

அடுத்ததாக நாங்கள் சென்ற இடம் சாந்தீபனி ஆசிரமம். மிகவும் அருமையான இடம். மங்கள்நாத் சாலையில் அமைந்துள்ளது இந்த புகழ்பெற்ற சாந்தீபனி ஆசிரமம். இது ஒரு புகழ்பெற்ற வரலாற்று மற்றும் ஆன்மீகத் தலமாகும்.
துவாபரயுகத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், பலராமர் மற்றும் குசேலர் (சுதாமா) ஆகியோர் தங்களின் குருவான மகரிஷி சாந்தீபனியிடம் கல்வி கற்ற புனிதமான இடம் இதுவாகும்.
64 கலைகளை 64 நாட்களில் கற்றவர்கள்:
இப்புனித ஆசிரமத்தில் தங்கி பகவான் கிருஷ்ணர் வெறும் 64 நாட்களில் இங்கு 64 கலைகளையும், 14 வித்தைகளையும் கற்றுத் தேர்ந்ததாக புராணங்கள் கூறுகின்றன. ஞானம் பெற்ற முனிவரான சாந்தீபனியின் வழிகாட்டுதலின் கீழ் இவர்கள் பண்டைய சாஸ்திரங்களின் ஞானத்தைக் கற்றனர்.
புராணங்களின்படி வெறும் 64 நாட்களில், கிருஷ்ணர் போர் நுட்பங்கள் முதல் இசை மற்றும் பிரபஞ்சத்தின் மர்மங்கள் வரை 64 வெவ்வேறு திறன்களில் தேர்ச்சி பெற்றார். இங்கு தான் கிருஷ்ணர் தனது வாழ்நாள் நண்பரான சுதாமரை சந்தித்தார். இது பிற்காலத்தில் நட்பு மற்றும் பக்தியின் நெகிழ்ச்சியான கதையாக உருவெடுத்த ஒரு பிணைப்பை வலுப்படுத்தியது.