்போதுமே முதலிடம் உண்டு. இப்போது இங்கு தேசிய அளவில் நம் பிள்ளைகள் அறிந்து கொள்ள வேண்டிய 6 சரணாலயங்களைப் பற்றி இங்கு அறிமுகப்படுத்தி இருக்கிறோம்.

இந்த விடுமுறைக்கு இங்கும் தான் சென்று பாருங்களேன். முடிந்தால் உங்கள் அனுபவங்களைக் கல்கி ஆன்லைனில் பகிர்ந்து கொள்ளவும் முயலுங்கள்.

கன்ஹா தேசியப் பூங்கா (மத்தியப் பிரதேசம்)

இந்தியாவின் பெருமைக்குரிய அடையாளங்களில் ஒன்றான கன்ஹா தேசியப் பூங்கா மத்தியப் பிரதேசத்தின் பாலாகாட் மற்றும் மண்ட்லா மாவட்டங்களுக்கு இடையே அமைந்துள்ளது. இங்கு புலிகள் பாதுகாப்புத் திட்டம் அமுலில் இருக்கிறது. இதன் மொத்தப் பரப்பளவு 940 சதுர கிலோ மீட்டர்கள். மத்திய இந்தியப் பகுதியில் அமைந்துள்ள தேசியப் பூங்காக்களிலேயே இது மிகப்பெரிது என்று பெயர் பெற்றது. இங்கு வங்காளப்புலிகள், சிறுத்தைப் புலிகள், செந்நாய்கள் அதுமட்டமல்ல மான்களும் கூட இங்கு அதிகம் காணப்படுகின்றன. இந்த வனவிலங்கு பூங்காவில் மூன்கில் மரங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. 1955 ஜூன் மாதத்தில் இந்தப் பூங்காவானது தேசிய பூங்கா

எனும் அந்தஸ்தைப் பெற்றது. ருட்யார்டு கிப்லிங் எழுதிய புகழ்பெற்ற நாவலான தி ஜங்கிள் புக் இந்தக் காட்டைத் தழுவியே எழுதப்பட்டதாகக் கூறுகிறார்கள்.

கேவ்லாதேவ் நேஷனல் பார்க் (ராஜஸ்தான்)

உள்ளூர் மக்களால் கேவ்லாதேவ் கானா பூங்கா என அழைக்கபட்டும் இப்பகுதியானது மனிதனால் உருவாக்கப்பட்ட மற்றும் மனிதனால் நிர்வகிக்கப்படும் சதுப்புநிலப்பகுதி ஆகும். இந்த நிலப்பகுதியானது அவ்வப்போது ஏற்படும் வெள்ளத்திலிருந்து பரத்பூரை பாதுகாக்கிறது, இது முன்பு பரத்பூர் நேஷனல் பார்க் என்று அழைப்பட்டு வந்தது. தற்போது கேவ்லாதேவ் எனப் பெயர் மாற்றம் அடைந்துள்ளது. இது இந்தியாவின் கிழக்கு இராஜஸ்தான் மாநிலத்தில் பரத்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தேசியப் பூங்காவாகும்.இது தற்போது சிறப்பானதொரு பறவைகள் சரணாலயமாக விளங்குகின்றது. இங்கே உள்ளூர் நீர்ப் பறவைகளுடன், புலம்பெயர்ந்து வரும் நீர்ப் பறவைகளையும் பெருமளவில் காணலாம். சுமார் 29 சதுர கிலோமீட்டர் பரப்பளவையே கொண்ட இந்தச் சிறிய பூங்காவில் 350 க்கும் மேற்பட்ட பறவைகள் வசிப்பதாக அறியப்படுகிறது. இங்கே ஆண்டு தோறும் புலம் பெயர்ந்து வருகின்ற பறவைகளில் சைபீரியக் கொக்குகள் மிகவும் பிரபலமானவை. ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணம் செய்து இப்பகுதிக்கு வரும் இவ்வகைக் கொக்குகள் தற்போது அழியும் நிலையிலுள்ள பறவைகளாகும். இது 1971இல் இருந்து பாதுகாக்கப்பட்ட வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் 1985ஆம் ஆண்டில் இந்த பூங்கா யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னமாகவும் அறிவிக்கப்பட்டது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

ஜிம் கார்பெட் தேசியப் பூங்கா (உத்தரகாண்ட்)

இது இந்தியாவின் முதல் தேசியப் பூங்கா ஆகும். முதலில் எய்லி தேசியப்பூங்கா என்ற பெயருடன் துவக்கப்பட்ட இந்த சரணாலயம் பின்னர் பிரசித்தி பெற்ற வேட்டைக்காரரும், இயற்கை ஆர்வலருமான ஜிம் கார்பெட்டின் பெயரால் நினைவு கூரப்படுகிறது. உத்தரகாண்ட் மாநிலத்தில் 1936 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்தப்பூங்கா மேற்கு இமயமலை அடிவாரத்தில் சுமார் 920 சதுர கிமீ நிலப்பரப்பில் விஸ்தீரணமாக அமைந்துள்ளது.

இது புகழ்பெற்ற புலிகள் வாழ்விடமாக அறிவிக்கப்பட்ட சரணாலயங்களில் ஒன்று. இங்கு பூனை இன விலங்குகளான புலி, சிறுத்தை போன்றவையும் அவற்றின் இரையான மானினங்களும் பிரதானமாக காணப்படுகின்றன. அவை தவிர, யானைகள், கரடிகள் மற்றும் பிற சிறு விலங்குகளும் கூட இங்கு வசிக்கின்றன.

இங்குள்ள மரங்களில் பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன என அனைத்து விதமான வன உயிரினங்களைச் சார்ந்தும் கிட்டத்தட்ட 770 வகையான சிற்றினங்களைக் காண முடியும் என விலங்கு நல ஆர்வலர்களும் வனத்துறை ஊழியர்களும், அதிகாரிகளும் கூறுகின்றனர். பூங்காவின் ஊடாக ராம்கங்கா ஆறு ஓடுகிறது. இதில் முதலைகளையும் காணமுடியும். ஆண்டுதோறும் நவம்பர் 15 முதல் ஜூன் 15வரை இந்தப் பூங்கா திறந்திருக்கும்.

காசிரங்கா வனவிலங்கு சரணாலயம் (அஸ்ஸாம்)

அஸ்ஸாம் மாநிலத்தின் கோலாகட் மற்றும் நகாவோன் மாவட்டங்களில் அமைந்துள்ள இந்த தேசியப் பூங்காவானது, சுமார் நானூறு சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்கு விரிந்திருக்கிறது. உலகிலேயே இந்தியாவின் பெருமைக்குரிய அரியவகை ஒற்றைக் கொம்புக் காண்டாமிருகங்கள் வசிக்கும் இந்த காசிரங்கா காடுகள், அஸ்ஸாமின் சுற்றுலாச் சிறப்புகளில் முன்னிலை வகிப்பவை. அஸ்ஸாம் மாநிலத்தில் பிரம்மபுத்ரா நதிப்படுகையில் இது அமைந்துள்ளது. உலகின் ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்களில் மூன்றில் இரண்டு பங்கு இங்குள்ளன. இவை தவிர யானைகள், காட்டெருமைகள், மான்கள் மற்றும் அரியவகைப் பறவையினங்களையும் இங்கு காணமுடியும்.

சுந்தர வனக்காடுகள் (மேற்கு வங்காளம்)

சுந்தரவனக்காடுகள் உலகத்தில் உவர்த்தன்மையுள்ள அலையாத்தி சதுப்புநில காடுகளில் மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகின்றது. சுந்தரவனக்காடு என்பது வங்காள மொழியில் "அழகான அடர்ந்தகாடு" என்று பொருள்படும். இங்கு அதிக எண்ணிக்கையில் சுந்தரி மரங்கள் காணப்படுவதால் இதற்கு இப்பெயர் வழங்கப்பட்டிருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.

இந்த காடுகள் வங்காளதேசம் மற்றும் இந்தியாவின் நிலப்பரப்புக்கு இடைப்பட்ட பகுதியிலும், கங்கையின் அடியிலும் அமைந்துள்ளன, இது கழிமுகத்தின் கடல் நோக்கிய விளிம்பாக இருக்கும். இந்த காட்டின் சுற்றளவு 1௦,௦௦௦ கி.மீ ஆகும். இதில் 6,௦௦௦ கி.மீ பரப்பு வங்காளத்தேசத்திற்குட்ட நிலப்பரப்பில் உள்ளது.1997 ஆம் ஆண்டில் இதற்கு யுனெஸ்கோ உலக பாரம்பரிய நினைவுச்சின்ன அங்கீகாரம் கிடைத்தது. ஆனால், இது இரு நாடுகளிலும் பரவியுள்ள பரந்த நிலப்பரப்பில் அமைந்திருப்பதால் இந்தப் பெருமையை இரு நாடுகளுமே தற்போது பகிர்ந்து கொண்டிருக்கின்றன. இங்கு வங்காளத்தின் பெருமை மிகு புலிகள், எண்ணற்ற பறவைகள், புள்ளி மான்கள், முதலைகள் மற்றும் பாம்புகளும் உண்டு. புள்ளிவிவரக் கணக்கீட்டின் படி இங்கு இப்பொழுது 5௦௦ வங்காளப் புலிகள் மற்றும் 3௦௦ புள்ளி மான்கள் உள்ளன.

தி கிரேட் ஹிமாலயன் தேசியப் பூங்கா (இமாச்சலப் பிரதேசம்)

இது இந்தியத் தேசியப் பூங்காக்கள் பட்டியலில் சமீபத்தில் இணைக்கப்பட்ட ஒன்றாகும். இது இந்தியாவின் இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் குலு பகுதியில் அமைந்துள்ளது. இந்த தேசியப் பூங்காவானது 1984 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதன் மொத்தப் பரப்பளவு 1,171 சதுர கிலோமீட்டர்கள். இந்த பூங்காவானது கடல் மட்டத்திலிருந்து 1500 முதல் 1600 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ளது. இந்தப் பூங்காவில் 375 க்கும் அதிகமான வனவிலங்குகள் இனம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 31 பாலூட்டி இனங்கள், 181 பறவை இனங்களும் அடங்கும். இந்தப் பூங்காவானது கடுமையான வன விதிகளின் படி பாதுகாக்கப்படுகிறது. இந்திய வனச் சட்டம் 1972 ன் படி இங்கு வேட்டையாடுவது தடை செய்யப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com