

உலகிலேயே அதிக ரயில்களை இயக்கும் நாடு எந்த பெருமையை இந்தியா பெற்றுள்ளது. அதைத் தவிர, உலகின் அதிக மக்கள் ரயில் வசதியை பயன்படுத்துவதும் இந்தியாவில்தான். ரயில் பெட்டியின் வெளியில் H, A,B,C,D, M, S என்ற எழுத்துக்கள் பெரியதாக எழுதப்பட்டிருக்கும். இந்த குறியீடுகள் நாம் ஏறக்கூடிய பெட்டிகளை நினைவில் வைத்துக்கொள்ள என்று நாம் நினைக்கலாம்.
உண்மையில் ரயில்வே நிர்வாகம் பெட்டிகளின் வசதிக்கேற்ப எழுத்துக்களை வைத்து வகுப்புகளை பிரித்துள்ளது. நாம் ரிசர்வ் செய்யும்போதே, நாம் விரும்பிய வசதிக்கேற்ப டிக்கட்டில் இந்த குறியீடுகளும் அச்சிடப்பட்டு வழங்கப்படுகின்றன. இதை வைத்து நாம் பயணம் செய்யும் கோச்சின் வசதிகளை அறிந்துக் கொள்ளலாம்.
H - முதல் வகுப்பு ஏசி:
இரயில் பெட்டியில் H எழுத்து எழுதப்பட்ட பெட்டி, படுக்கை வசதிக் கொண்ட முதல் வகுப்பு ஏசியைக் குறிக்கிறது. இந்த பெட்டியில், தனிப்பயன் கதவுகளைக் கொண்ட தனி அறைகள் உள்ளன. இது தனியுரிமையை மற்றும் ஆடம்பரத்தை விரும்புபவர்களுக்கு ஏற்ற வகுப்பாகும். ஒப்பீட்டளவில் பார்த்தால், இதன் விலை விமான டிக்கெட்டின் விலைக்கு சமமாகவோ அல்லது அதிகமாகவோ இருக்கலாம்.
A - இரண்டாவது வகுப்பு AC :
இது படுக்கை வசதி கொண்ட இரண்டாம் வகுப்பு ஏசியை குறிக்கும். இந்த பெட்டியில் மேலே கீழே என்று இரண்டு படுக்கை வசதிகள் கொண்ட இருக்கைகள் இருக்கும். முதல் வகுப்பை போலவே இதிலும் திரைச்சீலை, தலையணைகள், போர்வைகள் உள்ளிட்டவைகளும் வழங்கப்படும். இதன் கட்டணம் முதல் வகுப்பை விட குறைவாக இருக்கும்.
B - முன்றாம் வகுப்பு ஏசி:
ரயிலில் B என்பது ஏசி வசதி கொண்ட மூன்றாம் வகுப்பைக் குறிக்கிறது. இந்த பெட்டியில் மேலே, கீழே, நடுவில் என்று மூன்று படுக்கைகள் அமைக்கப்பட்டிருக்கும். இந்தப் பெட்டியில் திரைச் சீலைகள் இல்லை. இதன் கட்டணம் இரண்டாவது ஏசி வகுப்பை விட மிகவும் குறைவாக இருப்பதால், அதிகம் பேர் விரும்பும் வகுப்பாக இது உள்ளது.
M - மூன்றாம் வகுப்பு ஏசி:
இந்த குறியீடு கொண்ட பெட்டிகள் முன்றாம் வகுப்பு ஏசியை குறிக்கிறது, பொதுவாக எகனாமிக் ஏசி கோச் என்றும் அழைக்கப் படுகின்றன. இதில் இருக்கைகளின் எண்ணிக்கை மூன்றாவது வகுப்பு ஏசியை விட அதிகமாக உள்ளது. இதில் படுக்கை அமைப்புகள், ஏசி வசதியற்ற ஸ்லீப்பர் கோச்சில் இருப்பதை போன்றுதான் இருக்கும். ஸ்லீப்பர் கோச்சை விட சிறிய அளவுதான் விலை அதிகம் என்பதால் பெரும்பாலன மக்களின் தேர்வாக இது உள்ளது.
S - ஸ்லீப்பர் கோச்:
இது படுக்கை வசதி கொண்ட, ஏசி இல்லாத இரண்டாம் வகுப்பு பெட்டியை குறிக்கிறது. ரயிலில் ரிசர்வ் செய்யும் பயணிகளின் முதல் தேர்வாக இந்த பெட்டியே இருக்கிறது. குறைந்த விலையில் எளிமையான பயணம் செய்ய சிறந்த தேர்வாக இது இருக்கிறது. எப்போதும் இந்த பெட்டியில் ரிசர்வ் செய்வது கடினமாக இருக்கிறது.
C - ஏசி இருக்கை வகுப்பு:
இந்த பெட்டிகளில் ஏசி வசதிகள் இருந்தாலும், படுக்கை வசதிகள் இருக்காது. நடுத்தர தூரம் மற்றும் பகல் நேரப்பயணம் செய்யும் ரயில்களில் மட்டுமே இந்த பெட்டிகள் இணைக்கப்படுகின்றன.
D - இருக்கை வகுப்பு:
இந்த பெட்டிகளில் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கை வசதிகள் மட்டும் இருக்கும். ஆனால், கால் நீட்ட, வசதியாக அமர இது சரியானதாக இருக்காது. முன்பதிவு மட்டுமே இதில் உண்டு என்றாலும் வேறு வசதிகள் இருக்காது. விலையும் மிகக் குறைவாக இருக்கும்.