திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தலங்கள்.
திருச்சி மக்களின் மிக முக்கிய ஏக்கமே திருச்சியில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு சுற்றுலா தலங்கள் இல்லை என்பது தான். அதிலும் குறிப்பாக மாநகரப் பகுதிகளில் பொழுதுபோக்கிற்கு எந்தவித பெரிய சுற்றுலா தளமும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதே நேரம் ஸ்ரீரங்கம்,சமயபுரம், வெக்காளியம்மன் கோயில்கள், ரத்தர்ஷா தர்கா, புனித லூர்து அன்னை ஆலயம் போன்ற வழிபாட்டுத்தலங்களே திருச்சி என்றவுடன் நினைவுக்கு வரும் இடங்களாக உள்ளது. திருச்சி மாவட்டத்திலும் திருச்சியை சுற்றி உள்ள பகுதிகளிலும் சூழ்ந்துள்ள மலைகள் திருச்சியினுடைய முக்கிய சுற்றுலா மையங்களாக உள்ளன.
பச்சை மலை, சிறு மலை, கொல்லிமலை, புளியஞ்சோலை நீர்வீழ்ச்சி ஆகியவை பெரிய விளம்பரங்கள் இல்லாத திருச்சிக்கு அழகு சேர்க்க முக்கிய இயற்கையின் அங்கமாக உள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொல்லிமலை அதன் ஆபத்தான ஹேர்பின் பெண்டுகளால் 'மௌண்டெயின் ஆஃப் டெத்' என அழைக்கப்படுகிறது. திருச்சியில் இருந்து 100 கிமீ தொலைவில் அமைந்துள்ள கொல்லிமலையில் பல அழகிய நீர்வீழ்ச்சிகள், பள்ளத்தாக்குகள், வியூபாயின்ட்கள் ஆகிய முக்கிய இடங்களை கொண்டுள்ளது. கொல்லி மலைக்கு அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் வராததால் கொல்லிமலையின் இயற்கை அழகு இன்னும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
கிழக்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள பச்சைமலை, திருச்சியிலிருந்து 100 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. அடர்ந்த சிறு சிறு மலைகள், அடர்த்தி நிறைந்த மரங்கள், விலங்குகள், பறவைகள் மற்றும் பட்டாம்பூச்சிகளின் கூட்டம் என்று கடல் மட்டத்திலிருந்து 2,400 அடி உயரத்தில் அமைந்துள்ள பச்சை மலையில் எப்பொழுதுமே ஒரு மிதமான வானிலை நிலவுகிறது. இதனால் பச்சை மலையில் ட்ரெக்கிங் வருபவர்களுடைய எண்ணிக்கை அதிகம்.
திருச்சியிலிருந்து 136 கிமீ தொலைவில் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது சிறுமலை. இது பலராலும் அறியப்படாத இடமாகும். இயற்கை எழில் சூழ்ந்த சிறுமலையில் பல சிறிய நகரங்கள் அமைந்துள்ளன. மேலும் இந்த மலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளினுடைய எண்ணிக்கை அதிகப்படுத்த தமிழ்நாடு சுற்றுலாத் துறை மூலமாக பல பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருச்சி மாவட்டம் துறையூரில் அமைந்துள்ள புளியஞ்சோலை அமைதியான மலைப் பகுதியாகும். கொல்லிமலை அடிவாரத்தில் புளியஞ்சோலையில் காணப்படும் நீரூற்றுகள் முக்கிய சுற்றுலா தலமாகும். மேலும் புளியஞ்சோலையில் மலைகளுக்கு நடுவே ஓடு ஆறுகள் மூலிகை ஆறு என்று சொல்லப்படுகிறது.