கூமாப்பட்டி கிராமம்: சுற்றுலா செல்வதற்கு ஏற்ற இடமா?

Koomapatti island Village
Koomapatti island Village
Published on

Koomapatti island: கூமாபட்டி என்பது தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள மிகவும் அழகான கிராமமாகும். இது வத்திராயிருப்புக்கு 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கூமாபட்டி கிராமத்தில் நெல் விவசாயம் அதிகமாக நடைபெறுகிறது.

கூமாப்பட்டி கிராமத்தில் பார்க்க வேண்டிய இடங்கள்:

1) பிளவக்கல் அணை:

பிளவக்கல் அணை இயற்கையோடு இணைந்த மிக அழகான இடம். கூமாப்பட்டிக்கு அருகில் அமைந்துள்ள இந்த அணை மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இயற்கை அழகை ரசிக்கவும், அமைதியான சூழலை உணரவும் ஏற்ற இடம். 2002 ஆம் ஆண்டு 20 லட்சம் ரூபாயில் கட்டப்பட்ட இந்த அணை கம்பீரமாக காட்சி தருகிறது. விருதுநகரில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இங்கு படகு சவாரியும், குழந்தைகள் பூங்காவும் உள்ளது. விடுமுறை நாட்களில் அமைதியாகவும் சந்தோஷமாகவும் பொழுதை போக்க ஏற்ற இடமாக உள்ளது.

2) சுப்பிரமணிய சுவாமி கோவில்:

கூமாப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள இக்கோவிலில் நினைத்ததை நிறைவேற்றும் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளியுள்ளார். வத்திராயிருப்பு நகரிலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மிகப் பழமையான கோவிலாகும். இங்கு கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் போன்ற திருவிழாக்கள் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன.

3) முத்தாலம்மன் கோவில்:

கூமாப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பிரபலமான முத்தாலம்மன் கோவில் இது. இங்குள்ள அம்மனுக்கு ஒவ்வொரு ஆண்டும் மழை வேண்டி தேர் திருவிழா நடத்துவது பாரம்பரிய வழக்கமாகும்.

4) சப்பானி முத்தையா கோவில்:

கூமாப்பட்டியில் உள்ள சப்பானி முத்தையா கோவில் என்பது ஸ்ரீ ஆறுமுகப்பெருமானின் கோவிலாகும். இங்கு மாசி திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும்.

5) காசு கடை பஜார் சந்தைகள்:

இங்கு ஒட்டுமொத்த விருதுநகரின் பொருட்களையும் குவித்து வைத்து விற்பனை செய்யும் இடமாக உள்ளது.

6) வத்திராயிருப்பு:

விருதுநகர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியான வத்திராயிருப்பு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. குறிப்பாக வத்திராயிருப்பு, கூமாப்பட்டி, தம்பிபட்டி, கான்சாபுரம், நெடுங்குளம் போன்ற பகுதிகளில் நெல் விவசாயம் அதிகமாக நடந்து வருகிறது. இங்கு 4 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. என்கூமாபட்டி கிராமத்திற்கு அருகில் உள்ள முக்கியமான ஊர் இது. இங்கு நெல் கொள்முதல் நிலையம் உள்ளது.

கிராமத்திற்கு அருகில் உள்ள சிறப்பான இடங்கள் சில:

7) செண்பகத் தோப்பு அணில் சரணாலயம்:

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள செண்பகத் தோப்பு வனப் பகுதியில் 480 சதுர கிலோமீட்டர் பரப்பில் இந்த சரணாலயம் உள்ளது. 'நரை அணில்' என்று சொல்லப்படும் சாம்பல் நிற அணில்கள் இங்கு காணப்படுகிறது. இந்த அணில்கள் சாம்பல் நிற முதுகுப் பகுதியுடன் இளம் சிவப்பு மூக்கு, அடர்த்தியான முடியுடன் கூடிய நீண்ட வால் என மிக அழகாக உள்ளது. பாலூட்டி இனத்தைச் சேர்ந்த இவை காடுகளில் உள்ள புளிய மரங்கள் மீது ஓணான் கொடிகளைக் கொண்டும், காய்ந்த குச்சிகளைக் கொண்டும் கூடு கட்டி வாழ்கின்றன. அழிந்து வரும் உயிரினங்களில் ஒன்றான இவற்றை பாதுகாக்கும் நோக்கில் இந்த சரணாலயம் 1989இல் உருவாக்கப்பட்டது. இங்கு நரை அணில்கள் மட்டுமல்ல வேங்கைப்புலி, சிறுத்தை, புள்ளிமான், சிங்கவால் குரங்கு, லாங்கூர், சோலை மந்தி, கருமந்தி, தேவாங்கு, பறக்கும் அணில் ஆகியவையும் உள்ளன.

8) அய்யனார் அருவி:

அய்யனார் அருவி என்று அறியப்படும் இது விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் அருகே உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையின் கிழக்கு சரிவுகளில் அமைந்துள்ளது. அருவி நீர் மிகவும் தூய்மையானதாகவும், குடிநீர் மற்றும் விவசாயத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. காட்டுக்குள் அமைந்திருக்கும் இந்த அருவி காட்டுயிர் புகைப்பட கலைஞர்கள் மிகவும் விரும்பும் இடமாகும். இங்கு தண்ணீர் குடிக்க வரும் குரங்குகள், யானைகள் என பலவிதமான விலங்குகளையும் காணலாம். சுற்றுலாப் பயணிகள் மலையேற்றம் செல்ல விரும்பும் இடமாகவும் உள்ளது.

9) சதுரகிரி மலை :

இந்த மாவட்டத்தின் மற்றொரு பிரசித்தி பெற்ற இடம் சதுரகிரி மலைக் கோவில். இறைவன் மீது நம்பிக்கை, நாட்டம் இல்லாதவர்கள் கூட மன அமைதியை பெறுவதற்காக இந்த இடத்திற்கு வரலாம். மூலிகைச் செடிகள் நிறைந்த வனப்பகுதியான இது வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மலையின் மேல் மகாலிங்கம், சுந்தரமூர்த்தி லிங்கம், சந்தன மகாலிங்கம், இரட்டை லிங்கம், காட்டு லிங்கம் போன்றவை அமைந்துள்ளன.

10) சஞ்சீவி மலை:

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையத்துக்கு அருகிலுள்ள இந்த சஞ்சீவி மலை இராமாயணத்தில் வரும் சஞ்சீவி மலையின் ஒரு பகுதி என்று நம்பப்படுகிறது. இங்கு 3000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன. இவை வெண்சாந்து கொண்டு வரையப்பட்டுள்ளது. சஞ்சீவி மலையின் அடிவாரத்தில் முதுமக்கள் தாழிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com