ரயில் பயணிகளுக்கு உதவும் IRCTC-யின் புதிய விதிமுறைகள்!

IRCTC New Rules
IRCTC New Rules

மத்திய அரசு நிர்வகித்து வரும் இந்திய ரயில் போக்குவரத்தின் துணை நிறுவனமான இந்தியத் தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் (IRCTC) பயணிகளுக்கு பல்வேறு சேவைகளை குறிப்பிட்ட விதிமுறைகளின் கீழ் அளித்து வருகிறது. இதில் பயணிகளுக்கு உதவும் விதிமுறைகளை தெரிந்து கொள்ளலாம் வாங்க!

அனைவரது வாழ்விலும் பயணம் என்பது இன்றியமையாத ஒன்று. தொலைதூரப் பயணத்திற்கு பொதுவாக பேருந்து அல்லது ரயில் போக்குவரத்தைத் தான் பலரும் பயன்படுத்தி வருகின்றனர். ரயில் போக்குவரத்தில் பயணம் செய்ய கட்டணம் குறைவு என்பதாலும், பாதுகாப்புடன் பயணிக்க முடியும் என்பதாலும் நடுத்தர மக்களின் முதல் தேர்வாக ரயில் போக்குவரத்து இருக்கிறது. ஆன்லைனில் பயணச்சீட்டு முன்பதிவு, பயணத்தின் போது உணவு வழங்குதல் மற்றும் சுற்றுலா மேலாண்மை போன்ற சேவைகளை IRCTC நிறுவனம் தொடர்ந்து செய்து வருகிறது.

இரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்துக் காணப்படுவதால், பயணச்சீட்டு வாங்க அவ்வப்போது நீண்ட வரிசை உருவாகிறது. இதனைக் கருத்தில் கொண்டு பயணிகளின் சிரமத்தைக் குறைக்க முன்பதிவில்லாத பயணச்சீட்டுகளை இணையத்தில் வழங்க UTS என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியது. இந்த செயலி குறித்து பயணிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இதில் பயணச்சீட்டு எடுத்தால் 5% கேஷ்பேக் ஆஃபரையும் அளித்தது. ஆனால் இதில் ஒரு சிக்கல் இருந்தது. ரயில் நிலையத்தில் இருந்தோ அல்லது ரயில் நிலையத்திற்கு உட்பட்டு குறிப்பிட்ட சுற்றளவில் இருந்தால் மட்டுமே UTS செயலியில் பயணச்சீட்டை எடுக்க முடியும். இதனால், இந்த செயலியின் பயன்பாடு அதிகரிக்கவில்லை.

இந்நிலையில், இதில் ஒரு புதிய திருத்தத்தை IRCTC நிறுவனம் கொண்டு வந்துள்ளது. அதன்படி, நீங்கள் எங்கு இருந்தாலும் புறநகர் ரயில் பயணச்சீட்டு மற்றும் முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில் பயணச்சீட்டுகளை UTS செயலியில் எடுக்க முடியும். இந்த புதிய விதி அமலுக்கு வந்து இருப்பதால் இனி பயணிகள் பயணச்சீட்டு எடுப்பதில் எந்தவித சிரமத்தையும் சந்திக்க மாட்டார்கள்.

IRCTC-யின் சமீபத்திய விதிமுறைகள்:

IRCTC புதிய விதிப்படி ஏசி பெட்டியில் 150 கிலோ வரையிலும், ஸ்லீப்பர் பெட்டியில் 80 கிலோ வரையிலும், இரண்டாம் வகுப்பு பெட்டியில் 70 கிலோ வரையிலும் பயணிகள் தங்களது லக்கேஜை எடுத்துச் செல்லலாம். இதற்கு முன்பு இருந்ததை விட இப்போது இருமடங்கு உயர்ந்திருக்கிறது லக்கேஜின் அளவு.

இதையும் படியுங்கள்:
ரயில் பயணமா? முதல்ல இதையெல்லாம் தெரிஞ்சுக்கங்க!
IRCTC New Rules

பயணிகள் இரவுப் பயணித்தில் நிம்மதியாக உறங்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு, ரயிலில் பொருத்தப்பட்டிருக்கும் இரவு விளக்கைத் தவிர்த்து மற்ற விளக்குகளை பயன்படுத்தக் கூடாது என IRCTC அறிவித்துள்ளது. இதில் மொபைல் டார்ச்சும் அடங்கும். மேலும் இரவு 10 மணிக்கு மேல் பயணிகள் சத்தமாக பேசவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இரவு 10 மணியிலிருந்து காலை 6 மணி வரை பயணச்சீட்டு பரிசோதனை செய்யக்கூடாது என பயணச்சீட்டு பரிசோதகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது IRCTC. இரவு 10 மணிக்கு மேல் பயணிக்கும் பயணிகளுக்கு இந்த விதி பொருந்தாது.

மொபைல் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், பயணத்தின் போது இரவில் சத்தமாக பாட்டு கேட்பதை தடை செய்துள்ளது IRCTC.

இரவு 10 மணிக்கு மேல் ஆன்லைன் உணவு சேவைகள் உணவை வழங்கக் கூடாது. இருப்பினும் பயணிகள் முன்கூட்டியே ஆர்டர் செய்து உணவைப் பெற்றுக் கொள்ளலாம்.

ரயில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேல் தாமதமாக வந்தால், முன்பதிவு செய்த பயணிகளுக்கு இலவசமாக உணவு வழங்கப்படும். மேலும் டீ, பிஸ்கட் மற்றும் ஸ்நாக்ஸ் போன்றவையும் வழங்கப்படும். குறிப்பாக துரந்தோ, சதாப்தி அல்லது ராஜ்தானி போன்ற ரயில்கள் வரத் தாமதமானால் பயணிகள் இந்தச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com