
உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள். கோயிலில் எந்த நேரத்திலும் கூட்டம் நிறைந்தே காணப்படும். தற்போது கோடை விடுமுறை விடப்பட்ட நிலையில், கோயிலில் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தேவஸ்தானம் ஜூன் மாதம் வரை விஐபி பிரேக் தரிசனத்தை நிறுத்தி வைத்துள்ளனர்.
சராசரியாக தினசரி பக்தர்கள் 10 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்கிறார்கள். அப்படி திருப்பதிக்கு செல்பவர்கள் ஏழுமலையானை மட்டுமே தரிசித்து விட்டு அறையில் ஓய்வெடுத்து விட்டு கிளம்பி விடுவார்கள். ஆனால் இனி நீங்கள் திருப்பதி சென்றால் கட்டாயம் இந்த இடங்களுக்கு விசிட் செய்து வாருங்கள். இது நிச்சயமாக கோடை சுற்றுலாவை நிறைவு செய்தது போலவும் இருக்கும்.
1. தலகோனா நீர்வீழ்ச்சி:
இது நாட்டின் மிக உயரமான நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. வெங்கடேஸ்வரா தேசிய பூங்காவிற்குள் அமைந்துள்ள தலகோனா, ஆந்திராவின் மிக உயரமான நீர்வீழ்ச்சியாக அறியப்படுகிறது. கோயிலிலிருந்து இங்கு செல்ல 1:30 மணி நேரம் ஆகும்.
2. கபில தீர்த்தம்:
கபில தீர்த்தம் ஆனது திருமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. கபில தீர்த்தம் என்பது புகழ்பெற்ற சிவன் கோயில் மற்றும் தீர்த்தம் ஆகும். இது இந்தியாவின் ஆந்திரா, சித்தூர் மாவட்டத்தில் திருப்பதியில் அமைந்துள்ளது. இங்குள்ள சிவன் கபிலேசுவரா என்று குறிப்பிடப்படுகிறார்.
3. சந்திரகிரி கோட்டை:
திருப்பதியிலிருந்து சிறிது தூரத்தில் உள்ள இந்தக் கோட்டை, விஜயநகரப் பேரரசின் கட்டடக்கலைக்கு ஒரு சான்றாக நிற்கிறது. இந்தக் கோட்டை சுற்றியுள்ள சமவெளிகளின் பரந்த காட்சிகளை வழங்குகிறது. இந்த சந்திரகிரி கோட்டையானது கோயிலிலிருந்து அரை மணி நேர தூரத்தில் அமைந்துள்ளது. இது 183 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. கோட்டையில் எட்டு கோயில்களைப் பார்க்கலாம்.
4. மான் பூங்கா:
திருப்பதிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளிடையே மான் பூங்காவும் மிகவும் பிரபலமான இடமாகும். இந்த பூங்கா அழகிய இயற்கை சூழலுக்கு மத்தியில் அதிக எண்ணிக்கையிலான மான்களைக் கொண்டுள்ளது. இங்கே, அழகான மான்களைப் பார்ப்பதோடு மட்டுமல்லாமல், மயில்கள், பறவைகள் மற்றும் பிற விலங்குகளையும் நீங்கள் காணலாம்.