

மகாகாளேஸ்வர் பஸ்ம ஆரத்தி முடிந்ததும் காலை டிபன் மற்றும் காபி சாப்பிட்டு விட்டு உடனே ஹர்சித்தி மாதா கோவிலுக்கு புறப்பட்டோம். அர்த்த ராத்திரியில் (1 1/2 மணிக்கு) வெறும் வயிற்றில் பஸ்ம ஆரத்தி பார்ப்பதற்கு சென்றதால் நல்ல பசி எடுத்தது. காபி டிபன் சாப்பிட்டு விட்டு 5 நிமிட நடை பயணத்தில் உள்ள ஹர்சித்தி மாதா கோவிலுக்கு சென்றோம். நல்ல மழை. முழுவதும் நனைந்துவிட்டோம்.
சக்தி பீடம் ஹர்சித்தி மாதா கோவில்:
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் உள்ள ஹர்சித்தி கோவில் இந்தியாவின் பிரசித்தி பெற்ற 51 சக்தி பீடங்களில் ஒன்றாகவும், 18 மகா சக்தி பீடங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. உஜ்ஜயினியில் உள்ள புகழ்பெற்ற மகாகாலேஷ்வர் ஜோதிர்லிங்கத்திற்கு அருகில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. இங்கு சதி தேவியின் முழங்கைப் பகுதி விழுந்ததாக புராணங்கள் கூறுகின்றன.
ஹர்சித்தி மாதா என்பவள் மகாலட்சுமிக்கும் மற்றும் மஹா சரஸ்வதிக்கும் நடுவில் அன்னப்பூரணி தேவி வடிவில் காட்சியளிக்கிறாள். இக்கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. தெற்கு மற்றும் கிழக்கு திசைகளில் நுழைவாயில்கள் உள்ளன. உஜ்ஜயினியின் மிகவும் பழமையான கோவில்களில் இதுவும் ஒன்று.