
அடுத்தநாள் பஹல்காம் பயணம். ஸ்ரீநகரிலிருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. சமவெளிப்பயணம். சுமார் இரண்டு மணி நேரப் பயணத்திற்குப் பின்னால் பஹல்காமை நெருங்கினோம். பஹல்காமை அடைவதற்கு முன்னாலேயே ஏராளமான அளவில் பனி மழை கொட்டத் தொடங்கிவிட்டது. இங்கேயே இப்படி என்றால் பஹல்காமில் எப்படி இருக்கும் என்று யோசிக்கத் தொடங்கினோம். ஆனாலும் வேறுவழியில்லை. வந்தாயிற்று. எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும் சமாளித்துத்தான் ஆகவேண்டும் என்று முடிவோடு பயணத்தைத் தொடர்ந்தோம்.
சுமார் அரைமணி நேரப் பயணத்திற்குப் பின்னர் பஹல்காமிற்குள் நுழைந்தோம். ஸ்ரீநகரைப் போன்று சற்று பெரிய ஊராகத் தெரிந்தது. ஏராளமான ஓட்டல்கள், நல்ல தங்கும் விடுதிகள் போன்றவை பஹல்காமில் இருந்தன. சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலானோர் இங்கே இரண்டு, மூன்று நாட்கள் தங்கி சுற்றிப் பார்க்கிறார்கள். நாங்கள் சென்ற சமயம் கடும் பனிப்பொழிவு இருந்ததால் பாதைகள் மூடப்பட்டுவிட்டன. இங்கும் குதிரைச்சவாரி இருக்கிறது. குதிரையில் மீது ஏறி அமர்ந்து இங்குள்ள முக்கியமான இடங்களைப் பார்த்து மகிழலாம். இந்தப் பகுதியில் மினி சுவிட்சர்லாந்து அமைந்துள்ளது. பார்ப்பதற்கு வெளிநாடு போலவே காணப்படுகிறது.