உலகின் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அவர்களுக்கான உணவு ,உடை, உறைவிடம் போன்ற இன்றியமையாத தேவைகளும் பற்றாக்குறையாகவே இருக்கின்றன.
இட நெருக்கடியை குறைக்கும் வகையில் உருவாக்கப் பட்டவைதான் தனி வீடு என்பதற்கு மாற்றான அடுக்குமாடி குடியிருப்புகள். அந்த வகையில் உலகில் அதிக மக்கள் வாழும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பை பற்றிய பதிவை காண்போம்.
ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்கின் அருகில் அமைந்துள்ளதுதான் ஹூமன் அந்தில் (Human Anthill) என அழைக்கப்படும் கட்டடம். இந்தக் கட்டிடத்தில் சுமார் 20,000 பேர் வசிக்கும் வசதி உள்ளது .மேலும், உலகின் அதிக மக்கள் குடியிருக்கும் கட்டடம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. ரஷ்யாவில் அமைந்துள்ள இந்த கட்டடத்தில், 3,708 அடுக்குமாடிக் குடியிருப்புகள் உள்ளன.
குடியிருப்புகள் அனைத்துமே இரண்டு படுக்கை அறை வசதி கொண்டவையாகும் .இந்தக் கட்டடத்திற்கு 35 வாசல்களையும் , 25 தளங்களையும் அமைத்துள்ளனர். ஒவ்வொரு தளத்திலும், நான்கு முதல் ஆறு குடியிருப்புகள் உள்ளன. அத்துடன், ஒவ்வொரு பகுதியிலும் வேகமாக பயணிக்கும் நான்கு லிஃப்ட்களும் உள்ளன.
இந்த கட்டடத்தின் மற்றொரு சிறப்பு அம்சம் என்னவென்றால், இந்தக் கட்டடத்தின் முதல் தளம் முழுவதுமே கடைகள், தொழில்கள், வர்த்தக நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், கடைவீதியில் ஷாப்பிங் செய்யும் அனுபவம்போல ஒரு நகரமாகவே காட்சியளிக்கிறது.
அந்த தளத்தில் மட்டும் ஏழு உணவகங்களும் , மூன்று அழகு நிலையங்களும், ஒரு சிறார் பள்ளியும் செயல்படுகின்றன. இதைத்தவிர பல காஃபி ஷாப்களும் ஒரு தபால் நிலையமும் கூட உள்ளது . ஆரோக்கிய மேம்பாட்டிற்காக உடற்பயிற்சி கூடம் முதலான அனைத்து வசதிகளும் கட்டிடத்திலேயே இருக்கின்றன.
அந்த கட்டடத்தில் ஒருவர் குடியேறிவிட்டால் ஆறு மாதங்களுக்கு வெளியில் செல்வதற்கான அவசியமே ஏற்படாது என்பதுதான் அங்கு குடியிருப்போரின் கருத்தாக உள்ளது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த பல வசதிகள் கொண்ட இந்த கட்டிடத்தில் உள்ள இரண்டு படுக்கையறை கொண்ட ஒரு குடியிருப்பின் விலை சுமார் 76 ஆயிரம் பவுண்டுகள் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.
இந்தக் கட்டுரையைப் படித்ததும் ரஷ்யாவிற்கு சென்றால் ஒருமுறை இந்த குடியிருப்பை பார்க்க வேண்டும் என்ற ஆவல் தோன்றுவது இயற்கைதான்.