meta property="og:ttl" content="2419200" />
அனல் தெறிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க ஜில்லென்ற குளிர்ந்த காற்று வீசும் இடத்துக்குப்போக ஆசையா? இப்பொழுதே பேக் பண்ணுங்கள் இந்த மலைவாச ஸ்தலத்திற்கு.
வருடம் முழுவதும் குளிரில் நம்மை நடுங்க வைக்கும் இடம் ஒன்றுண்டு என்றால் அது தமிழ்நாடு கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ராமக்கல்மேடு என்ற இடமாகும். இது இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள மலைவாசஸ்தலமாகும். தேக்கடியிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கேரளாவின் பிரபலமான மலை வாசத்தலங்களில் இதுவும் ஒன்று.
இங்கு அனைத்து பருவ காலங்களிலும் ஆண்டு முழுவதும் மணிக்கு 35 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசிக் கொண்டே இருப்பதால் வெயிலின் கடுமை நமக்கு சிறிதும் தெரியாது.
உலகின் உயரமான சிகரங்களில் ஒன்றான ஆனைமுடி சிகரம் மற்றும் உலகிலேயே இரண்டாவது பெரிய வில்லணை ஆகியவற்றை கொண்டுள்ள இடுக்கி மாவட்டத்தில் ராமக்கல்மேடு கேரளா பூமியின் வனப்பையும், தமிழ்நாட்டின் அழகையும் ஒருசேர ரசிக்க கூடிய இடமாக அமைந்துள்ளது. ராமக்கல் மலைப்பகுதி 18 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்டது. செல்லும் வழி எங்கும் பசுமை நிறைந்த காப்பி, தேயிலைத் தோட்டங்கள். இது மேற்கு தொடர்ச்சி மலையில் கடல் மட்டத்திலிருந்து 3500 அடி உயரத்தில் உள்ளது.
மலை உச்சியில் உள்ளூர் பழங்குடியினரான குறவன் குறத்தியின் பெரிய சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன. இவை சிற்பமாக வடிவமைக்கப்பட்டு 2005இல் அமைக்கப்பட்டது.
இந்த இடத்திலிருந்து பார்த்தால் கம்பம், தேனி, உத்தமபாளையம், போடிநாயக்கனூர் போன்ற தமிழக கிராமங்கள் மற்றும் நகரங்களின் அழகான காட்சியை பார்க்க முடிகிறது.
ஒரு நாள் பட்ஜெட் சுற்றுலாவுக்கு ஏற்ற சிறந்த இடம் இது.
பெயர் காரணம்:
ராமர் வனவாசத்தின்போது சீதை இராவணனால் கடத்தப்பட்டதும் அப்போது ராமன் சீதையைதேடி அலைந்தபோது ராமக்கல்மேட்டின் உச்சியில் கால் பதித்து சீதையை தேடியதாகவும் அதனால் இந்த மலைக்கு ராமக்கல்மேடு என பெயர் வந்ததாகவும் நம்பப்படுகிறது.
ஆமைப்பாறை, ஆமைப்பாறை ஜீப் சஃபாரி, தூவல் நீர்வீழ்ச்சிகள், தேயிலைத் தோட்டங்கள், தவளைப் பாறை, காற்றாலைப் பண்ணை, திராட்சை பண்ணை, கேரளாவின் மிக உயரமான இரட்டை சிலையான குறவன் குறத்தி சிலை என்று நிறைய இடங்கள் நம் கண்களையும் எண்ணத்தையும் கவரும் வகையில் அமைந்துள்ளது
ஆசியாவிலேயே அதிக காற்று வீசும் இடங்களில் இதுவும் ஒன்று என்பதால் அரசுக்கு சொந்தமான மின்சாரம் தயாரிக்கும் காற்றாலை இங்குள்ளது. சுற்றிலும் பசுமை போர்த்திய மலைகள் கொண்ட அழகிய சுற்றுலாத்தலம் என்பதுடன் சிறந்த மலையேற்றத்திற்கும் பிரபலமானது.