இயற்கையின் காதல் கதை…!

ஐஸ் ஃபீல்ட்ஸ் பார்க்வே...
ஐஸ் ஃபீல்ட்ஸ் பார்க்வே...

வெள்ளை…வெள்ளை… நான் காண்பதெல்லாம் வெள்ளையைத் தவிர வேறொன்றுமில்லை. வெள்ளை முயல் குட்டியின் மிருதுவான ரோமங்களினூடே என்னைத் தொலைத்து விட்டேனோ… தேவதைகளின் ஆடையை நெய்த வெண்ணிற நூலானேனோ... இது விடியல் பொழுதின் விழியோரக் கனவல்ல. இயற்கையின் காதல் கதையில் நனைந்த ஐந்து மணி நேர சாலைப் பயணம்.

மேற்கு கனடாவில் வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்று கேல்கேரி. இங்கிருந்து சாலை வழியாக ஜேஸ்ப்பர் என்னும் பூலோக சொர்க்க நகரத்திற்கு பயணிக்க ஆயத்தமானோம். பரபரப்பான நகரின் எல்லையை பட்டாம்பூச்சிகளாய் கடந்து, பனியை அறுவடை செய்து கொண்டிருந்த குளிர்ந்த வயல்வெளிகளில் பயிர்களாக முளைத்தோம். ஒரு மணி நேர பயணத்திற்கு பின் ‘ஐஸ்ஃபீல்ட்ஸ் பார்க்வே’ என்னும் சொர்க்கவாசல் நம் கண்முன் விரிந்தது.

இருபுறமும் பனிக்கட்டிகளை விழுங்கிவிட்டு படுத்திருந்த ராட்சத அனக்கொண்டா மலைகள். உலகின் மிக அழகான நெடுஞ்சாலைகளுள் ஒன்று இது.

1. மெடிசின் ஏரி (MEDICINE LAKE)

மெடிசின் ஏரி
மெடிசின் ஏரி

ழு கி.மீ. நீளம் கொண்ட இந்த ஏரியைச் சுற்றிலும் காதல் தோல்வியில் தீக்குளித்து எரிந்து முடிந்த தீக்குச்சிகளாக உயர மொட்டை மரங்கள்.

இந்த ஏரியை மறையும் ஏரி என்றும் கூறுகின்றனர். இலையுதிர் காலத்தில் ஏரிக்கு வரும் நீர் அதனடியில் இருக்கும் ரகசிய வடிகட்டி பாதைகள் வழியாக உறிஞ்சப்படுகின்றது.

2. அதபாஸ்கா பனிப்பாறை (Athabasca Glacier)

அதபாஸ்கா பனிப்பாறை
அதபாஸ்கா பனிப்பாறை

ஜேஸ்ப்பர் நகரைச் சென்றடையும் வழியில் சரியாக பாதி தூரத்தில் தரிசனம் தரும் இந்தப் பனிப்பாறை வட அமெரிக்காவில் அதிகமான பயணிகளால் காணப்படுகிறது. இரண்டரை லட்சம் ஆண்டுகளுக்கு முன், உலகின் ‘ஐஸ் ஏஜ்’ காலத்திற்கும் முன் தோன்றிய மூதாதையர் எனலாம். 1500 ஏக்கர்களில் தன் கை கால்களை நீட்டி ஒய்யாரமாக உறங்கிக் கொண்டிருக்கும் இந்தப் பனிப்பாறையை இன்னும் எழுபதாண்டுகளுக்குப் பிறகு புகைப்படங்களில் மட்டுமே காண இயலும்.

கடந்த பத்து ஆண்டுகளாக ஆண்டுக்கு நான்கு முதல் ஆறு மீட்டர் அளவு பனிப்பாறை மறைந்து வருகிறது. 25,000 கிலோ எடையும், ஆறு ‘ஹல்க்’ டயர்களையும் கொண்ட விசேஷ ‘ஐஸ் எக்ஸ்ப்ளோரர்’ பேருந்துகள் கோடை காலத்தில் மக்களை பனிப்பாறையின் உச்சிக்கு அழைத்துச் செல்கிறது. வாழ்வில் ஒரு முறையேனும் இந்த அற்புதத்தை அனுபவிக்க வேண்டும் என்கின்றனர் கனடாவாசிகள்.

இதையும் படியுங்கள்:
பலரும் விரும்பும் பாப்கார்ன் உடலுக்கு நல்லதா?
ஐஸ் ஃபீல்ட்ஸ் பார்க்வே...

3. சன்வாப்தா அருவி (Sunwapta Falls)

சன்வாப்தா அருவி
சன்வாப்தா அருவி

ன்வாப்தா அருவியை ஒட்டிய பாதையில் அதிக பனி இருந்ததால், சறுக்கி விடக்கூடிய அபாயம் இருந்தது. தட்டுத் தடுமாறி ஒரு வழியாக சென்றோம். கைப்பேசியின் ‘வால்பேப்பர்’ புகைப்படமாக சுண்ணாம்பு கருங்கற்களை கவ்விக் கொண்டிருந்த முரட்டு வெண்பனி. அதைத் தகர்க்கும் நோக்கத்துடன் அதன்மீது ஆர்ப்பரிக்கும் தொடுதிரை அருவி.

இயற்கை தன் இஷ்டத்திற்கு கறுப்பு வெள்ளை தூரிகைகளை வீசி ரவிவர்மாவை போட்டிக்கு அழைத்திருந்தது.

4. ஜாஸ்ப்பர் கோளரங்கம் (Jasper Planetarium)

ஜேஸ்ப்பர் கோளரங்கம்
ஜேஸ்ப்பர் கோளரங்கம்

ழக்கமான கோளரங்கக் கட்டிடமாக இல்லாமல், கதகதப்பான கூடாரத்திற்குள் சாய்வு  நாற்காலிகள் கொண்ட சிறிய கோளரங்கமாக இருந்தது. அரை மணிநேர கூரை விண்வெளிப் பயணத்திற்குப் பின், மற்றுமொரு கூடாரத்திற்குள் நுழைந்தோம். கூழாங்கற்களைப் போல் திறந்த கண்ணாடிப் பெட்டிகளுக்குள் சில கற்கள் தனித்தனியாக வைக்கப்பட்டிருந்தன. பார்ப்பதற்கு அப்பாவி பூமிக்கற்களைப் போல் இருந்த அவை, அடப்பாவி என ஆச்சர்யப்படுத்திய சந்திரன் மற்றும் செவ்வாய் கிரக கற்கள். அவற்றை தொட்டுப் பார்த்தபோது ஒரு வகையான சிலிர்ப்பு ஏற்பட்டது.

திறந்தவெளியில் ‘மான் கராத்தே’ முத்திரையோடு  நின்று கொண்டிருந்தது ஒரு பெரிய தொலைநோக்கி. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் தொலைநோக்கி மூலம் வானத்தை சைட் அடிக்கும் பாக்கியம் கிடைக்கவில்லை. உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய இருண்ட வான பராமரிப்புத் தளம் இது. நகரத்தின் ‘லைட் பொல்யூஷன்’ இல்லாத தெளிவான வானத்தை இங்கு காண முடியும். மேகங்கள் சூன்யம் வைக்காமல் இருக்க வேண்டும்.

இப்படியாக இயற்கையோடு பயணித்து அதன் காதல் கதையில் ஓர் அத்தியாயமாக இணைந்தது…’வேற லெவல் சகோ!’

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com