பயணம் செய்வதற்கு அமெரிக்காவை விட பாதுகாப்பான நாடு இந்தியா என்றதும் நமக்கு பெருமிதம் வரலாம். ஆனால், இந்தியாவை விட பாகிஸ்தான் பாதுகாப்பான நாடு என்னும் போது நமக்கு அதிர்ச்சியும் ஏற்படும்.செர்பிய கூட்ட தரவு தளமான நம்பெரோ, 2025 ஆம் ஆண்டிற்கான சுற்றுலா பயணிகளுக்கு அதிக பாதுகாப்பு உள்ள நாடுகளை தர வரிசைப்படுத்தியுள்ளது. பார்வையாளர்கள் மூலம் கணக்கெடுப்பு நடத்தி தரவரிசை வெளியிட்டுள்ளது. இந்த தரவரிசை 146 நாடுகளின் ஒட்டுமொத்த குற்ற அளவை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிட்டுள்ளது. இந்த ஆய்வுகள் ஒரு நாட்டில் குற்ற அளவுகளையும் பாதுகாப்பையும் வைத்து முடிவு செய்துள்ளது.
உலகின் பாதுகாப்பான முதல் 10 நாடுகளின் பட்டியல்
1. அன்டோரா (84.7)
2. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (84.5)
3. கத்தார் (84.2)
4. தைவான் (82.9)
5. ஓமன் (81.7)
6. ஐஸ்ல் ஆஃப் மேன் (79.0)
7. ஹாங்காங் (78.5)
8. ஆர்மீனியா (77.9)
9. சிங்கப்பூர் (77.4)
10. ஜப்பான் (77.1)
2025 ஆம் ஆண்டில் உலகில் பயணம் செய்வதற்கு பாதுகாப்பான நாடுகளின் தரவரிசையில் இந்தியா 66 வது இடத்தைப் பிடித்துள்ளது.இந்த அறிக்கையின் படி இந்தியாவிற்கு 55.7 பாதுகாப்பு குறியீட்டு மதிப்பெண்ணை வழங்கியுள்ளது. இந்தப் பட்டியலில் பயணம் செய்வதற்கு பாதுகாப்பான நாடுகளின் தரவரிசையில் அமெரிக்கா 89வது இடத்தில் பின்தங்கியுள்ளது.இந்த பட்டியலில் பிரிட்டன் 87 வது இடத்தில் உள்ளது.பயணிகளின் பாதுகாப்பு விவகாரங்களில் இந்தியா, அமெரிக்காவை விட முன்னேறி உள்ளது.
இதில் ஆச்சரியமான விஷயம் பாகிஸ்தான் இந்த பட்டியலில் இந்தியா, அமெரிக்காவை விட முன்னணியில் உள்ளது. குழப்பம் நிறைந்த அமைதியற்ற நிலையில் உள்ள பாகிஸ்தான் நாடு 56.3 என்ற குறியீட்டு மதிப்பெண்ணுடன் 65வது பாதுகாப்பான நாடாக தரவரிசையில் உள்ளது.இதில் 2 வருடங்களாக தீவிரவாதம் மற்றும் போரினால் கடுமையாக பாதிக்கப்பட்ட பாலஸ்தீன் 61வது இடத்தில் உள்ளது. பாலஸ்தீனத்துடன் கடும் போரில் ஈடுபட்டுள்ள இஸ்ரேல் இந்த பட்டியலில் 34 வது இடத்தில் உள்ளது. இந்த சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு தர வாரிசை நாடுகளின் பட்டியலில் கடும் யுத்தத்தில் ஈடுபட்டுள்ள ரஷ்யா 51வது இடத்திலும், உக்ரைன் 80வது இடத்திலும் உள்ளன
உலகின் பாதுகாப்பற்ற முதல் 10 நாடுகள்
1. வெனிசுலா (19.3)
2. பப்புவா நியூ கினியா (19.7)
3. ஹைட்டி (21.1)
4. ஆப்கானிஸ்தான் (24.9)
5. தென்னாப்பிரிக்கா (25.3)
6. ஹோண்டுராஸ் (28.0)
7. டிரினிடாட் மற்றும் டொபாகோ (29.1)
8. சிரியா (31.9)
9. ஜமைக்கா (32.6)
10. பெரு (32.9)
பாதுகாப்பற்ற நாடுகள் பட்டியலில் ஆப்கானிஸ்தான், சிரியா , தென் ஆப்பிரிக்கா போன்ற உள்நாட்டு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட நாடுகள் பின்தங்கி இருந்தாலும் இஸ்ரேல், பாலஸ்தீன், உக்ரைன், ரஷ்யா போன்ற யுத்தத்தில் உள்ள நாடுகள் முன்னணியில் உள்ளது, யோசிக்க வேண்டிய விஷயமாக உள்ளது. அதே நேரத்தில் 3 ஆண்டுகளாக இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் எந்த உள்நாட்டுக் குழப்பங்களும் இல்லை, இந்த நாடுகள் எந்த போர்களிலும் ஈடுபடவில்லை. குற்ற செயல்கள் அமெரிக்காவில் அதிகம் என்றாலும் இந்தியாவிலும் பிரிட்டனிலும் எண்ணிக்கை மிகவும் குறைவு தான். ஆயினும், வரும் காலங்களில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பில் இந்தியா பல உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.