
அடுத்தநாள் காலை ஒன்பது மணிக்கு எங்கள் பயணம் தொடங்கியது. சோன்மார்க் என்ற ஒரு பனிப்பிரதேசத்திற்குச் செல்லப்போவதாக எங்கள் டிரைவர் தெரிவித்தார். சோன்மார்க் ஸ்ரீநகரிலிருந்து சுமார் 81 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் இங்கே பனிமலைகளைப் பார்த்து மகிழலாம்.
சோன்மார்க் லடாக்கின் நுழைவாயில். இந்தப் பகுதியில் சிந்து நதி பாய்கிறது. இப்பகுதிகளில் பைன் மரங்கள் நீண்டு வளர்ந்துள்ளன. சரியான சீசன்களில் இப்பகுதிகளில் உள்ள மலைகள், மரங்கள் போன்றவை பனிகளால் மூடப்பட்டு வெள்ளை வெளேரென்று காட்சி அளிக்கின்றன.
அமர்நாத் யாத்திரை செல்ல வேண்டுமென்றால் சோன்மார்க் வழியாகத்தான் செல்ல வேண்டும். இங்கிருந்து சுமார் 145 கிலோமீட்டர் தொலைவில் அமர்நாத் அமைந்துள்ளது. ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் அமர்நாத் யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. இந்தப் பகுதியில் கிருஷ்ணாசார் மற்றும் விஷான்சார் நதிகள் காணப்படுகின்றன.