
சிறிது தூரம் சென்றதும் கண்களுக்குப் பனியைத் தவிர வேறு எதுவும் தெரியவில்லை. எங்களுடன் வந்த நண்பர்கள், குடும்பத்தினர் யார் யார் எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. அந்த அளவிற்கு எங்கும் வெள்ளை வெளேரென்று பனி வியாபித்திருந்தது. சற்று நேர பயணத்திற்குப் பின்னர் பழைமையான ஒரு சர்ச்சை காண்பித்தார்கள். அருகே செல்ல முடியவில்லை. தொலைவிலிருந்தே சர்ச்சைப் பார்த்தோம்.
கோடைக் காலங்களில் இந்த குல்மார்க் முழுவதும் பச்சைப்பசேலென்று இருக்கும் என்றார்கள். அங்கே ஒரு சிறிய தேநீர் கடை இருந்தது. குளிருக்கு இதமாக ஆளுக்கு ஒரு தேநீர் அருந்தினோம். ஸ்லெட்ஜ் வண்டியை இழுப்பவர்களுக்கு நன்றாக ஓய்வு கொடுத்தோம்.