

கர்நாடகாவில் பத்ரா நதிக்கரையில் அமைந்துள்ள அழகிய நகரமான கலசா, தட்சிண காசி என்று அழைக்கப்படுகிறது. இந்நகரின் இயற்கை அழகு மற்றும் பல நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரியங்களுக்காக போற்றப்படுகிறது.
கலசேஸ்வரரின் வருடாந்திர விழாக்கள் மற்றும் பூஜைகளில் முக்கிய பங்கு வகிக்கும் கலசாவின் பஞ்ச தீர்த்தங்கள், கலசாவின் மையத்தில் இந்த 5 புனித தீர்த்தங்களும் உள்ளன. அம்பா தீர்த்தம், நாக தீர்த்தம், ருத்ர தீர்த்தம், வசிஷ்ட தீர்த்தம் மற்றும் கோடி தீர்த்தம் ஆகிய ஐந்து புனித நீர்களைக் கொண்ட பஞ்ச தீர்த்தம் உள்ளது.
ஆன்மீகப் பயணத்தில் இந்த பஞ்ச தீர்த்த யாத்திரை என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதேபோல் இயற்கை ஆர்வலர்களுக்கும் இங்குள்ள நீர்வீழ்ச்சிகள், நதிக்கரை காட்சிகள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அழகை கண்டு ரசிக்க முடிகிறது.
காபி தோட்டங்கள் மற்றும் அடர்ந்த காடுகளால் செழித்து விளங்கும் இந்த கலசா நகரம் அதன் கலாச்சார மற்றும் ஆன்மீகத்திற்கு பெயர் பெற்றது. இங்குள்ள பத்ரா நதி இந்த ஊரை மிகவும் வளமாக வைத்துள்ளது. ஆன்மீகத்தையும் அமைதியையும் தேடும் எவருக்கும் கலசா நகரம் மிகவும் ஏற்றது.
இந்து புராணக்கதைகளுடன் தொடர்புடைய இந்த ஐந்து புனித நீர்நிலைகளும் நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தி, தோஷங்களைப் போக்கி மன அமைதியைத்தரும் ஒரு இடமாக கருதப்படுகிறது. மழைக்காலங்களில் பத்ரா நதியில் நீரோட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், தீர்த்தங்களுக்குச் செல்லும்பொழுது உள்ளூர் மக்களின் வழிகாட்டுதலோடு செல்ல வேண்டியது அவசியம்.
மன அமைதி தரும் கலசா தீர்த்தங்கள் மற்றும் அதன் வரலாற்றுப் பின்னணி
அம்பா தீர்த்தம்:
கலசாவிலிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் ஹொரநாடு செல்லும் சாலையில் அமைந்துள்ள இது அம்பா என்று அழைக்கப்படும் பார்வதி தேவியின் பெயரால் அழைக்கப்படுகிறது. பார்வதி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த அம்பா தீர்த்தத்தில் நீராடி, கலசாவில் உள்ள புகழ்பெற்ற கலசேஸ்வரர் கோவிலை தரிசிப்பது காசிக்கு நிகரான புண்ணியத்தைத் தரும் என்று நம்பப்படுகிறது. அடர்ந்த காபி தோட்டங்கள், பசுமையான காடுகள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையின் பின்னணியில் பத்ரா நதி இங்கு பாய்வது கண்கொள்ளாக் காட்சியாகும். இங்குள்ள நீர்ச்சுழிகள் ஆபத்தானது என்பதால் குளிக்கும்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
நாக தீர்த்தம்:
நாகக்கடவுளின் இருப்பிடமாக கருதப்படும் இந்த தீர்த்தம் கலசேஸ்வரர் கோயிலிலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கிரிஜ கல்யாண தட்சகத்தின் போது, வாசுகி மற்றும் பிற பாம்புகளுக்கு இங்கு தங்குமிடம் வழங்கப்பட்டதால் இப்பெயர் வந்துள்ளது. இங்குள்ள தீர்த்தத்தில் நீராடினால் திருமணத்தடை, நாக தோஷம் ராகு கேது தோஷங்கள் விலகும் என்று நம்பப்படுகிறது.
மேலும் விஷக்கடி தொடர்பான நோய்களும் தீரும் என்பது மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. கலசேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் புகழ்பெற்ற தேரோட்டம் மற்றும் கிரிஜா கல்யாணம் திருவிழாக்களின் பொழுது சுவாமியின் ஊர்வலம் இந்த 5 தீர்த்தங்களுக்கும் கொண்டுவரப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்வது வழக்கம்.
வசிஷ்ட தீர்த்தம்:
பத்ரா நதியின் மறுகரையில் கலசேஸ்வரர் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ள இந்த வசிஷ்ட தீர்த்தம், சப்தரிஷிகளில் ஒருவரான வசிஷ்ட முனிவர் இங்கு தியானம் செய்ததாக நம்பப்படுகிறது. இதற்கு அருகில் உள்ள தொங்கு பாலத்திலிருந்து நதியையும், பள்ளத்தாக்கின் பரந்த காட்சிகளையும் காணமுடியும்.
அருகிலேயே வசிஷ்ட ஆசிரமம்/குகை, பைரவர் கோவில் மற்றும் கணபதி கோவில் ஆகியவையும் உள்ளன. வசிஷ்ட முனிவரால் உருவாக்கப்பட்டதாக நம்பப்படும் இந்த தீர்த்தத்தில் நீராடுவது பாவங்களைப்போக்கி மன அமைதியைத்தரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.
ருத்ர தீர்த்தம்:
பஞ்ச தீர்த்த சுற்றுப்பாதையில் உள்ள மிக முக்கியமான நீர்நிலைகளில் ஒன்றான இது சிவபெருமானான ருத்ரனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தீர்த்தமாகும். ருத்ர தீர்த்தம் என்பது காலபா மகரிஷி தவம் செய்த இடமாகும். இங்கு பித்ருக்களுக்கு திதி அல்லது பிண்டம் கொடுப்பது காசி மற்றும் கயாவிற்கு இணையான பலனை தரும் என்பது ஐதீகம்.
சிவபெருமானை மகிழ்விப்பதற்காக 11 ருத்திரர்கள் தவம் செய்த இடம் இது என்று நம்பப்படுகிறது. இங்கு ஒரு சிவலிங்கம், நந்தி மற்றும் பாத தடங்களைக் காண முடியும். சிவன் தோன்றி ருத்திரர்களுக்கு முன்னால் நின்ற இடத்தில் தான் இந்தப் பாதத் தடங்கள் காணப்படுகின்றன.
கோடி தீர்த்தம்:
10 லட்சம் புனித நீர்களைக் கொண்ட புனித ஏரி என்று போற்றப்படும் இந்த கோடி தீர்த்தத்தில் புனித நீராடுவதும் பூஜைகள் செய்வதும் வழக்கம். இந்த தீர்த்தத்தில் நீராடுவது கோடி புண்ணிய நதிகளில் நீராடுவதற்கு சமமாக கூறப்படுகிறது.
அகத்தியர் கலசாவில் இருந்தபடி சிவபெருமானின் திருமணக் கோலத்தைக்காண, அகத்தியருடன் சேர்ந்து இந்த அற்புதமான நிகழ்வை காண்பதற்காக கோடிக்கணக்கான தேவர்களும், முனிவர்களும் இந்த நதிக்கரையில் வந்து திரண்டனர்.
இப்படி கோடிக்கணக்கான தேவர்கள் கூடிய புனித இடம் என்பதால் இதற்கு 'கோடி தீர்த்தம்' என்றும், இந்த நதிப் பகுதிக்கு 'கோடிஹொளே' (Koti hole) என்றும் பெயர் வந்தது.
கலசா நகரம் சிக்மகளூரிலிருந்து சுமார் 92 கி.மீ. தூரத்திலும், மங்களூரிலிருந்து சுமார் 110 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது. அக்டோபர் முதல் மார்ச் வரையிலான மாதங்கள் இப்பகுதியைச் சுற்றிப் பார்க்க மிகவும் உகந்தவை.
தோஷ நிவர்த்திக்கான பரிகாரத் தலங்களைத் தேடுபவர்களுக்கு இந்தத் தொகுப்பு ஒரு வரப்பிரசாதம். நாக தோஷம், திருமணத் தடை போன்ற பிரச்சனைகளுக்கு ஆன்மீக ரீதியான தீர்வை வழங்குவதோடு மட்டுமல்லாமல், வாரயிறுதியில் உங்கள் மன அழுத்தத்தை போக்கி, இயற்கையோடு இணைந்து புத்துணர்ச்சி பெறுவதற்கான ஒரு முழுமையான பயணத் திட்டத்தை நீங்கள் இதன் மூலம் உருவாக்க முடியும்.