
கோடை விடுமுறைக்கு எங்கேயாவது செல்லவேண்டும் என்று முடிவு செய்தவுடன் மனதில் தோன்றிய இடம் காஷ்மீர். நானும் நண்பர்கள் சிலரும் சேர்ந்து காஷ்மீர் பயணத்திற்காக திட்டமிடத் தொடங்கினோம். ஒன்பது பேர்கள் கொண்ட ஒரு குழுவாக நாங்கள் டெல்லி வழியாக ஸ்ரீநகர் செல்வது என்று முடிவு செய்தோம். தெரிந்தவர்கள் காஷ்மீருக்கா செல்கிறீர்கள்? என்று கேட்டு பயமுறுத்தினார்கள்.
ஆனால், இதற்கு முன்னால் காஷ்மீர் சென்று வந்த எங்கள் நண்பர்கள் சிலர் சுற்றுலா பயணிகளுக்குக் காஷ்மீர் மிகச்சிறந்த இடம் என்றும் வாழ்க்கையில் ஒரு முறையாவது நிச்சயம் காஷ்மீருக்குச் சென்று வரவேண்டும் என்றும் உற்சாகப்படுத்தினார்கள். எனவே, நாங்கள் காஷ்மீர் செல்வதை உறுதி செய்துகொண்டோம்.